Friday, September 28, 2007

ரூ.300 கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

இந்தச் செய்தித் துணுக்கைப் படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது! ஏன்னு கேக்கறீங்களா?
சும்மா ஒரு கப்சாவுக்காக கற்பனை பண்ணிப் பாத்துக்குங்க!
திருமலை நாயக்கர், மதுரையில் உங்க தாத்தாவின் தாத்தாவுக்கு, நாலு மாசி வீதியை எழுதி வச்சாரு! அதுனால இப்ப அது எல்லாம் உங்களுக்குத் தான் சொந்தம். அதுனால நீங்க அங்கிட்டு போயி எல்லாரையும் காலி பண்ணச் சொன்னா, உங்களைக் காலி பண்ணுவாய்ங்களா? :-)

அதே சமயம், ஒரு சீரியஸ் டவுட்டு.
பாரதியாருக்கோ, பாரதிதாசனுக்கோ அரசு சார்பில் வழங்கப்பட்ட இடமோ பொருளோ, இன்னும் நாலைஞ்சு தலைமுறைக்குப் பிறகு, இதே கதி தான் ஆகுமா?


காலம் - அதற்குள் எந்த விதியையும் அடக்கும் நண்பர் கோவி கண்ணனைக் கேட்டாக்கா, ஏதாச்சும் விடை கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்! :-)


நன்றி: தினமணி.
நகரி, செப். 29:
திருப்பதி திருமலையில் உள்ள ரூ.300 கோடி மதிப்பிலான அன்னமாச்சார்யாவின் சொத்துக்கள் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


திருமலையில் உள்ள 28.58 ஏக்கர் நிலம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும், அன்னமாச்சார்யா வம்சாவளியினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த வழக்கில் இத்தீர்ப்பு கிடைத்துள்ளது என்று தேவஸ்தானம் சார்பில் வழக்கை நடத்திய முன்னாள் தேவஸ்தான நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையான் மீது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, அவற்றை அரசர்களின் உதவியுடன் ஓலைச் சுவடிகளில் பாதுகாத்து வந்தவர் ஏழுமலையான் பக்தர் தாளபாக்கம் அன்னமாச்சார்யா.
அன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படம் மூலமும் அவரது வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.

இவரது பக்திப் பாடல்களைக் கேட்டு பரவசம் அடைந்த மன்னர் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் திருப்பதி-திருமலையில் 28.58 ஏக்கர் நிலத்தை அன்னமாச்சார்யாவுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அன்னமாச்சார்யா வம்சாவளியை சேர்ந்தவர்கள் அச்சொத்துக்கள் எங்களுக்கு சேர வேண்டும் என்று 1990-ல் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பு அன்னமாச்சார்யா வம்சாவளியினருக்கு சாதகமாக இருந்தது.

அதையடுத்து ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து அன்னமாச்சார்யா வம்சாவளியைச் சேர்ந்த டி.கே. ராகவன் 2007 ஏப்ரலில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
புதன்கிழமை அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஹைதராபாத் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது என்றார் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம்.
Read more »

Monday, September 24, 2007

ராமர் பாலமும், ராமானுசரும்!

ராமர் பாலத்தைப் பற்றிப் பலரும் பேசி விட்டார்கள்! ஆனால் அது பற்றி ராமன் பேச வேண்டாமா? இதோ! இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வு! இதைப் படிக்க வேண்டியவர் படிக்கட்டும்! பிடிக்க வேண்டியவர் பிடிக்கட்டும்!!

முன் குறிப்பு:
பாலம்-ராமானுசர்-அதை அவர் இடிக்கச் சொன்னாரா?-ன்னு "அந்தக்" கண்ணோட்டத்தில் மட்டும் தேடினா இந்தப் பதிவு அதற்குத் தீனி போடாது! :-)
பாலம் சம்பந்தமா ஆன்மீகத் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளணும்? - அப்படின்னு தேடினா அப்போ நிச்சயம் புரியும்! :-))


மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர். கிராமம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.
அழகிய இராமர் கோவில்! கோவில் மட்டுமா அழகு?
கோவிலுக்குள் குடியிருந்த இராமனும் கொள்ளை அழகு! வித்தியாசமான விக்ரகமும் கூட! தலையைச் சாய்த்தாற் போல், குறி பார்த்து பாணம் விடத் தயாராய் இருக்கும் இராமன்!
பொதுவா கூடவே சீதை, இலக்குவன், அனுமன்-மூவரும் இருப்பார்கள்.
இங்கு இன்னும் கூடச் சேர்ந்து சுக்ரீவன், அங்கதன் என்று காண்பதற்கு அரிய இராம விக்ரகம்!

அந்நியர் படையெடுப்பு! சூறையாடல்!
அகந்தையால் ஊரையும் கோவிலையும் அழித்தார்கள்! கிராம மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை!
இராமன் திருமேனியையாவது காப்பாற்றினால், அடுத்த தலைமுறைக்குத் தரலாம் அல்லவா? தூக்கிக் கொண்டு ஊர் ஊராய், அந்நியரின் கண்ணில் படாமல் ஓடினார்கள்! கடைசியில் வந்து சேர்ந்த இடம் திருமலை திருப்பதி அடிவாரம்!

அந்த சமயத்தில், அங்கு பாடம் பயின்று கொண்டிருந்தார் ஒரு பிரபல மதத்தலைவர்!
என்ன பாடம்? இராமாயணப் பாடம்!
பாடம் நடத்தியவர் பெயர் திருமலை நம்பி. பாடம் கேட்டவர் பெயர் இராமானுசர்!
அப்போது இராமானுசர் செம பாப்புலர் ஆகியிருந்த நேரம். அவர் பேச்சுக்கு மறுப்பேது? "உம்" என்று சொல்லும் முன் உருண்டோடி வரக்கூடிய தொண்டர் படை எல்லாம் அவருக்கு அமைந்து வி்ட்டது! அவரை விட வயதில் பெரியவர்களுக்கு எல்லாம் அவர் தலைவர்!

அன்று இராமாயணப் பாடத்தில், வீடணன் அடைக்கலப் படலம்!
சுக்ரீவன் எதிரியைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்ல, அனுமனோ சேர்க்கலாம் என்று சொல்ல, அங்கதன் வானத்தில் வீடணனைக் கைகாட்ட....
அதே நேரம் பார்த்து நம்ம மதுரை மக்கள், சிலைகளை எல்லாம் தூக்கிகிட்டு ஓடீயாறாங்க!
இராமானுசரை அங்கு கண்டதும் பணிந்து வணக்கம் சொல்லினர். அவருக்கோ உற்சாகம் கொள்ளவில்லை!
சுக்ரீவன் மறுத்துரைக்கும் படலம் கேட்கும் தருணத்தில், இப்படி சுக்ரீவனோடு, அங்கதனோடு, அனுமனோடு, இராமன் திருவுருவம் வந்து சேர்கிறதே!


திருமலையில் இராமன்

அனுமன்


சாமீ...எப்படியாச்சும் எங்க ஊருக்கு வந்து, கோவிலை மீண்டும் கட்டித் தர வேணுமுங்கோ!
இந்த இராமன் சிலையை திருப்பி வைக்க வேணுமுங்கோ!
நீங்க பெரிய மகான்! நீங்க மனசு வச்சா முடியாதது இல்ல!
நீங்க சொன்னா ராசா, அப்பறம் அந்த நவாப் கூடக் கேப்பாருங்க சாமீ!

சரி ஜனங்களே, ஆவன செய்யலாம்! மதச் சண்டைகள் மிகுந்து இப்படி நம் இராமன் ஊர் ஊராய் அல்லாடும் படி ஆகி விட்டதே! என்று கவலையுற்றார். உபவாசம் இருந்தார்.
(யார் அங்கே, நவாப்பை மாறு கால், மாறு கை வாங்கு என்றெல்லாம் சவடால் விட, பாவம் அவருக்குத் தெரியவில்லை :-)

நிலைமையைப் பார்த்து வரத் தன் சீடர்களை ஊருக்கு அனுப்பினார்!
அவர்கள் திரும்பி வந்து, "குருவே! கோவில் இப்போ இருந்த இடம், தடம் தெரியாமல் ஆகி விட்டது! அந்நியர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள்! படை திரட்டி அப்போதே தடுத்திருக்க வேண்டும்! இப்போது காலம் கடந்து விட்டது!
அங்கே ஊர்ச் சந்தை ஏற்பட்டு, மக்கள் வணிக மண்டலமாக மாறி விட்டது, ஆசார்யரே!" என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார்கள்!

யோசித்தார் இராமானுசர். சந்தையை இடிக்கச் சொல்லி, மறுபடியும் ஆலயம் கட்டலாமா?
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்! - இந்த "ராமா" என்னும் ரெண்டு எழுத்துக்குச் சந்தையைக் கொடுக்கட்டுமே!
- சந்தையைக் கொடுக்காவிட்டால் சண்டை போடுவோமா? இல்லை சாபம் கொடுப்போமா? இல்லை அடித்து நொறுக்குவோமா?

மதுரைக் கிராமத்து மக்களே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்!
உங்க ஊர் பேரே எனக்கு மறந்து போச்சு! அவ்வளவு சின்ன ஊர்! நம் இராமனை மீண்டும் அங்கே வைக்கலாம் தான்! ஊருக்குப் பொதுவான சந்தையை இடித்து விட்டுச் சிலை வைக்க வேண்டும் என்று அரசனிடம் சொல்ல என்னால் முடியும்!

ஆனால், அரசனையும் அரசியலையும் நம்பி சமயம் வளர்ப்பது மிகவும் கொடுமை! மக்கள் மனத்தில் தான் சமயம் வளரவேண்டுமே தவிர, அரசியலை நம்பி அல்ல!
சமயம்-ன்னா என்ன? சமைத்தல் தான் சமயம்!
அரிசியைச் சமைத்தால், அது பக்குவப்பட்டு, குழைந்து சாதம் ஆகும்!
அது போல் வைணவ சமயம் நம்மை எல்லாம் சமைக்க வேண்டும்! பக்குவப்படுத்த வேண்டும்!


ராமானுசர்


அறிந்தோ அறியாமலோ இவ்வாறு ஆகி விட்டது! ஊரையும் சந்தையையும் இடிக்க வேண்டாம்! அது பொது மக்கள் பயன்பாடு ஆகி விட்டது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம்!
இந்த விக்ரகங்களைக் கலியுக வைகுந்தம் என்று போற்றப்படும் திருமலையில் அடியேன் ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்கிறேன்! திருமலையில் திருவேங்கடமுடையான் கருவறையிலேயே இந்தச் சிலைகளை வைத்து விடலாம்!

எங்கோ ஊர் பேர் தெரியாது இருந்த இந்த அழகு விக்ரகம், இனி சகலரும் அறியுமாறு, புகழ் பெற்ற திருப்பதி மலையில் இருந்து அருள் பாலிக்கட்டும்! அர்ச்சகர்களையும் மற்றவர்களையும் இதற்கு ஒத்துக் கொள்ள வைப்பது என் பாடு!
ஆனால் அதற்கு முன் நீங்கள் நான் சொல்வதை ஒப்புக் கொள்கிறீகளா?
மக்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
ஒரு புறம் தங்கள் ஊர் இராமனைப் பிரிய வேண்டுமே என்ற கலக்கம்! இன்னொரு புறம் திருவேங்கட மலையில் இராமன் இருக்கப் போவதை எண்ணி ஆனந்தம்! - இராமானுசர் பேச்சைக் கேட்டனர்!
வில்லாளி இராமனை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை! விளங்கக் கொடுத்தனர்!
இடையில் வந்த விக்ரகத்தை, இடையறாது வழிபட ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்தார் அண்ணல் இராமானுசர்!

இன்றும் திருமலையில் இராமன் திருக்கோலத்தைக் கருவறைக்குள் செல்லும் வழியில் காணலாம்!
இராமர் மேடை என்றே அதற்குப் பெயர்.
எங்கிருந்தோ வந்த இராமன், இன்று நீங்காது நிற்கிறான்!

இராமானுசர் நினைத்திருந்தால், அரசியல் செய்திருக்கலாம் = இப்போது பாலத்தில் செய்வது போல!
அரசனிடம் தன் செல்வாக்கைக் காட்டி, ஊர்ச்சொத்தை இடித்து விட்டு இன்னொரு ஆலயம் எழுப்பி இருக்கலாம்!
மக்கள் கேட்கா விட்டாலோ, தன் தொண்டர் படையை ஏவி விட்டிருக்கலாம்! = இப்போதைய கல்வீச்சு கலாட்டா போல!

ஊரே கூச்சலில் மூழ்கியிருக்க, கலங்கிய குட்டையில் மீன் பிடித்து இருக்கலாம்! அறிக்கைப் போர் நடத்தி இருக்கலாம்! = நீ என்ன பாலம் கட்டும் இன்ஜினியரா / தப்பாப் பேசும் நாவை அறுத்துக்கிட்டு வாங்கடா! என்று இப்போது இரு தரப்பும் பேசிக் கொள்வது போல!
இப்படி எல்லாம் செய்திருந்தால், ஒரு அஞ்சு வருடத்துக்குள் மறுபடியும் அந்தக் கோவில் கட்டி, பத்தோடு பதினொன்னா போயிருக்கும்!
ஆனால் இராம நாமமும், வைணவமும் இந்தத் தலைமுறை வரை தழைத்திருக்குமோ?

துலாபாரம் என்று எடைக்கு எடை வெல்லமும் சர்க்கரையும் தருவார்கள், குழந்தையின் நேர்த்திக் கடனுக்கு! தலையை வெட்டிக் கொண்டு வந்தால் எடைக்கு எடை தங்கம் என்று ஆன்மீகம் பேசவே பேசாது!
ஆக்கத் தான் எடைக்கு எடை! அழிக்க அல்ல!
இதை மதத் தலைவர்கள் மனத்தில் இருத்த வேண்டும்! மதத் தலைவர்கள் என்று கூறிக் கொள்வோரும், மதம் காக்கப் புறப்பட்டவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்!
இராமானுசர் சமயத்தைக் கட்டிக் காத்து நமக்குத் தந்தது போல், தம்மால் தர முடியுமா என்று அவரவர் மனசாட்சியைக் கேட்கட்டும்!

இராமனை உணர்ந்தவர் இராமானுசர்!
இராமனையும் இராமானுசரையும் உணர்ந்தவர் யாரோ?



References:
1. திருமலைக் கோவில் ஒழுகு
2. அனந்தாழ்வான் அருளிய வேங்கடாசல இதிகாச மாலை
Read more »

Wednesday, September 19, 2007

திருமலை பிரம்மோற்சவம் 5 - கருட சேவை!

"கருடா செளக்கியமா" என்ற பாடல் எல்லாரும் அறிந்த ஒன்று!
கருடன், பெருமாளின் பிரியமான பக்தன். அவனே சுவாமியின் முக்கிய வாகனம். கருடன் இல்லாத பெருமாள் கோயில் ஏது? அந்தரங்க உதவியாளனும் கூட. விநதையின் (வினதை) மகன் என்பதால் "வைநதேயன்" என்ற இன்னொரு பெயரும் இவனுக்கு உண்டு. "பெரிய திருவடி" என்றும் இவனைக் கொண்டாடுவார்கள்!

இவன் சேவையைக் கண்டு, மிகுந்த பாசம் கொண்டு, ஆண்டாள் வில்லிபுத்தூரில் இவனுக்கு ஏக சிம்மாசனம் அளித்தாள். இன்றும் வில்லிபுத்தூரில், அரங்கன், ஆண்டாள், கருடன் என்று மூவரும் ஒரே சிம்மாசனத்தில் இருந்து தான் காட்சி தருகிறார்கள்.

பிரம்மோற்சவத்தில் கருட சேவை மிகவும் முக்கியமான வாகனம்.
கருடன் பறக்கும் வேகம் என்ன தெரியுமா?
'பரம பக்தன், துன்பத்தில் ஆழும் போது, "பெருமாளே" என்று கூவி அழைக்க, இறைவன் ஏறி அமர்ந்து விட்டாரா என்று கூடப் பாராமல், பறக்கத் தயாரானான்', என்று சத்குரு தியாகராஜர் பாடுகிறார். சங்கீதத்தில், கருடனுக்கு ஒரு தனி ராகமே உண்டு! பேர் கருடத்வனி!

அன்று முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரன், மரிக்கும் தருவாயில் கூட, குளத்தில் இருந்த தாமரைப் பூவைப் பார்த்து, "ஆகா, பெருமாளுக்கு இதைச் சூட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்" என்று தான் எண்ணம் போனது. கருட சேவையாக, இறைவன் தோன்றி, கஜேந்திரனைக் காத்ததை எண்ணினாலும் மனம் தான் இனித்திடாதோ?

முன்பே சொன்னது போல, திருமலையில் மிக முக்கிய வாகனம் இந்த கருட சேவை!
இன்று மட்டும் தான், ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, மூலவருக்கு தினமும் அணிவிக்கப்படும் ஆபரணங்கள், அணிகள், வெளியே கொண்டு வரப்பட்டு, கருட வாகனத்தில் இருக்கும் உற்சவருக்கு அணிவிக்கப்படுகின்றன.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகர கண்டி, லக்ஷ்மி ஆரம் ஆகிய இந்த இரு அணிகலன்கள் மூலவரை விட்டு என்றுமே பிரியாது இருப்பவை. இன்று மட்டும் கருட வாகனத்தின் மேல் இருக்கும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப் படுகின்றன.

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, பேரிகைகள் முழங்க, இதோ கிளம்பி விட்டான் திருமலை வாசன், கருடாழ்வாரின் மீது!


எங்கும் "கோவிந்தா, கோவிந்தா" என்ற பக்தி முழக்கம்.
இரு கரம், சிரம் மேல் கூப்பி, எம்பெருமானே, திருவடி சரணே! என்று அடியார்கள் வணங்குகிறார்கள்!
'ராஜ கம்பீர நாடாளும் நாயகன்', கருட கம்பீரமாக, ராஜ நடையில்,
'தொம் தொம்' என்று உலா வரும் அழகைச் சேவிப்பார்க்கு உண்டோ பிறவிப்பிணி!
சரணம் சரணம் கோவிந்தா சரணம்!!



இன்று மாலை,
பெரியாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய். உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ. தாமோதரா. சதிரா.
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே?

"உயர்ந்த சிகரங்களைக் கொண்டு, குளிரும் வேங்கட மலையை உடையானே,
உலகம் வாழ வேண்டி, 'குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய்' கண்ணா, தாமோதரா, காளிங்க நர்த்தனா!

என்னையும், இப்பிறவியில் எனக்கு வாய்த்த என் உடைமைகள் அத்தனையும், உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டேன். (அதாவது)
உனக்கு வழுவிலா அடிமை செய்வதாக உறுதி பூண்டு, உன் சக்கரச் சின்னத்தைப் பொறித்துக் கொண்டேன். பொறித்தால் மட்டும் போதுமா?
உன் அருள் வேண்டி, நன்-செயல்களே செய்து, உன்-செயல்களே செய்து, உன் முகம் பார்த்து இருந்தேன்!
இனி என்னை என்ன செய்யப் போகிறாய்?

உன் திருக்குறிப்பு என்னவோ?
எதுவாக இருப்பினும் சரி, உன்னை அன்றிப் பிறிதொருவர் எனக்கில்லை, வேங்கடவா! " என்று பெரியாழ்வார் பரிபூரண சரணாகதி அடைகின்றார் அவனிடத்தில்.


யாருப்பா அது, அங்க பிரசாதம் கேட்டது? வாங்க வாங்க! நம்ம நண்பர் ஜிரா என்று விளிக்கப்பெறும் ராகவன் தான் பிரசாத ஸ்டால் இன்சார்ஜ். அவரிடம் நயந்து பேசி பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளவும்!
இன்றைய பிரசாதங்கள்: கல்யாண லட்டு (பெரிய லட்டு)
அன்னப் பிரசாதங்கள்: சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, ததியோதனம்(தயிர்ச்சோறு), சகாரா பாத், வெண் பொங்கல்
பிற பிரசாதங்கள்: பாயசம், சுகி, அப்பம், தோசை

மு.கு (முக்கியமான குறிப்பு
):
பிரசாதங்கள் விற்பனைக்கு அல்ல! :-)
பக்தியுடன் வருவார்க்கு சிறிது வழங்கப்படும்! :-))

அந்தரி ரண்டி; ப்ரஸாதம் தீஸ்கோண்டி!



இப்பதிவு சென்ற ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவையின் மீள்பதிவு. மற்ற வாகன சேவைகளுக்கு, 2006 Sep/Oct Archives-இல் பார்க்கவும்!

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாப் படங்கள் உடனுக்குடன் tirumala.orgஇலும் தினமலர் நாளிதழிலும் தரவேற்றப்படுகின்றன!
இதோ சுட்டிகள்:
தேவஸ்தானப் படங்கள் - tirumala.org
தினமலர் படங்கள்
Read more »

Saturday, September 15, 2007

திருமலை பிரம்மோற்சவம் 1 - பெரிய சேஷ வாகனம்!

வாங்க வாங்க திருமலையான் பிரம்மோற்சவத்துக்கு! கூட்டம் தான். இருந்தாலும் பரவாயில்லை. நம்ம குழந்தை ஸ்கூல் அட்மிஷனுக்கு கூட்டத்துல போய் நாம நிக்கலையா? அது மாதிரி நினைச்சிப்போமே? ஏதோ பேப்பர், டிவில்ல எல்லாம் விழா அது இதுன்னு போட்டாலும், சுருக்கமா இந்த விழா ஏன், என்ன தான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிலாம் வாங்க!

வேங்கடத்தான் பூவுலகில் அவதரித்த நாள் புரட்டாசித் திருவோணம். இந்த ஆண்டு Sep 23 அன்று வருகிறது! ஷ்ரவண நட்சத்திரம்ன்னு வடமொழியில் சொல்லுவாங்க. "திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே" என்பது பெரியாழ்வார் பாட்டு!
நாம அமெரிக்கால இல்ல சிங்கப்பூர்ல முதலில் காலடி எடுத்து வச்ச நாள் ஞாபகம் வச்சுக்கிறோம் இல்லையா? அது போலத் தான் இறைவன் நம் பொருட்டு பூமியில் கால் பதித்த நாள். அவதாரக் குழந்தையாக எல்லாம் பிறக்காது, நேரே குன்றின் மேல் கல்லாகி நின்ற நாள்.

இந்த நாளை படைப்புக்குத் தலைவர் பிரம்மா முதலில் விழாவாகக் கொண்டாட, பின்னர் தொண்டைமான் அரசன் அதைத் தொடர, பின்னர் பல ஆண்டுகள் தொடர்ந்தோ, விட்டு விட்டோ கொண்டாடி வருகிறார்கள். இன்றைக்கும் ஊர்வலங்களை பிரம்ம ரதம் என்னும் குட்டித்தேர் (பிரம்மன் சிலை வழிபாடு அற்றவர் ஆதலால்) வழி நடத்திச் செல்லும்.

முதல் நாள்
மாலை:
நல்ல மண் எடுத்து, நவதானிய முளை விடுவர். முளைப்பாரிகை என்பது இதற்குப் பெயர். விழா இனிதே நடக்க, செய்வது இது.

பின்னர் பெருமாளின் படைத்தளபதி சேனை முதலியார் (விஷ்வக்சேனர்), அவருடன் பரிவாரங்கள் அங்கதன், அனுமன், அனந்தன், கருடன் எல்லாரும் வீதியுலா வந்து, அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா என்று கண்டு வருவர்.

அப்புறம், கருடனைத் துணியில் வரைந்து, கொடி மரம் அருகில் பூசித்து, கொடி ஏற்றுவர்! கருடன் விண்ணுக்குச் சென்று அங்குள்ளவர்கள் அனைவரையும், மற்றும் மண்ணுக்கு வந்து நம்மையும், விழாவுக்கு அழைப்பு வைப்பதாக மரபு. (கருடா செளக்கியமா? கண்டிப்பா வந்துடறோம்பா. நீ போய் ஆக வேண்டிய வேலைகளைக் கவனி!).

துவஜம்=கொடி, ஆரோகணம்=ஏற்றம்
துவஜாரோகணம்=கொடியேற்றம்...அவ்ளோ தாங்க, மத்தபடி வடமொழிப் பேரைப் பாத்து பயந்துடாதீங்க! :-)
இரவு
பெத்த சேஷ வாகனம். (சுந்தரத் தெலுங்கு-ங்க. தீந்தமிழில் பெரிய நாக வாகனம்)

நம்ம பெருமாளுக்கு ரொம்ப பிடிச்ச ஒருவர்-ன்னா அது ஆதிசேஷன்.
பாற்கடல், திருவரங்கம் எல்லாத்துலேயும் இந்த சேஷன் மேலே தான் பள்ளி கொள்வார். இந்த சேஷனும் சும்மா இல்லீங்க!
இறைவனை விட்டு ஒரு நொடியும் பிரிய மாட்டார்-ன்னா பாத்துக்குங்க!
ராமனாய் பிறந்த போது இலக்குவன்
கண்ணனாய் பிறந்த போது பலராமன்
கலியுகத்தில் இராமானுசன், மணவாள மாமுனிகள்!
"சென்றால் குடையாம்; இருந்தால் சிங்காசனமாம்; நின்றால் மரவடியாம்" என்பார்கள்! அவ்வளவு ஏன்? திருமலையின் 7 மலைகளும் சேஷனின் திருமுடிகள். அந்த சேஷாசலத்தின் மேல் தான் இறைவன் நிற்கிறான்! அதனால் விழாவின் முதல் நாள் சேஷனின் மீது ஒய்யாரமாக பவனி!

முன்னே அருளிச்செயல் குழாம், தமிழ்ப் பாசுரங்கள் பாடிச் செல்ல,
தமிழைக் கேட்டுக் கொண்டே, நம் பெருமாள் பின் தொடர,
வைகுண்ட நாதன் திருக்கோலத்தில், அலைமகள் (ஸ்ரீ தேவி) மற்றும் மண்மகள் (பூமிதேவி) உடன் வர,
அவன் பின்னே வேத கோஷ்டி வர,
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிவோம் அவனை!

சரி, போன பதிவில் சொன்னபடி ஆழ்வார் பாடலுக்கு வருவோமா? சொன்ன சொல்லைக் காப்பாத்துணம்-ல!
12 ஆழ்வார்களில், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுரகவி ஆழ்வார் தவிர ஏனைய பத்து ஆழ்வார்களும் வேங்கடத்தானைப் பரவிப் பாடியுள்ளனர். (மங்களாசாசனம் என்று வடமொழியில் வழங்குவர்)

(தொண்டரடிப்பொடி அரங்கத்தானைத் தவிர எவரையும், மதுரகவி அவருடைய ஆசான் நம்மாழ்வாரைத் தவிர எவரையும் பாட்டாகப் பாடவில்லை)
ஆழ்வார்கள் என்றால் யார்? அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவ்வளவாக அறியத் தெரியாதவர்கள், கீழ்க்கண்ட சுட்டிகளில் அறிந்து கொள்ளலாம்!
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - நன்றி, திரு தேசிகன் அவர்கள் வலைப்பதிவு
ஆழ்வார் குறிப்பு - நண்பர் பாலாவின் வலைப்பதிவு. பாலா இப்போது தான் துவக்கியுள்ளார். Archives-இல் தேடப் பொக்கிஷம் கிடைக்கும்.



இன்று,
பொய்கை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்

உளன் கண்டாய் நன்-நெஞ்சே, உத்தமன் என்றும்
உளன் கண்டாய்,உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்,
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தின் உள்ளனன் என்று ஓர்!

(உள்ளுவார்=உள்ளத்தில் ஆழ்ந்து நினைப்பார்; ஒர்=அறி; உணர்) மிக எளிய பாடல் தான்!
நல்ல நெஞ்சமே, உத்தமன் என்றும் உள்ளான். எங்கே உள்ளான்?
உள்ளுவார் (நினைப்பவர்) உள்ளதில் எல்லாம் உள்ளான்.
பாற்கடல் வெள்ளத்தில் இருப்பவனும், வேங்கடத்தில் இருப்பவனும் ஒருவனே!
அவன் விரும்பி உறையும் இடம் நம் உள்ளமே.
இதை நன்றாக உணர்ந்து தெளிவு அடைவாயாக!



இப்பதிவு சென்ற ஆண்டு பிரம்மோற்சவ விழாவின் மீள்பதிவு! (ஹிஹி...அடியேனின் முதல் மீள்பதிவும் கூட :-) சென்ற ஆண்டு செப்டம்பர் இறுதியில் தான் பதிவெழுதத் துவங்கினேன்....ஓராண்டு ஓடி விட்டதா என்ன?)
இந்த ஆண்டு கருடசேவை, ரதோற்சவம், சக்ர ஸ்னானம் மட்டும் மீள்பதிய எண்ணம்!

மற்ற வாகன சேவைகளுக்கு, 2006 Sep/Oct Archives-இல் பார்க்கவும்!

Read more »

Friday, September 14, 2007

காங்கிரஸ்காரர் கனவை நனவாக்கிய திமுக-காரர் - தமிழ்நாடு தீர்மானம்!

அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் இன்று (Sep 15th). நூற்றாண்டு விழாவுக்கு ஓராண்டு முன்னோடி (99).
அவர் இன்னும் சற்று நாள் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் தலைவிதி எப்படி ஆகி இருக்குமோ இல்லையோ, நிச்சயம் இப்படி ஆகியிருக்காது என்று சொல்வாரும் உண்டு!

அவர் பிறந்த நாள் அஞ்சலியாக இந்தப் பதிவு! - அவர் கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டசபை தீர்மானத்தைப் பார்க்கலாம் வாங்க!

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரம் என்றோர்
மணியாரம் படைத்த தமிழ்நாடு
- இப்படி தமிழ்நாடு, தமிழ்நாடு என்று பாரதி கூவி விட்டுப் போனாலும், தமிழ்நாடு என்னவோ மதறாஸ் ராஜதானியாகவே இருந்தது!

இனி, அந்த நாள் ஞாபாகம் - பத்திரிகைக் குறிப்பை, History Channel போல அப்படியே பார்ப்போம்! நன்றி - மாலை மலர்!



"தமிழ்நாடு" பெயர் மாற்றக் கோரிக்கை. காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம்; 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார்
மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவில்லை. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும், தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்றும் அழைக்கப்பட்டது.

"சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும்" என்ற கோரிக்கைக்காக, விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் 1957ல் உண்ணா விரதம் இருந்தார். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர்.

"தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும், அரசு ஊழியர்கள் கதர் அணியவேண்டும் என்பவை உள்பட 12 கோரிக்கைகளுக்காக 1957ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.
விருதுநகரில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். குடிசையில் காங்கிரஸ் கொடி பறந்தது.

காமராஜர் பதில்
இந்த உண்ணாவிரதம் பற்றி காமராஜரிடம் நிருபர்கள் கேட்டனர்.
"சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகளில், 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டது" என்று அவர் பதில் அளித்தார். மிகவும் களைத்து, இளைத்துப் போன சங்கரலிங்கனார் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை போய்ப்பார்த்தனர். தி.மு.கழகத் தலைவர் அறிஞர் அண்ணாவும் சென்று பார்த்தார்.
"இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டார்களே" என்று அண்ணா கூறினார்.

"நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார்.
நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின.
அவரைக் காப்பாற்றும் எண்ணத்துடன், மதுரை பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, உண்ணாவிரதம் தொடங்கிய 76_வது நாளில் (1957 அக்டோபரில்) அவர் மரணம் அடைந்தார்.

தமிழில் "தமிழ்நாடு" ஆங்கிலத்தில் "மெட்ராஸ்"
இதன்பின், தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது. தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின.
இதன் பிறகு, தமிழில் "தமிழ்நாடு" என்றும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது.
இதுபற்றிய அறிவிப்பை 24_2_1961_ல் சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:
"நமது மாநிலத்தின் பெயர், அரசியல் சட்டத்தில் "மெட்ராஸ்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்பது, ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய பதம். தமிழில் குறிப்பிடும்போது, சென்னை மாநிலம் என்று சொல்கிறோம். சென்னை ராஜ்ஜியம், சென்னை சர்க்கார் என்றும் சொல்கிறோம்.

இனி தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்று எழுதுவதற்கு பதிலாக, "தமிழ்நாடு" என்று எழுதலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும், "மெட்ராஸ்" என்று குறிப்பிடப்படுமே தவிர, மற்ற எல்லா இடங்களிலும் "தமிழ்நாடு சட்டசபை, "தமிழ்நாடு சர்க்கார்" என்று குறிப்பிடப்படும்.

எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அரசியல் சட்டத்தை மாற்ற அவசியம் இல்லாமலேயே, "சென்னை ராஜ்ஜியம்" என்பது "தமிழ்நாடு" என்று மாற்றப்படுகிறது.
இவ்வாறு சி.சுப்பிரமணியம் அறிவித்தார்.

தி.மு.க. வலியுறுத்தல்
எனினும், "ஆங்கிலத்திலும் "தமிழ்நாடு" என்று அழைக்கப்படவேண்டும். அதற்காக, அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்" என்று தி.மு.கழகமும், மற்றும் பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.


18_7_1967
"தமிழ்நாடு" பெயர் மாற்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது

"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறியது.
காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ்நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது. "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ்நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது.

சட்டசபையில் தீர்மானம்:
இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18_7_1967 அன்று முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார்.
"தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

பாலசுப்பிரமணியம் (இ.கம்.) பேசுகையில், "இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்' என்று அழைக்க வேண்டும். `மதராசி' என்று அழைக்கக்கூடாது" என்று கூறினார்.
ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், "தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணா விரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத்தால் அவர் உயிர் இழந்தார்" என்று குறிப்பிட்டார்.

தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:
"இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக _ உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்திருந் தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.
பாரதிக்கு தாய்நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி 3 ஆயிரம் ஆண்டுகளாக புகழ் பெற்ற பெயரைத்தான் நாம் வைக்கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால் மனம் கொதிக்காதா?

முதல்_அமைச்சர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்த போது, ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி பாராட்ட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது. அடக்கிக்கொண்டேன்.
தமிழ்நாடு என்று பெயர் வைத்தபின் தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால் பயனில்லை. இந்த கோட்டையின் பெயர் "செயிண்ட் ஜார்ஜ் கோட்டை" என்று இருப்பதை "திருவள்ளுவர் கோட்டை" என்று மாற்ற வேண்டும்."
இவ்வாறு ம.பொ.சி. கூறினார்.

அண்ணா பதில்
விவாதத்துக்கு பதில் அளித்துப்பேசுகையில் அண்ணா கூறியதாவது:
"இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.

இதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, "தமிழ்நாடு" என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை" என்று கூறினார்கள்.

10 நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும், சிரமத்துடனும் "டமில்நாட்" (தமிழ்நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழின் வெற்றி. தமிழ ரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ்நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்.

மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது.
சங்கரலிங்கனாருக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.

நாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அண்ணா கூறினார்.

பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

"தமிழ்நாடு வாழ்க"
பின் அண்ணா எழுந்து, "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி, "தமிழ்நாடு" என்று 3 முறை குரல் எழுப்பினார்.
எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று குரல் எழுப்பினார்கள்.
சபை முழுவதிலும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது.
Read more »

Wednesday, September 12, 2007

புதிரா? புனிதமா?? - மகாபாரதம்!

விடைகள் கீழே Bold செய்யப்பட்டுள்ளன. விளக்கங்கள் எல்லாம் வெட்டிப்பயல் கொடுத்துள்ளார். இன்னும் விரிவான விளக்கம் வேணும்னா, பின்னூட்டத்தில்!

வின்னர்கள்:
வெட்டிப்பயல், கெக்கேபிக்குணி - 10/10
பராசரன், குமரன் - 8/10


வென்றவர்க்கும், போட்டியில் நின்றவர்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அடுத்த புதிரா புனிதமாவில் என்ன கேக்கலாம்-ணு போட்டியில் பங்கு பெற்று வரும் நீங்களே சொல்லுங்க! (இது வரை வந்த தலைப்புகள்: தமிழக ஆலயங்கள், சைவம், ராமாயணம், முருகன், பொன்னியின் செல்வன்) - இல்லை விளையாட்டு முறையை வேறு மாதிரி மாற்றலாமா? என்ன நினைக்கிறீங்க?

இந்தப் போட்டியின் பரிசு இதோ! அள்ளிக்கோங்க!
(Blowup Pictures என்பதால் சற்று தாமதம ஆகலாம்!)

1. பார்த்தசாரதி - திருமுக மண்டலம்
பார்த்தனுக்காக, பீஷ்மர் விட்ட அம்புகளை எல்லாம் தானே ஏற்றுக் கொண்டான்;
முகமே புண்ணாகிப் போன, பொன்னன் கண்ணன் - ஒத்தை ரோஜா மாலையில் ஏகாந்த சேவை! திரு அல்லிக்கேணி கண்டேனே
2. திருவல்லிக்கேணியில், மீசையோடு் ஆசைக் கண்ணன் - ஆலய ஓவியம்



மகாபாரதத்துக்கு மட்டும் தான் "மகா" அடைமொழி உண்டு! மகா ராமாயணம், மகா கந்தபுராணம் என்றெல்லாம் சொல்வது கிடையாது! ஏனென்றால் உலகின் நீதிகள் அனைத்தும் பொதிந்த நூல் மகாபாரதம்.
காலத்தால் பிந்திய காப்பியம் ஆதலால், எல்லா நீதிகளும், கதைகளும் இதில் அடங்கி விட்டன! அதனால் "மகா" பாரதம் என்று பெருமை பெற்றது - வாரியார் சுவாமிகள்.

நல்லவர்கள் பேராசை பீடிக்க எப்படித் தீயவர்களாக மாறுகிறார்கள், தர்மத்தின் பாதையில் நடக்கும் போது வரும் தர்ம சங்கடங்கள், அதை எதிர் கொள்வது எப்படி, இறையருள் யாரிடம் அமையும் என்று பலப்பல தத்துவங்கள்!
திருக்குறளில் இருக்கும் ஒவ்வொரு குறட்பாவுக்கும் ஒரு கதையைக் காட்டலாம் இக்காவியத்தில்! அவ்வளவு பரந்த காவியம்!
குழந்தை, வளர்ப்பு, கல்வி, கல்யாணம், இல்லறம், தொழில், போட்டி, ஆன்மீகம், தர்மம், மறைவு என்று வாழ்வின் எல்லாக் கட்டங்களும் கொண்ட காவியம்!

ராமாயணம் போல் அல்லாது, அனைத்துமே நிறை குறை, இரண்டுமே உள்ள பாத்திரங்கள்!
சைவ, வைணவ பேதங்கள் இல்லாத நூல். விநாயகப் பெருமானின் எழுத்தாணி பட்ட காவியம்! கண்ணன் கதையும் ஒன்றாய்க் கலக்கும் நூல்!
கதைக்குள் கதை, அதற்குள் இன்னொரு கதை....
என்று இதில் ஆழம் மிகுதி! பார்க்கலாம் நமக்கு எவ்வளவு தெரிகிறது என்று! :-))

இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-)
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு வேத வியாசர்!



1

பாரதப் போரில், உணவுப் பொருட்கள் வழங்கி உதவி செய்ததாகக் கூறப்படும் தமிழ் மன்னன் யார்?

1

அ) பாண்டியன் சோற்றுணை வழுதி
ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்
இ) பாண்டியன் பெருஞ் சோற்று உதியன்
ஈ) சோழன் உண்டி கொடுத்தான்

2பீஷ்மர் தெரியும்! பீஷ்மகர் யார்?

2

அ) துரியோதனன் மாமனார்
ஆ) பீஷ்மரின் தந்தை
இ) கண்ணனின் மாமனார்
ஈ) அர்ச்சுனனின் மாமனார்

3

மகாபாரதப் போரில் முதலில் அம்பு எய்த வீரன் யார்?

3

அ) நகுலன்
ஆ) துச்சாதனன்
இ) சால்வன்
ஈ) புரோசனன்

4போரில், பாண்டவர் படையில் முதலில் உயிர் துறந்த வீரன் பெயர் என்ன?

4

அ) கடோத்கஜன்
ஆ) அரவான்
இ) அபிமன்யு
ஈ) உத்தர குமாரன்

5போரின் முடிவில் நூறு கெளரவர்களில் ஒரே ஒருவன் மட்டும் மிஞ்சினான். அவன் யார்?

5

அ) விகர்ணன்
ஆ) துச்சலா
இ) யுயுத்சு
ஈ) அஸ்வத்தாமன்

6

விராட நாட்டில் மறைந்து வாழ்ந்த போது, அந்நாட்டு அரசி சுதேசனையின் சகோதரனால் பாஞ்சாலி வம்பிழுக்கப்பட்டாள்? அவன் பெயர் என்ன?

6

அ) கங்கன்
ஆ) பிருகந்நளை
இ) கீசகன்

ஈ) ஜெயத்ரதன்

7கீதை உபதேசிக்க, அதை நேரிடையாகக் கேட்டவர்கள் (live) நான்கு பேர் தான். அர்ச்சுனன், சஞ்சயன், திருதிராஷ்டன்; அந்த நான்காம் நபரின் பெயர் என்ன?

7


அனுமன்

8

துரோணரின் நூற்றியோரு வில்லையும் அவர் ஒரு அம்பு விடுவதற்குக் கூட விடாமல், அதற்கு முன்பே ஒடித்த வீரன் யார்?

8

அ) அபிமன்யு
ஆ) சாத்யகி
இ) சிகண்டி
ஈ) திருஷ்டத் துய்மன்

9கர்ணனின் வளர்ப்புத் தாயார் பெயர் என்ன?

9

அ) அதிரதை
ஆ) ஷோன்
இ) ராதை
ஈ) பானுமதி

10பாண்டவர் வம்சத்துக் குழந்தைகளில் ஒன்றே ஒன்று மட்டும் உயிர் தப்பியது, அதுவும் கண்ணன் அருளால், கர்ப்பத்துக்குள்ளேயே! அந்தக் குழந்தையின் குழந்தை பெயர் என்ன?

10

அ) பரீட்சித்து
ஆ) யுயுத்சு
இ) ஜனமேஜயன்
ஈ) சித்ராங்கதன்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!

1 அ) பாண்டியன் சோற்றுணை வழுதி ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்இ) பாண்டியன் பெருஞ் சோற்று உதியன் ஈ) சோழன் உண்டி கொடுத்தான்

2 அ) துரியோதனன் மாமனார் ஆ) பீஷ்மரின் தந்தை இ) கண்ணனின் மாமனார் ஈ) அர்ச்சுனனின் மாமனார்

3 அ) நகுலன் ஆ) துச்சாதனன் இ) சால்வன் ஈ) புரோசனன்

4 அ) கடோத்கஜன் ஆ) அரவான் இ) அபிமன்யு ஈ) உத்தர குமாரன்

5 அ) விகர்ணன் ஆ) துச்சலா இ) யுயுத்சு ஈ) அஸ்வத்தாமன்

6 அ) கங்கன் ஆ) பிருகந்நளை இ) கீசகன் ஈ) ஜெயத்ரதன்

7 ______________________

8 அ) அபிமன்யு ஆ) சாத்யகி இ) சிகண்டி ஈ) திருஷ்டத் துய்மன்

9 அ) அதிரதை ஆ) ஷோன் இ) ராதை ஈ) பானுமதி

10 அ) பரீட்சித்துஆ) யுயுத்சு இ) ஜனமேஜயன் ஈ) சித்ராங்கதன்

Read more »

Monday, August 20, 2007

பூரம்3: கருடா செளக்கியமா?

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு என்ன கேட்டது? - கருடா செளக்கியமா? அதற்குக் கருடன் என்ன பதில் சொன்னது?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே! - கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது என்று பாடுவார் கண்ணதாசன்.
அந்நியன் படத்திலும் கருட புராணம் அடிக்கடி தோன்றி பயமுறுத்தும்! :-)

பாம்பு பரம்சிவன் கழுத்தில் இடம் பெற்று விட்டது - அதனால் அது செளக்கியமே!
ஆனால் பாவம், கருடனின் நிலை? பார்க்கலாம் வாங்க, கருடனின் இடம் எங்கே என்று? கருடன் எப்போதும் பெருமாளின் வாகனம் (ஊர்தி) மட்டும் தானா? இறைவனைச் சுமக்கும் வேலை மட்டும் தானா கருடனுக்கு?
கருட பஞ்சமி இப்ப தான் வந்து போனது! (Aug 18, 2007) - அதே நாள் தான் நாக பஞ்சமியும் கூட!

பெரியாழ்வார் கருடனின் அம்சம் என்று சொல்லப்படுபவர். இருவருமே சுவாதி நட்சத்திரம் தான்! அதனால் தான் வில்லிபுத்தூரில் கருடனுக்கு மிகவும் ஸ்பெஷல் இடம். அது என்ன இடம்?
பெருமாளுக்கு நிகரான ஆசனம்! - சரி நிகர் சம ஆசனம்!

பொதுவாக கை கூப்பிய படி, பெருமாளின் முன்னே கருடன் நிற்பது தான் எல்லாக் கோவில்களிலும் வழக்கம்! ஆனால் வில்லிபுத்தூரில் மட்டும்,
ஆண்டாளும் பெருமாளும், மனைவியும் கணவனுமாய் நிற்க,
அவர்களுடன் ஜோடியாய் அதே ஆசனத்தில் கருடன்! - இது எப்படிச் சாத்தியம்?

பணியாளும் பரமனும் தோளோடு தோள் நிற்கும் அளவுக்கு சோஷியலிசமா என்ன வில்லிபுத்தூரில்? முதலாளியும் தொழிலாளியும் காம்ரேடுகள் (Comrade) ஆகி விட்டார்களா என்ன? :-)


பதிவர்கள் யாராச்சும், கருடனை வானில் பார்த்திருக்கீங்களா? கழுத்தில் வெள்ளைப் பட்டை - இல்லை தலையில் வெள்ளைப் பட்டை இருக்கும்! கருடனுக்கும் கழுகுக்கும் என்ன வேறுபாடு? சொல்லுங்க பார்ப்போம். அமெரிக்காவின் தேசியப் பறவை Bald Eagle எனப்படும் கருடன் தான்!
புத்த மதத்திலும், இலங்கை, ஆங்கர் வாட்-கம்போடியா, தாய்லாந்திலும் இந்தக் கருடன் உண்டு!

பெருமாளின் வாகனம் கருடன் என்பது எல்லாருக்கும் தெரியும்! கருட சேவை எப்போதும் மிகவும் விசேடம் தானே! "ஆழ்வார்" என்ற சிறப்புப் பெயர் கருடாழ்வாருக்கு உண்டு!
பெருமாளின் தலைக்கு மேலேயும் கருடன் - கருடக் கொடியாக!
பெருமாளின் காலுக்கு கீழேயும் கருடன் - கருட வாகனமாக!

காச்யப முனிவருக்கும், வினதைக்கும் பிறந்தவர் தான் அருணனும், கருடனும்.
அருணன் சூரியனின் தேரோட்டி. கருடனோ பகவானுக்கே வாகனம்!
ஆனால் முதலில் இறைவனுக்கும் கருடனுக்குமான உறவு சண்டையில் தான் தொடங்கியது, இக்காலக் காதலர்களைப் போல! :-)
கருடன் பெருமாளிடமே சண்டையிட்டுத் தோற்றார்.

கத்ருவும், வினதையும் காச்யபரின் மனைவிகள்.
கத்ருவுக்கு ஆயிரம் குழந்தைகள், அனைத்தும் நாகங்கள். வினதைக்கு இரண்டு மகன்கள். அருணன், கருடன்.
சூழ்ச்சியால் வினைதையை அடிமை ஆக்கிக் கொண்டாள் கத்ரு. காமதேனுவின் நிறம் வெள்ளை என வினதை சொல்லினாள்; தன் நாகப் புதல்வர்களை அனுப்பி அதைச் சூழ வைத்துக் கருப்பாக்கி பொய்யாக வென்று விட்டாள் கத்ரு. வினதையை அடிமை ஆனாள்.
தாயின் சாபம் தீர்க்க வேண்டுமானால், அமிர்த கலசம் எடுத்து வர வேண்டும் என்று, சிற்றன்னையால் ஏவப்பட்டான் கருடன்.

அமிர்த கலசத்தை எடுத்து வரும் போது, இந்திரனிடம் போரிட்டான் கருடன். கருடனின் ஆற்றல் தாளாமல் இந்திரன் தவிக்க, அமிர்தத்தைக் காப்பாற்ற, பெருமாளே போருக்கு வந்தார். பெருமாளிடம் தோற்ற கருடன், அவர் திருவடிகளில் பணிந்து, அவருக்கே வாகனம் ஆனான். சிறிதளவு அமுதமும் பெற்று தாயின் சாபமும் தீர்த்தான்.


விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என்று பல பெயர்கள் கருடனுக்கு உண்டு!
கருடன் வேதங்களின் அம்சம், மங்கலச் சின்னம் என்று சொல்லுவார்கள்.
பல கோவில் நிகழ்ச்சிகளில், கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும், மங்களகரமான ஒன்று!
இது பெருமாள் ஆலயங்கள் மட்டும் அல்ல! எல்லா ஆலயங்களுக்கும் பொருந்தும்! கருடத்வனி என்ற ஒரு ராகமே உண்டு, சாம கீதம் இசைப்பதற்கு!
கிராமங்களில் கருடக் கிழங்கு என்ற ஒரு கிழங்கு உண்டு. அதை மாவிலை போல் வீட்டு வாசலில் சொருகி வைப்பார்கள், பூச்சி பொட்டுகள் வராமல் இருக்க! மேலே பறக்கும் கருடனின் நிழல், பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புவார்கள்!

கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று.
எதிரிகளை வெல்வதற்கும், விஷமங்களை முறிக்கவும், மந்திர தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவதற்கும், வாதங்களில் வெல்வதற்கும் கருட மந்திரம் ஜபிப்பார்கள்!
கடலூருக்கு அருகில் உள்ள திருவந்திப்புரம் (திவஹீந்தரபுரம்) என்னும் ஊரில், கருட மந்திரம் ஜபித்து தான், சுவாமி தேசிகன் என்னும் ஆசார்யர், சகல கலா விற்பன்னராகத் திகழ்ந்தார். கருட தாண்டகம் என்னும் நூலையும் பாடினார்!

பாண்டவர்கள் கூட கருட வியூகம் அமைக்கும் போது தான் முதல் வெற்றி பெறுகிறார்கள்!
நீதி விளக்கமும், தண்டனைகள் மற்றும் திருத்தங்களைச் சொல்வது கருட புராணம்!
கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கிப் பிடித்துள்ளதால், கருடன் சனி பகவானின் விளைவுகளை மட்டுப்படுத்துவர் என்றும் சொல்லுவார்கள்!

அது சரி....
உலகத்தில் எங்காச்சும் வாகனத்துக்கே வாகனம் இருக்கா?
முருகனுக்கு மயில் வாகனம், ஆனா மயிலுக்கு வாகனம் உண்டா?
பாருங்க...கருடனுக்கு ஒரு வாகனம் உண்டு! சுபர்னோ வாயு வாகனா என்பார்கள்!
வாயு பகவான் தான் கருடனுக்கு வாகனமாய் அமைகிறார்!


பெருமாளுக்கு நிகரான ஆசனம்! - சரி நிகர் சம ஆசனம், கருடனுக்கு என்று பார்த்தோம்!
அது ஏன் என்றும் பார்க்கலாம் வாங்க!

வில்லிபுத்தூரில் ஊர் அறியத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்த அரங்கன், திருமண நாள் அன்று வரத் தாமதம் ஆகிறது. ஏற்கனவே அவனுள் கலந்து விட்ட ஆண்டாளும் அவனோடு வரத் தாமதம் ஆனதால் பெரியாழ்வார் துடிக்கிறார். திருவரங்கத்தில் காணாத காட்சியை, வில்லிபுத்தூரில் காணக் கூடி விட்டனர் ஊர்மக்கள். ஆனால் பெருமாள் வருவதாகத் தெரியவில்லை!

அப்போது கருடன், ஆழ்வார் நிலை அறிந்து ஓடோடி வருகிறான். பறப்பதில் வேகம் கூட்டுகிறான்.
அன்று கஜேந்திர மோட்சத்தில் பெருமாளுக்கு எப்படி உறுதுணையாக கருடன் இருந்தானோ, அதே துடிப்போடு பறக்கிறான்!
ஆண்டாளையும் இப்போது சேர்த்து சுமப்பதால் அவனுக்கு வியர்க்கிறது. இருந்தாலும் வாயு வேகமாகப் பறந்து வந்து, குறித்த நேரத்தில் வில்லிபுத்தூரில் தம்பதிகளைச் சேர்க்கிறான் கருடன்!

பெரியாழ்வார் கலக்கம் நீங்கி அமைதி அடைகிறார். பெண்ணின் தந்தைக்கு உதவிய பிள்ளை வீட்டுக்காரன் அல்லவா கருடன்?
இதற்கு நன்றியாகவே, ஆண்டாள் பெருமாளிடம் பேசி, தங்களோடு கருடனுக்கும் அதே ஆசனத்தில் இடம் அளித்தாள்! அதுவே வில்லிபுத்தூரில் இன்றும் அழகிய காட்சி!

மேலால் பரந்த வெயில்காப்பான்
"வினதை சிறுவன்" சிறகென்னும்,
மேலாப்பின் கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே
என்று நாச்சியார் திருமொழியில், மாப்பிள்ளையான பெருமாள் மேல் வெயில் படாது, கருடன் தன் சிறகால் மேலாப்பு விரித்து, மாப்பிள்ளையை அழைத்து வருவதாகப் பாடுகின்றாள்.


ஓம்காரப் பிரணவ தத்துவம் இந்தக் காட்சியில் ஒளிந்துள்ளது.
ஓம் = அ + உ + ம்
அகாரம் = பரமாத்மா = பெருமாள்
மகாரம் = ஜீவன் = கோதை
இவர்கள் இரண்டையும் ஒன்று சேர்ப்பது எது?

"அ"வும், "ம"வும் சேர்ந்து "ஓம்" என்று ஆக வேண்டுமானால், அதற்கு அ-வுக்கும், ம-வுக்கும் இடையே "உ" தேவை!
உகாரம் = சரணாகதி சம்பந்தம் = இவனே கருடன்!
பெருமாளையும் ஆண்டாளையும் ஒன்று சேர்க்க ஓடோடிப் பறந்து வந்த உகார மூர்த்தி இவன். உகாரமே சரணாகதி. அது ஒன்று தான் பரமனையும் ஜீவனையும் சேர்க்கின்றது!
அதுவே வில்லிபுத்தூரில் மூவராய் நாம் காணும் காட்சி!
(வேறொரு பதிவில், ஓங்காரம் பற்றி விரிவான விளக்கம் பேசலாம்...)

கல்யாணம் ஆகும் வரை மைனர் முறுக்கில் வலம் வந்த தலைவன், தொண்டர்களைச் சரியாகக் கவனிக்கவில்லை போலும்!
அதான் கல்யாணமானவுடன், வந்து சேர்ந்த புண்ணியவதி, புருஷனிடம் பரிந்து பேசி...
என்னங்க, பாவம் அவரும் எவ்வளவு தான் வேலை செய்வாரு? கொஞ்சம் ஊதியத்தை உயர்த்திக் கொடுங்கள் என்று சொல்வது போல, தொண்டனுக்கும் சரி நிகர் ஆசனம் வாங்கிக் கொடுத்து விட்டாள்! அது தான் தாயாரின் கருணை!
புள்ளரையன் கோவிலில், வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ என்று திருப்பாவையிலும் புள் அரையன் (பட்சி ராஜன்) பெயரை நிரந்தரமாகப் பதித்து விட்டாள்!

கருடாழ்வார்=பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!
அரங்க நகரப்பன் திருவடிகளே சரணம் சரணம்!!!


இத்துடன், திருவாடிப்பூரம் தொடர் முற்றிற்று!
Read more »

Wednesday, August 15, 2007

Aug 15 - தேசிய கீதமா? வி-தேசிய கீதமா??

அனைவருக்கும் இனிய சுதந்திர தின (விடுதலை நாள்) வாழ்த்துக்கள்! அறுபதாண்டுகளைக் கொண்டாடும் இந்தியா, இன்னுமா அந்நியரைப் போற்றும் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டுள்ளது? - என்று ஒரு சர்ச்சை அவ்வப்போது சில இடங்களில் எழும்! பின்பு அடங்கி விடும்! அது என்ன தான் சர்ச்சை என்று பார்க்கலாம் வாங்க!
அப்படியே நம் தேசிய கீதமும், அதன் பொருளும் அறிந்து கொள்ளலாம் வாங்க!

அதற்கு முன் நீங்கள் எல்லாரும், சர்வேசன் கேட்டபடி பாடி விட்டீர்களா?
பாடவில்லை என்றால், மனசுக்குள்ளவாச்சும் ஒரு முறை பாடிப் பாருங்களேன்! இதோ உதவிக்கு ராணுவத்தின் இசை முழக்கம். 52 விநாடிகள்!



தாகூர் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களுக்குச் சொந்தக்காரர்!
உலகில் வேறு எவர்க்கும் இந்தப் பெருமை உள்ளதா என்று தெரியவில்லை!
ஒன்று, நம் இந்தியாவின் தேசிய கீதம் - ஜன கன மன
இரண்டு, பங்க்ளாதேஷ் எனும் வங்காள தேசத்தின் கீதம் - அமர் ஷோனார் பாங்க்ளா

யாருக்கும் ரவீந்தரநாத தாகூரின் கவித்துவத்தின் மீதோ, தேச பக்தியின் மீதோ ஐயம் கிடையாது!
ஜாலியன் வாலா பாக் படுகொலையைக் கண்டித்து, தமக்குக் கொடுக்கப்பட்ட சர் பட்டத்தை உதறி எறிந்தவர் தான் தாகூர்.
தாகூரின் சாந்தி நிகேதன் பலகலைக் கழகத்துக்கு, அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போட்டது தான் ஆங்கிலேய அரசு!
பின் ஏன் இந்த சர்ச்சை? இந்தப் பாடல் எழுதப்பட்ட நேரம் அப்படி!

Dec 1911-இல் இது எழுதப்பட்டது! இறை வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட பாடல் ஜன கன மன!
அந்த நேரம் தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவும் கூட! அந்தக் காலக்கட்டத்தில் இருந்த காங்கிரசின் நிலை வேறு! பூர்ண சுதந்திரம் எல்லாம் அப்போது கிடையாது! அப்போது தான் வங்காளப் பிரிவினையை (Partition of Bengal), காங்கிரசின் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் வாங்கயிருந்த நேரம்!

அப்போது தான் கல்கத்தாவில் (கொல்கத்தாவில்) காங்கிரசின் மாநாடு நடந்தது! Dec 27, 1911 அன்று இரண்டாம் நாள் கூட்டத்தில் இந்த ஜன கன மன பாடல் துவக்க வணக்கமாகப் பாடப்பட்டது.
அந்த நாளில், ஜார்ஜ் மன்னரையும் அரசியையும் வரவேற்று, வரவேற்புப் பத்திரம் வாசித்தார்கள்! வங்காளப் பிரிவினையின் வாபசுக்கு நன்றி தெரிவித்தார்கள்! கூடவே ராம்புஜ் சவுத்தரி என்பவர் மன்னரை வரவேற்றுப் பாடிய ஹிந்திப் பாடலையும் பாடினார்கள். போதாதா?
பனை மரத்தின் கீழே நின்று பாலையே குடித்தாலும்...கள் என்று சொல்வார்களே...அந்தக் கதை ஆகி விட்டது!

அன்றைய ஆங்கில அரசுப் பத்திரிகைகள் ஸ்டேட்ஸ்மேன், இங்க்லீஷ் மேன் போன்றவை, இந்த நிகழ்ச்சியைக் கவர் செய்யும் போது, ஏதோ மன்னர் ஜார்ஜை வரவேற்க, பிரத்யேகமாக எழுதிப் பாடப்பட்ட பாடல் என்று நினைத்து எழுதி விட்டன. வங்காள மொழி என்று கூடத் தெரியாமல், சில பத்திரிகைகள் இதை ஹிந்திப் பாடல் என்று கூட எழுதின. இதை அறிந்து தாகூரே அப்போது வருத்தப்பட்டார்.



ஒரு பாடலைப் பற்றிப் பலர் விமர்சிக்கலாம்.
ஆனால் அதன் அடி நாதத்தில், யாரை வைத்துப் பாடப்பட்டது என்பது, அதனை ஆக்கிய கவிஞனின் மனசாட்சிக்குத் தான் முதலில் தெரியும். எனவே தாகூரின் மனநிலை என்ன என்பதையும் நாம் முதலில் படிக்க வேண்டும்!

ஜன கன மன, அதி நாயக = மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்யும் நாயக...அவர்கள் வாழ்வையும் விதியையும் நிர்ணயிக்கும் பாக்ய விதாதா....என்று மக்கள் மனங்களில் ஆட்சி செய்வதாக, எந்த ஒரு மானிட அரசனையும் பாடியதாக இல்லை.

அரசனையும் அரசியையும் சேர்த்தே தான் எல்லா இடத்திலும் வரவேற்றார்கள். ஆனால் இங்கோ பாடலில் அரசியைப் பற்றிய குறிப்பே இல்லை!
நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்தி தான். மொத்தம் ஐந்து பத்திகள் தாகூர் எழுதினார்!
மூன்றாம் செய்யுளில் இறைவனை நேரிடையாகவே சொற்களால் குறிக்கிறார் தாகூர்! கடவுளைச் சாரதியாகக் கொண்டு, காலங்காலமாக ஓடும் நாடு என்னும் தேர் - அதன் வீழ்ச்சியும் எழுச்சியும் பற்றிப் பேசுகிறார்.

ஆங்கிலக் கவிஞர் யீட்ஸ் (Yeats) பின்னாளில் தன் பெண் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜன கன மன ஆக்கப்பட்டதின் சில தகவல்களைச் சொல்லியுள்ளார். இது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழிலும் வெளிவந்தது!
"அன்று அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட தாகூர், அருமையான பாடல் ஒன்றை இயற்றினார்.
இறைவனை நோக்கி எழுதப்பட்ட பாடல் இது. காங்கிரசாரிடம் கொடுங்கள். மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று தாகூர் சொன்னார்".
இதைக் கேட்ட நண்பர் ஒருவர், யீட்ஸ்-இடம் இந்தத் தகவலைச் சொன்னதை பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார்கள்!
ஆனால், குற்றக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கி விட்ட பின், மனதுக்குச் சமாதானம் ஆவது? ஒன்றாவது!

கேட்வே ஆப் இந்தியா (Gateway of India) என்ற இந்தியாவின் நுழைவாயில், மும்பையில் உள்ளது.
இது ஜார்ஜ் மன்னரையும், மேரி அரசியையும் வரவேற்கக் கட்டப்பட்டது தான்! அந்த வாயிலில் அவ்வாறே எழுத்துக்களும் பொறிக்கப்பட்டு இருக்கும்!
"Erected to commemorate the landing in India of their Imperial Majesties King George V and Queen Mary on the Second of December MCMXI"
இதைப் போய், எப்படி "இந்தியாவின் நுழைவாயில்" என்று சொல்லலாம்? என்று பேசிக் கொண்டா இருக்கிறோம்?

1911-இல் பாடப்பட்டாலும், இதற்கு இசை அமைக்கப்பட்டது என்னவோ 1918-இல் தான்!
தாகூரும், ஆந்திரா-மதனப்பள்ளியில் உள்ள தியோசாபிகல் கல்லூரி தம்பதிகள் - ஜேம்ஸ் எச் கசின் (James H Cousin) இருவரும், சேர்ந்து தான் பாடலுக்குப் பண் அமைத்தார்கள் (Notation)! அதற்குப் பின்னர் தான் பாடல் பெரும் ஹிட் ஆனது!
சுருக்கமான அதே சமயம் கம்பீரமான இசை கொண்ட பாடல் என்பதால் மேலும் பிரபலமானது. ஜெயஹே ஜெயஹே என்பது இன்னும் தூக்கிக் கொடுத்தது.

நேதாஜியின் இந்திய தேசியப் படை (INA), இதைத் தனது கீதமாகக் கொண்டது!
1946-இல் காந்தியடிகளும் ஜன கன மன, துதிப்பாடல்களைப் போல தேசியத்துடன் இணைந்த பாடலாக ஆகி விட்டது என்று கூறி மகிழ்ந்தார்.


Capt Ram Singh Thakur playing the National Anthem
in the presence of Mahatma Gandhi.




அதே நேரம், பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் எழுதிய வந்தே மாதரம் பாடலும் நல்ல ஹிட்! தாகூரே இந்தப் பாடலை வரவேற்று பல இடங்களில் பேசியுள்ளார்.
ஆனால் அதில் மதம் குறித்த சில வெளிப்படையான சொற்கள் இருப்பதால், தேசிய கீதமாக அதை ஆக்கக் கூடாது என்று சில தேசியவாதிகள் பிரச்சனை எழுப்பினார்கள்.
இதனால் வலதுசாரி தேசபக்தர்கள் சிலரும், எதையோ எதிர்க்கப் போய், தாகூரின் கீதத்தை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது தான் பரிதாபம்!

மேலும் Band வாத்தியத்தில் வந்தே மாதரம் இசைப்பது சற்றே கடினம்.
Band இசை என்பது ராணுவத்துக்கு மிகவும் தேவையான ஒன்று! நாட்டின் கீதத்தை உள்நாடு, வெளிநாடு என்று பல இடங்களில், Band-இல் வாசிப்பது இன்றியமையாத வழக்கம்!

கவிஞர் இக்பாலின் சாரே ஜஹான் ஸே அச்சா என்ற அருமையான பாடலும் போட்டியில் இருந்தது. அது சற்றுப் பெரிய பாடல். ஆனால் இசையோ அமர்க்களம்!

சுதந்திரம் பெற்ற பின், இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு நிர்ணய சபை (Constituent Assembly), தேசிய கீதத்தை முடிவு செய்தது!
இதோ சபை விவாதங்களின் சுட்டி!
ஜன கன மன தேசிய கீதமாக உதித்தது!
அதே சமயம், வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்தின் ஆத்ம நாதம் - எனவே இது தேசியப் பாடலாகத் தேர்வு செய்யப்பட்டு, தேசிய கீதத்துக்கு இணையான மதிப்பு அளிக்கப்பட்டது!

இன்று உலகின் பல இசைக்கருவிகளில் நம் தேசிய கீதத்தை இசைக்க இயலும்! அதுவும் Band இசை! அதில் வெளுத்த வாங்க நம் தேசிய கீதத்தை மிஞ்ச எந்த கீதத்தாலும் முடியாது!
அமெரிக்க கடற்படை (US Naval Band) நம் கீதத்தை வாசிப்பதை இங்கு கேளுங்கள்!


2005இல், தேசிய கீதத்தில் இன்னொரு புதிய சர்ச்சை முளைத்தது.
சிந்து என்று கீதத்தில் வருகிறதே! அது இப்போது பாகிஸ்தானில் அல்லவா உள்ளது? அதைப் போய் நாம் எப்படிப் போற்றிப் பாட முடியும்?
"சிந்துவை" எடுத்து விட்டு, "காஷ்மீரம்" என்ற சொல்லைப் போட்டு விடுங்கள் என்று வாதிட்டார்கள்!

உச்ச நீதிமன்றம் வழக்கைக் கேட்டு விட்டு,
சிந்து என்பது கலாச்சாரம், பண்பாடு, மக்கள் ஆகிய இவற்றைத் தான் குறிக்கும்.
வெறும் பல ஆயிரம் ஏக்கர்கள் கொண்ட மண்ணை மட்டும் அல்ல!
சிந்து நதியும், சிந்தி மக்களும் இந்தியக் கலாச்சாரத்தில், பெரும் பங்கு வகிப்பவை!
எனவே தேசிய கீதத்தைத் துளியும் மாற்றத் தேவை இல்லை என்று தீர்ப்பு அளித்தது!


ஒரு பாடலின் ஆத்மா-வைப் பார்ப்பதை நாம் அனைவரும் கொஞ்சம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!

அதில் வரும் வார்த்தைகளையோ, இல்லை கால கட்டத்தையோ "மட்டும்" பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கத் தேவையில்லை!

வரும் தலைமுறையை, அது எப்படி உற்சாகப்படுத்தும் என்ற சிந்தனை இங்கு மிகவும் முக்கியம்! அப்படி எல்லாம் பார்த்தால்,
ஜன கன மன அதி நாயக - மக்களின் மனங்களில் அதி நாயகமாக, என்றென்றும் ரீங்காரம் இட்டுக் கொண்டு தான் இருக்கும்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே!!!



சில சுட்டிகள்:
தேசிய கீதம் - தமிழில், பொருளுடன்! நண்பர் குமரன், முன்னொரு முறை இட்ட இடுகை
வந்தே மாதரம் - பாரதியாரின் மொழிபெயர்ப்பு

வெள்ளைக்கார பெண்ணொருத்தி, சொல் ஒரு சொல்லாய், சொல்லிக் கொடுக்கும் ஜன கன மன!


சியாச்சென் (Siachen) பனிப்பாறைகளில் - ஜன கன மன முழக்கம்!


ஜன கன மன - பல வாத்தியங்களில் முழக்கம்!


References:
Meaning of the National Anthem at Nation Portal of India, Government of India.
http://india.gov.in/knowindia/national_anthem.php


Are we still singing for the Empire? - by Pradip Kumar Datta
http://www.sacw.net/DC/CommunalismCollection/ArticlesArchive/pkDatta092004.html

How the anthem was set to music? - An article from The Hindu -
http://www.hindu.com/mag/2006/03/19/stories/2006031900120400.htm

Tagore's undying allegiance to India & Jana Gana Mana
http://homepages.udayton.edu/~chattemr/janaganamana.html

Capt Ram Singh Thakur playing the National Anthem in the presence of Mahatma Gandhi.
http://www.tribuneindia.com/2002/20020504/windows/main2.htm
Read more »

பூரம்2: கோவிலில், காதலியின் மடியில் காதலன்!

வாங்க இன்னிக்கி வில்லிபுத்தூருக்குப் போயி ஊர் சுத்தலாம்! அப்படியே காதலியின் மடியில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து விட்டு வரலாம்!
மதுரை பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்டு-ல இருந்து மருதைக்காரய்ங்க பஸ் ஏற்பாடு பண்ணியிருக்காய்ங்க! மதுரையில் இருந்து ட்ரெய்னில் விருதுநகருக்கு போயி, அங்கிருந்தும் வில்லிபுத்தூருக்கு வரலாம்-ல!

இன்று திருவாடிப் பூரம்!
ஆண்டாள் அவதார தினம்! (இந்த ஆண்டு, Aug 15, 2007)
Happy Birthday Kothai! அடியே கோதை, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அவள் பிறந்த நாள் அன்னிக்கி, ஊரே ஒரே கோலாகலம்! பெரிய தேரு வேற! விதம் விதமா விழா!
* ஐந்து கருட சேவை
* மடித்தல சேவை
* புஷ்ப பல்லக்கு
* ஆண்டாள் திருத்தேர்
* முத்துக்குறி் உற்சவம்...

இப்படிப் பல கொண்டாட்டங்கள்...
வாங்க மண் வாசனையோடு, ஜாலியா ஊர் சுத்தலாம்! இந்தப் பதிவில் விளக்கங்கள் எல்லாம் அவ்வளவா கிடையாது...
வில்லிபுத்தூரும், விழாவும், விதம் விதமான படங்களும் தான்!

வில்லிபுத்தூர் கோபுரம் - தமிழக அரசு முத்திரை



கி.பி. 716 - நள வருடம் - ஆடி மாதம் - எட்டாம் நாள் - சுக்ல பட்சம் - பஞ்சமி திதி - செவ்வாய்க் கிழமை - பூர நட்சத்திரம் - துலா லக்னம்
ஆண்டாள் ஐந்து வயதுக் குழந்தையாய், பூமித் தாயின் அம்சமாய்,
பட்டர் பிரான் கண்டெடுக்க, திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள்!

அப்படி என்ன, அவளை எல்லாரும் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுறாங்க?
பெரியாழ்வார் பொண்ணு என்பதாலா? - இல்லை!
பேரழகி என்பதாலா? - இல்லை!
காதல் கவிதைகளில் வித்தகி என்பதாலா? - இல்லை?
பெரிய பெருமாளையே மணந்து கொண்டதாலா? - இல்லை! இல்லை! இல்லை! பின்ன எதுக்கு அவளுக்கு மட்டும் இவ்வளவு பெருமை?

மேலே சொன்னது எல்லாம் அவரவர் தன்னலம். அவரவர் சொந்தப் பெருமை. அவ்வளவு தான். வெறும் காதல் கவி சொல்லவா ஆண்டாள் வந்தாள்?
ஆன்மீகத்தின் கடமை என்ன? அது உலகத்து மக்களுக்கு என்னவெல்லாம் செய்யணும்?

பாதகங்கள் தீர்க்கணும் - தீர்த்த பின்,
பரமன் அடி காட்டணும் - காட்டிய பின்,
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - காட்டிய திருவடியை என்றும் இடையறாது பற்றிக் கொள்ள, வேதத்தைக் காட்டி உதவி செய்யணும்!
இந்த மூன்றையுமே செய்தது கோதைத் தமிழ்! அதான் அவளுக்கு அவ்வளவு பெருமை!

பாதகங்கள் தீர்க்கும், பரமன் அடி காட்டும்,
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதைத் தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு

பெருமான் கீதையில் விரித்து விரித்துக் கஷ்டப்பட்டுச் சொன்னதை எல்லாம் இவள், முப்பதே பாட்டில் நமக்குக் காட்டிக் கொடுத்து விட்டாளே! அதுவும் எளிய, இனிய, புரியும் தமிழில்!
அவன் தன்னைத் தானே வணங்குமாறு எல்லாரையும் அழைத்தான் - யாரும் வரவில்லை!
அவள் அந்தக் காதலனை வணங்குமாறு எல்லாரையும் அழைத்தாள் - அனைவரும் வந்தார்கள்!
ஆதலால், கீதையா, கோதையா என்றால், கோதையே சிறப்பு! :-)

நடையலங்காரம்

ஜடையலங்காரம்


கோதை பிறந்த ஒரே காரணத்துக்காக, கோவிந்தனே வந்து வாழும் ஊர் ஆகி விட்டது, வில்லிபுத்தூர்!
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதியால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்...


மொத்தம் ஒன்பது நாள் ஆடிப்பூர உற்சவம்.
வழக்கம் போல் கொடி ஏற்றம், சேனை முதலியார் புறப்பாட்டுடன் தொடங்குகிறது விழா! ஐந்தாம் நாள் விழா மிகவும் சிறப்பு!
ஏன் என்றால் ஒரே சமயத்தில் ஐந்து கருட சேவையைக் காணலாம்!
பெரியபெருமாள் என்னும் வடபத்திரசாயீ
ரங்கமன்னார்
சுந்தரராஜப் பெருமாள்
ஸ்ரீநிவாசப் பெருமாள்
திருத்தங்கல் அப்பன்...ஆகிய ஐந்து பெருமாள்களும் தத்தம் கருட வாகனத்தில் ஒரு சேரக் காட்சி!

ஏழாம் நாள் - இந்த நாள் ஒரே ரொமாண்டிக் நாள் :-)
ஏன் என்று கேட்கிறீர்களா?
எத்தனை பேர் காதலியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கீங்க? கூச்சப்படாம சொல்லுங்க பார்ப்போம்! அப்படிப் படுத்துக் கொண்டே என்னவெல்லாம் காதல் கதைகள் பேசுவீங்க? என்னவெல்லாம் சீண்டி விளையாடுவீங்க? நீங்களே பாருங்க இந்த உலக மகா ஜோடியை!

மடி மீது தலை வைத்து, விடியும் வரை...தூங்குவோம்!

ரயில்வே ஸ்டேஷன் (தொடர்வண்டி நிலையம்) அருகில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாளும் ரங்கமன்னாரும் எழுந்தருளி, இப்படி மடித்தல சேவை (சயன சேவை) சாதிக்கிறார்கள்!

ஒன்பதாம் நாள் (ஆடிப்பூரம் அன்று) திருத்தேர்! இது மிகவும் பெரிய தேர்! ஆயிரம் சிற்பங்கள் கொண்டது! எட்டுச் சக்கரம், ஐந்து அடுக்கு, 81 தூண்கள் கொண்ட தேர்!

பத்தாம் நாள் - விழாவின் ஹைலைட் - Dance Drama - அரையர் சேவை!
முத்துக்குறி உற்சவம் என்பார்கள் இதை. சிங்கம்மாள் குறடு என்ற ஒரு இடத்தில் தான் இது நடக்கும்!
தலைவியின் அம்மா, தன் பெண், பெருமாள் மேல் காதல் கொண்டு, இப்படி உருகி உருகி மெலிகிறாளே என்று ஏக்கப்படுவாங்க! அடே இரக்கம் இல்லாத பெருமாளே-ன்னு காய்வாய்ங்க.

வாணுதல் இம் மடவரல், உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள், விறல்
வாணன் ஆயிரந்தோள் துணித்தீர், உம்மைக்
காண நீர் இரக்கம் இல்லீரே.


பின்னர், காட்டுவிச்சி என்னும் குறத்தி வந்து முத்துக்குறி சொல்லுவா. அது இன்னா முத்துக்குறி? முறத்தில் முத்தைப் பரப்பி, பாடிக்கிட்டே, எண்ணி என்ணிக் குறி சொல்லுவா!
மாலையில் தொடங்கி இரவெல்லாம் விடிய விடிய நடக்கும்!

பின்னிய கூந்தல் கருநிற நாகம்..

தட்டொளி-கண்ணாடி சேவை


சவுரித் திருமஞ்சனம்

அரையர்களே, தங்களை அலங்கரித்துக் கொண்டு, தாளங்கள் தட்டி, தமிழ்ப் பாசுரங்கள் இடையே முழங்க, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்!
இதுக்குன்னே ஆண்டாள் போட்டு வரும் ஆடை என்ன தெரியுமா? நீங்களே பாருங்க! (இந்தக் காலச் சுடிதார் போல ஒரு உடை :-)



ஆண்டாளுக்குச் சார்த்தப்படும் மாலையோடு, ஒரு பொம்மைக் கிளியும் சார்த்தப்படுகிறது. இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.
கிளி மூக்கு = மாதுளம் பூ;
கிளியின் உடல் = மரவல்லிக் கிழங்கின் இலை;
இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;
கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;
கிளியின் கண் = காக்காய்ப் பொன்.
கட்டுவதற்கு வாழை நார்;
இப்படித் தினமும் தயாராகிறது ஆண்டாளின் கிளி.

நாமும் அந்தக் கிளியாய், அவள் தோளில் என்றும் தங்கி, கோதைத் தமிழ் பேட்போம்!
வில்லிபுத்தூர் விழா பார்த்து முடிச்சாச்சு! பேக் டு மதுரை! எல்லாரும் வண்டியில் ஏறி உட்காருங்க!

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து,
ஆழ்வார் திருமகளா ராய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

(திருமஞ்சனப் படங்களுக்கு மிகவும் நன்றி: adiyen b_senthil)

Read more »

Thursday, August 09, 2007

பூரம்1: தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை!

ஆசை, தோசை, அப்பளம், வடை என்று குழந்தைகள் விளையாடும் போது சொல்வதைக் கேட்டுள்ளீர்களா? சில சமயம் பெரியவங்க கூட ஆசை தோசை என்பார்கள்! ஏன்? ஆசைக்கும் தோசைக்கு என்ன கனெக்சன்?
சரி, அதெல்லாம் விடுங்க.
இங்கே எத்தனைப் பதிவர்கள், தங்கச்சி ஆசைப்பட்டுக் கேக்க, ஒரு அண்ணனாய் நீங்க வாங்கிக் கொடுத்திருக்கீங்க?
வாங்கிக் கொடுத்தீங்களா,இல்லை நல்லா ஓங்கிக் கொடுத்தீங்களா?:-)

பாசமலர் சிவாஜி-சாவித்திரி, "தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி" பாட்டு பாடும் டி.ராஜேந்தர் லெவலுக்கு எல்லாம் நீங்க இறங்கி யோசிக்க வேண்டாம்! தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுத்திருக்கீங்களா? இல்லையா??
நீங்க பேச்சிலர்-னா, சும்மா, கூச்சப்படாமச் சொல்லுங்க!
கல்யாணம் ஆகியிருந்தா, சும்மா, பயப்படாமச் சொல்லுங்க! :-)

ஆனா இன்னிக்கி நாம பாக்கப் போற கதை, கொஞ்சம் வித்தியாசமானது!
தங்கையோ எட்டாம் நூற்றாண்டு!
அண்ணனோ பதினோராம் நூற்றாண்டு!

ச்சே....இது எப்படிச் சாத்தியம்? அச்சோ....என்னை அடிக்க வாரீங்களா?
வ.வா.ச-வில் எழுதுவதால், இங்கேயும் கலாய்க்கத் தொடங்கி விட்டேன் என்று கும்ம வரீங்களா? பொறுமை! பொறுமை! மேலே படியுங்கள்!


அவள் ஒரு தங்கை - மாலை இட்ட மங்கை - நளினம் கொஞ்சும் நற்குண நங்கை! பாண்டி நாட்டாள் - தமிழ்ப் பாட்டாள்!
காதல் கவிதைகள் புனைவதில் அவளை மிஞ்ச உலகில் யாரும் கிடையாது!
அவளுக்கு அப்பா மட்டும் தான். அம்மா இருந்திருந்தால் அவள் வயதுக்குப் பல விஷயம் பேசி இருப்பாள். ஆனா அதுக்காக மனசுக்குப் பூட்டு போட்டு வைக்க முடியுமா?...அதுவும் கவிதைகள் ஊற்றெடுக்கும் கங்கை உள்ளத்துக்கு?

அவள், தன் மனதை, ஒரு மன்னனுக்குப் பறிகொடுத்தாள்.
அவனோ குழல் அழகன், கண் அழகன், வாய் அழகன்,
கொப்பூழில் எழு கமலப் பூ அழகன்! தன்னை அன்பால் நாடி வந்த எவரையும், எந்தப் பேதமும் காணாது காப்பவன்!
ஆனால் அவனை அடைவது என்னமோ அவ்வளவு சுலபமான விஷயமாகத் தெரியவில்லை! கழுவும் மீனில் நழுவும் மீன் என்பார்களே! அது போல!

பாடி ஆகி விட்டது, மாலை சூடி ஆகி விட்டது!
தூதும் விட்டு விட்டாள், நோன்பும் நோற்று விட்டாள்!
ஹூஹூம்....ஒன்றுமே நடக்க வில்லை! தந்தையின் உதவியும் அவளுக்குப் பெரிதாக உதவவில்லை! எல்லாம் காதல் படுத்தும் பாடு!
அவன் வியர்வையிலும், எச்சிலிலும் கூடத் துளசி மணமே தெரிந்தது அந்தப் பேதைப் பெண்ணுக்கு!

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை அல்லவா? காதலுக்கும் தெய்வம் தானே துணை! ஓ...அதனால் தான் கோவில்களில் இப்போதெல்லாம் அதிக அளவில் இளைஞர், இளைஞி கூட்டங்களோ? கற்பூர ஜோதிக்குப் பதில் காதல் ஜோதிகளோ? :-))


மதுரைக்கு அருகில் உள்ள ஊர், திருமால் இருஞ் சோலை; அழகர் கோவில்-னு சொன்னா இன்னும் நல்லாத் தெரியும்! ஏற்கனவே காதலில் வெற்றி பெற்ற முருகன் கூட அங்கு தான் இருக்கிறான்! சரியான இடம் தான் மருதகாரய்ங்களுக்கு!
அங்கு தோசைப் பிரசாதம் மிகப் பிரபலம்!
அங்கு ஆசைப் பிரசாதம் பெற, வேண்டிக் கொள்கிறாள் இந்தப் பேதை!

"கள்ளழகரே, கள்ளழகரே! என் காதலைக் கனிவித்துக் கொடு!
உனக்கு நூறு தடா சர்க்கரைப் பொங்கலும், நூறு தடா வெண்ணையும் நேர்ந்து விடுகிறேன்!
(தடா என்றால் பாத்திரம் என்று அர்த்தம்...நீங்க அரசியல் பற்றியெல்லாம் ஏதும் தப்பா நினைச்சிக்காதீங்க :-)
நீ உண்ட பின், அதை உன் அடியவர்கள் எல்லாம் உண்டு, சேஷமாக வாழட்டும், சேமமாக வாழட்டும்! "
நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில்
சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங் கொலோ

(- நாச்சியார் திருமொழி)

வெண்ணெய், அதை உருக்கி நெய், அதையே ஊற்றி அக்கார அடிசில்! - என்ன சாமர்த்தியமான வேண்டுதல் பாருங்க :-)
அக்காரம்=சர்க்கரை; அடிசில்=சோறு/பொங்கல்;
அக்கார அடிசில் = சர்க்கரைப் பொங்கல்!
இதைக் கேட்டவுடன் சர்க்கரையாய்க் கரைந்து விட்டார் கள்ளழகர்...
அவ்வளவு தான்...கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா, என்று அவள் கேட்டதைக் கொடுத்து விட்டார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது?
மருத கள்ளழகரை வேண்டிக்கிட்டா காதலில் உடனே வெற்றி!

பதிவுலக நண்பர்களில் காதலர்கள் யார் யாரு இருக்கீங்க? கை தூக்குங்க பார்க்கலாம்! மதுரை அழகர் கோவிலுக்கு டிக்கெட் எடுக்கணும்ல; அதான் கேட்டேன்! :-))


ஆனாப் பாருங்க....ஊர் மெச்ச, உலகம் போற்ற, நம்பிக்கு மாலையிடவில்லை நங்கை! அதான் தம்பதிகள் ஏற்கனவே மாலை மாற்றிக் கொண்டார்களே வில்லிபுத்தூரில்...இன்னும் என்ன? :-)
திருவரங்கத்தில் நம்பியிடம் சர்க்கரைப் பொங்கலாய் கரைந்து விட்டாள் நங்கை!
அவன் பாம்புப் படுக்கையில் மெல்லத் தன் காலை வைத்து,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி....அவன் மலர் மார்பைச் சேர்ந்து விட்டாள்.
பாம்பின் மேல் நாம் எல்லாம் கால் வைத்தால் பதறுவோம்! படையும் நடுங்குவோம்! ஆனால் அவள் ஏதோ ஏக்கமாய் முணுமுணுத்துக் கொண்டே ஏறிவிட்டாள்! அந்த ஏக்கத்தைக் கண்ட பச்சை மாமலைப் பாம்புக்கு, "மனதில் ஓர் எண்ணம்"!

சரி....அப்போ அவளுடைய வேண்டுதல்? - அவ்வளவு தான், அம்போ!!!
காந்திக் கணக்கு என்பார்களே - அதுவா? :-)
அம்மா இருந்திருந்தா நிறைவேத்தி வைச்சிருப்பா! அப்பாவுக்கு மகளைப் பிரிந்த துக்கமும், பாட்டெழுதும் பணியுமே சரியாகப் போய்விட்டது!


மூன்று நூற்றாண்டுகள் கழிந்து விட்டன!
ராமானுசர் வந்துதித்த கால கட்டம். அவர் ஆதிசேஷன் என்னும் அந்தப் பாம்பின் அம்சம்.
பழுத்த துறவி...ஆனால் படிப்பதோ காதல் கவிதை! - திருப்பாவை என்னும் காதல் கவிதை! திருப்பாவை ஜீயர் என்றே பெயர் அவருக்கு!

அரங்க மாநகரத்தில் அன்று பெருவிழா.
கோவிலில் அரங்கனுக்குத் தமிழை ஓதுகிறார்கள். அப்போது இந்த நாச்சியார் திருமொழியையும் சேர்த்துத் தான் ஓதுகிறார்கள்! "நூறு தடா" என்னும் வரிகள் வரும் போது ராமானுசருக்கு "தடார்" என்று ஒரு கலக்கம்!
அச்சோ! கோதையே சொன்னதைச் செய்யாமல் போனாளே! வாய்ச் சொல் வீரமோ என்று உலகத்தார் யாராச்சும் நாளை சொல்லி விட்டால், பழி யாருக்கு?
பதறினார்....துண்டை உதறினார்....எழுந்தோடினார்!
- எங்கே? நேரே மதுரை அழகர் கோவிலுக்குத் தான்!

நூறு தடா வெண்னெய், நூறு தடா சர்க்கரைப் பொங்கல்.....
கல்யாண சீர் வரிசைப் பாத்திரங்களில் எப்படி நிரப்புவார்களோ, அப்படி நிரப்பினார்கள். சுந்தர ராஜப் பெருமாள் என்னும் மாலிருஞ்சோலை நம்பிக்கு, ஆண்டாளின் நேர்ச்சையாக,
அவள் பெயரும் நட்சத்திரமும் சொல்லிக், கோதையின் சார்பாகச் சமர்பித்தார் அண்ணல்! - வேண்டுதல் நிறைவேறியது! கோதையின் வாக்கும் மெய்யானது!
காதலே ஜெயம்! ஜெயிக்க வைத்த மதுரை நம்பிக்கு ஜெயம்! என்று அனைவரும் ஆனந்தப்பட்டார்கள்.

ஆனால் ராமானுசருக்கு மட்டும் ஏனோ, ஆண்டாளைப் பார்க்க வேண்டும் போல் ஒரு உணர்வு!
"அம்மாடி...உன் ஆசை இதோ பூர்த்தியாகி விட்டது. இன்னும் என்ன ஒரே ஆழ்ந்த சிந்தனை? சிரி தாயி..." என்று சொல்ல வேண்டும் போல் ஒரு உந்துதல்...மதுரையில் காணிக்கையைச் செலுத்தி முடித்து, வில்லிபுத்தூருக்கு மீண்டும் ஒரே ஓட்டம்!

வில்லிபுத்தூர் கோவிலுக்குள் அவர் நுழைந்தது தான் தாமதம். அவருக்கு என்ன உணர்ச்சிகள் மனத்தில் ஓடினவோ, அதே உணர்ச்சிகள் அனைத்தும் கல்லில் சிலையாய் நிற்கும் ஆண்டாளுக்கும்!
"நம் கோயில் அண்ணன் வந்தாரே", என்று அர்ச்சகர் மேல் ஆவேசித்துச் சொன்னாள்! கருவறையில் இருந்து ஓடி வருகிறாள்...அர்ச்சகரின் உருவில்!..தன் புதிய அண்ணனை வரவேற்க! எல்லாருக்கும் ஒரே திகைப்பு!
அந்த அர்ச்சகருக்கு நல்ல நாளிலேயே தமிழ் அவ்வளவாக வராது! இன்றோ மடை திறந்த வெள்ளமாய் கவி பாடி ஓடி வருகிறார். வருபவள் அவளே அல்லவா?

அர்த்த மண்டபம் தாண்டியும் வந்து விட்டாள்...ராமானுசரைக் கையால் பிடித்து அழைத்து, அண்ணா என்று அன்பு காட்டினாள் கோதை!
எட்டாம் நூற்றாண்டுத் தங்கையும், பதினோராம் நூற்றாண்டு அண்ணனும் அளவளாவி மகிழ்ந்தார்கள்!

எதுக்கு ஆண்டாள் ராமானுசரைப், போயும் போயும், அண்ணா என்று கூப்பிட வேண்டும்?
ரக்ஷா பந்தன் - அதாங்க ராக்கி - கையில் கட்டி விடுவாங்களே - ஒடனே சிஸ்டர் ஆயிடுவாங்களே...அப்ப அண்ணன்கள் எல்லாரும் என்ன பண்ணுவாய்ங்க? தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுப்பாங்க!
அட, நம்மூரு கல்யாணத்துல கூட எடுத்துக்குங்க!
மணப்பெண்ணின் சகோதரன் தான், காசி யாத்திரைக்குக் கூட வரான், கால் கழுவி விடறான், பொரி வார்த்து பெண்ணைக் கொடுக்கறான்! - இப்படியான அண்ணன் தங்கை உறவு காலம் எல்லாம் தொடரும் ஒன்று!
ஒவ்வொரு பண்டிகைக்கும் அண்ணன் வீட்டுச் சீரைக் கேட்கும் தங்கச்சிங்க யாராச்சும் இருக்கீங்களா? :-)

காதலுக்குக் கண் தானில்லை! - ஆனால்
அன்புக்கோ காலமே இல்லை!! - நூற்றாண்டாவது? ஒன்றாவது?

இன்றும் வில்லிபுத்தூர் ஆலயத்தில் அர்த்த மண்டபதையும் சேர்த்து தான், கருவறையாகவே கருதப்படுகிறது! அங்கு ஆண்டாள் கால் பதித்த காரணத்தால்! அதற்கு முன்பே நாம் எல்லாம் நின்று விட வேண்டும், அதற்கு மேல் அனுமதி இல்லை!

இப்படி ஆண்டாளுக்கே அண்ணன் ஆன காரணத்தால் தான்....அவள் மேல் பாடப்பட்ட வாழித் திருநாமம் என்னும் பாட்டில்,
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே என்று பாடினார்கள்!
பெரும்பூதூர் மாமுனி = ராமானுசர்
அவருக்கு பின் ஆன தங்கை = ஆண்டாள்...திருவடிகளே சரணம்!


அடியே கோதை...
இன்னும் கொஞ்ச நாளில் உன் பிறந்த நாளடி! திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்த அழகியே...உனக்கு மட்டுமா பிறந்த நாள்? எங்கள் பாரத தேசமும் இதே நாளில் தானே அன்று புதிதாகப் பிறந்தது!
(இந்த ஆண்டு Aug 15, அன்று ஆடிப் பூரம் வருகிறது)
அதை ஒட்டி, ஆடிப் பூரம் - தொடர் பதிவுகளாய் - உன்னைப் பலப்பல கோணங்களில் காண ஆசை! அதுக்கு வில்லிபுத்தூர் வரப் போகிறோம்!
இதோ, உனக்கு பிறந்த நாள் பரிசுகளாய், பதிவுகள், தொடரும்...
Read more »

Wednesday, July 18, 2007

நீங்க குளிக்கணும்னா உக்கமும் தட்டொளியும் தேவையா?

உக்கம்-னா விசிறி, தட்டொளி-ன்னா கண்ணாடி! நீங்கள் குளிப்பதற்கு இவை இரண்டும் தேவையா? ஆம் என்றால் ஏன்? - இது தான் இன்றைய கேள்வி!
கேள்வியை வேணும்னா கொஞ்சமா மாற்றி யோசிச்சுப் பாருங்க! நம்மைக் காலங் கார்த்தால அம்மா எழுப்பி விடறாங்க...என்ன செய்வீங்க?

அடப் போம்மா-ன்னு முரண்டு புடிச்சித் திரும்பிப் படுப்பீங்க! விடாப்பிடியா எழுப்பறாங்க!...........சரி...எழுந்தாச்சு!
எத்தனை பேர், நேராக் கண்ணாடி முன்னாடி போய் நின்னு, தலைமுடியை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுவீங்க?
டேய் சங்கரா, சந்து முனையில் போய் ஒரு குடம் தண்ணீர் புடிச்சிக்கிட்டு வாடா-ன்னு சொல்லுறாங்க! இப்ப என்ன செய்வீங்க? கண்ணாடி முன்னாடி போவீங்களா, மாட்டீங்களா? மறைக்காம உண்மையச் சொல்லுங்க! :-)


இன்னும் காய்ச்சல் தீரலையா? இன்னுமா உளறிக் கொண்டு இருக்கே? என்று கேட்கத் தோணுகிறதா? பொறுமை! பொறுமை!!
நம்ம நாமக்கல் சிபி, திருப்பாவைப் பாசுரங்கள் பொங்கப் பொங்க, ஒரு தொடர் கதை போட்டிருக்காரு! அவசியம் பாருங்க! அதைப் பார்த்தவுடன், என் உள்ளம் ஏனோ கிறங்கத் தொடங்கி விட்டது! இனிய தமிழ் என் உள்ளத்தில் பொழிந்து வழிகிறது!

அது ஏனோ தெரியவில்லை, ஆண்டாள் என்றாலோ, திருப்பாவை என்றாலோ, அப்படி ஒரு ஈர்ப்பு, காந்த சக்தி!
காதலா? பக்தியா?
இன்பத் தமிழா? இறை அன்பா? இசையா?
ஒரு பெண்ணின் கனவா? கதையா? அழகா? அலங்காரமா? - எது? எது?
இன்று பூர நட்சத்திரம் (ஆடிப் பூரம், அவள் பிறந்த நாள், அடுத்த மாதம்...) ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காணலாம் வாங்க!


எல்லாப் பெண்களும், சிற்றஞ் சிறுகாலே, மார்கழி நீராடப் போறாங்க!
ஒருவர் இன்னொருவரை அழைக்க, இன்னொருவர் இன்-இன்னொருவரை அழைக்க....
இப்படியே எல்லாரும் பாடிக்கிட்டே போறாங்க...போயி கண்ணன் வீட்டு வாசலில் நிக்கறாங்க!
பலமாக் குரல் கொடுத்து, எல்லாரையும் எழுப்பறாங்க!

கேள்வி நம்பர் 1:
பெண் அடியவர்கள், அன்பர்கள் எல்லாம் இன்னும் நீராட வில்லை!
நீராடாமலேயே, தமிழ் வேதமான, பிரபந்தத்தை ஓதுகிறார்கள்! கண்ணன் ஆலய வாசலிலும் குளிக்காமலேயே நிற்கிறார்கள்! - ஆண்டாளே இப்படிச் செய்யலாமா? இது சரியா? சொல்லுங்கள்!:-)))
நீங்க உங்க வீட்டில் இப்படிப் பண்ணா, குளிக்காம கோவிலுக்கு வந்தா, அம்மா அப்பா மனைவி உங்களை சும்மா விடுவார்களா?:-)))


எல்லாரும் கண்ணனின் காதலி, நப்பின்னையை எழுப்பறாங்க! எழுப்பி.....
நப்பின்னை நங்கையே, கண்ணன் எங்கள் தலைவன்! உமக்கும் எமக்கும் அவனே நாயகன்!
அவன் தன்னுடைய அன்பினால் எங்களை எல்லாம் நீராட்ட வேண்டும்!
எங்கள் பிறவி என்னும் பிணியை அவன் அருள் என்னும் நன்னீர் கொண்டு கழுவி, எங்களைக் கடைத்தேற்ற வேண்டும்.
அவனை எழுப்பி, எங்களுடன் அனுப்பி வையம்மா...
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

(திருப்பாவை - 20ஆம் பாசுரம் - முப்பத்து மூவர் என்று தொடங்கும் கவிதை - பாடலைக் கேட்க, சொடுக்கவும்)


உக்கம்-னா விசிறி, தட்டொளி-ன்னா கண்ணாடி!
விசிறியும் கண்ணாடியும் கையில் கொடுத்து, எங்களை நீராட்ட அவனை அனுப்பி வை, தாயே!
கேள்வி நம்பர் 2:
நீராடுவதற்கு எதற்கு விசிறியும் கண்ணாடியும்?
கேள்வி நம்பர் 3:
அப்படியே தேவை என்றாலும், இந்தக் கண்ணாடியும் விசிறியும் யாருக்குத் தேவை?
அவனுக்கு நீ கொடுத்து அவனை அனுப்பி வை என்கிறார்களே!
அப்படிக் கொடுத்து அனுப்பி வைப்பது, அவனுக்கா? எங்களுக்கா??

இது பற்றிப் பின்னூட்டங்களில் விவாதிக்கலாமே! நீங்கள் அறிந்தவரை உங்கள் கருத்து என்ன என்று சொல்லி தெளிவு படுத்துங்களேன், ப்ளீஸ்!
அன்புக்கு நன்றி!
Kannabiran Ravi Shankar


இது பற்றி அன்பு நண்பர் ஜி.ராகவன், ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட திருப்பாவை தொடரில், பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறுத்த குறுக்குடைய நப்பின்னை நாயகியே துயில் எழுவாய்! அப்படியே உனது மணவாளன் கண்ணனுக்கு விசிறிடுவாய். அந்தக் குளிர் காற்று தீண்டவும் அவன் எழுவான். அப்படி எழுகையில் அவன் முகம் காட்டக் கண்ணாடியைத் தருவாய். அவன் இப்பொழுதே எழுந்தால் தான் பாவை நீராடி அருள் பெறுவாய் எம்பாவாய்!

ராகவனின் இந்தச் சிந்தனை வித்தியாசமான ஒன்று! - அது மிக நன்று!
இருப்பினும் சீர் தூக்கிப் பார்த்தேன்! ஏனோ சரியாகப் பிடிபடவில்லை!

1. நீங்க தூங்கும் போது உங்களுக்கு விசிறினா, நீங்க மேலும் தூங்குவீங்களா? இல்லை எழுந்து கொள்வீர்களா? - ஹிஹி...குளிர் காற்றில் இன்னும் இழுத்துப் போர்த்தித் தான் தூங்குவீங்க இல்லையா? அப்படியிருக்க, ஒருவரை விசிறி எழுப்ப முடியுமா?

2. எழுப்பி விட்டவுடன், கண்ணாடி பார்த்து தலை திருத்திக் கொள்வீர்களா?

3. எழுந்தவுடன் தருவதற்குப் பல பொருட்கள் உள்ளன! பெட் காபி (:-), பல் விளக்கம், குளிக்க எண்ணெய் இல்லை முகப் பூச்சு, நெற்றித் திலகம்....இதை எல்லாம் சொல்லாமல், உக்கமும் தட்டொளியையும் மட்டும் ஏன் ஆண்டாள் சொல்ல வேண்டும்?

4. நோன்புக்கு வேண்டிய நெய்யுண்ணோம், பாலுண்ணோம் எல்லாம் பட்டியல் இட்டுச் சொல்கிறாள். கோல விளக்கு, கொடி, விதானம், ஆலின் இலை எல்லாம் அருளேலோ என்று வாய் விட்டுக் கேட்கிறாள்! அப்படி இருக்க உக்கமும் தட்டொளியும் கேட்பது கூட நோன்புக்குத் தானா?

இதுக்கு மேல நண்பர்கள் நீங்க தான் வந்து சொல்லணும்! அம்மா கோதை! எதுக்கும்மா இதையெல்லாம் நீ கேட்ட?
உக்கம் = விசிறி = Hair Dryer
தட்டொளி = கண்ணாடி = Hand Mirror, அதான் சின்னப் பெண் Makeup kit போலக் கேட்டிருப்பாள் என்று வீட்டில் சொல்லறாங்க! இத நான் எங்க போய் சொல்ல! நீங்களே சொல்லுங்க! :-)))
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP