Friday, December 23, 2011

கோதைத்தமிழ்08: சேவித்து @balaramanL

மக்கா, இன்றைய #PaavaiPodcast பேசப் போறது, ட்விட்டரில் பெரும் தமிழ் ஆர்வலர்! தமிழ்க் கவிதைகளில் மாறுபட்ட வடிவங்களைப் படைத்துப் பார்ப்பவர்!
யாருய்யா அது? = எறுழ்வலி பலராமன் @balaramanL

ஆகா! அது என்னா எறுழ்வலி? அப்படின்னா?
அவரோட வலைப்பூவின் பேரு அது! என்னா பொருள்-ன்னு அவரு வந்து சொல்லட்டும்! இல்லீன்னா அங்கே போய் கட்டாயம் பாருங்க:)

இதோ...உங்கள் முன்னால் நற்றமிழ் நவில...



நன்றி பலராமா! பேருக்கேத்தபடி, பலமான பேச்சு!:) என்ன மக்களே, ஐயா-வைப் பெண்கள் கல்லூரி விரிவுரையாளரா அனுப்பிச்சீறலாமா?:)


கீழ் வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான், பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து, உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலம் உடைய


பாவாய், எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு!
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய,
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்,
ஆ-வா என்று ஆராய்ந்து, அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: கிழக்கு வானம் வெளுத்துருச்சி! எருமை மாடுகளைச் சிறுவீட்டில் (கொல்லைப் புல்வெளி) மேய விட்டாச்சி!
கோயிலுக்குப் போற பொண்ணுங்களையெல்லாம் புடிச்சி வச்சிக்கிட்டு, "இருடீ, இவளும் வரட்டும்"-ன்னு உனக்காகத் தான்டீ காத்துக்கிட்டு இருக்கோம்!

துள்ளலான பொண்ணே, எழுந்துருடீ, பறையடிச்சி நோன்பு கொண்டாடும் நேரம் வந்துருச்சி!
முன்பு குதிரை அரக்கனின் வாயைப் பிளந்தவன், கொல்ல வந்த மல்லரை மடக்கியவன் - நம்ம கண்ணன்...

அவனை இங்க இருந்தே சோம்பேறித்தனமாக் கும்பிடாம, அங்கு மற்ற அடியவர்களோடு....சென்று + சேவிப்போம்!
அவன் நம்மைப் பார்த்தவுடனேயே, ஆ-வா ன்னு வியப்பும் அன்புமாக் கூப்புடுவான்!
நம் விருப்பங்களை ஆராய்ந்து அருள் செய்வான்! ஓடியா! போவோம்ம்ம்ம்ம்!



இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = சேவித்தல்!

பொதுவா, திருமால் கோயில்களில் மட்டுமே...பெருமாளைச் சேவிச்சிக்கோ-ன்னு சொல்லுறது வழக்கம்!

முருகனைச் சேவிச்சிக்கோ, சிவபெருமானைச் சேவிச்சிக்கோ, அம்பாளைச் சேவிச்சிக்கோ-ன்னு யாரும் அவ்வளவா சொல்லுறது இல்லை! ஏன்?
இவ்விடங்களில், "தரிசனம்"-ன்னு வடமொழியில் சொல்வதே பெரும்பாலும் வழக்கம்!

ஆனால் கிறித்துவம் - புனித விவிலிய (Holy Bible) - தமிழாக்கத்தில், "கர்த்தரைச் சேவித்து அவர் நிழலில் இளைப்பாறி இருப்பாய்"-ன்னு வரும்!
ஆக...இந்தச் "சேவித்தல்", சில பேரு மட்டுமே நுணுக்கமாய்க் கையாளுறாங்க! சேவித்தல்-ன்னா என்ன?

செய்தல் -> செய்வை -> சேவை -> சேவி

* சும்மா போய், இறைவனை 'லுக்கு' விட்டுட்டு வராம...
* தன்னைப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் = சேவித்தல்!

வெறுமனே 'தரிசனம்' என்பது வைணவத்தில் அவ்வளவாக இல்லை! அடியார் தொண்டு 'செய்'யணும்! அடியவர் தொண்டே ஆண்டவன் தொண்டு!
மாலை தொடுத்தலோ, கோயில் ஒழுகலோ, உணவு இடலோ, பாசுரம் சேவித்தலோ...ஏதாச்சும் ஒன்னு...
= "செஞ்சாத்" தான், 'சேவித்த' பலன் கிடைக்கும்!

செய்வை-ன்னு கலித்தொகை, புறநானூறு பேசும்!
பரிசிலர் இடத்தே இனியவை "செய்வை" -ன்னு, பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடுவாங்க!
இந்தச் செய்வை தான் -> சேவை ஆச்சு! 
"சேவா" தள் (Seva Dal)-ன்னு வடமொழியில் இருப்பதெல்லாம், இங்கிருந்து போனது தான்! அதன் மூலம் = செய்வை-சேவை!

இப்படி, இறைக் காட்சியை, அடியவர் தொண்டோடு சேர்த்துவிட்டு, செய்வை->சேவை! சேவி...என்று ஆனது!
* பெருமாளைச் சேவி-ன்னா, வெறும் "Darshan"-ன்னு நினைச்சிக்காதீங்க!:)
* மானுட சேவை செய்து, அவனையும் கண்டால் மட்டுமே "சேவித்தல்"! 
அதுவே நல்லது! அப்படியே செய்விப்போம்/ சேவிப்போம்!

நாளை, இன்னொரு பெண் பதிவர், நமக்கெல்லாம் தாய்ப் பதிவர்...பேசுவார்! வர்ட்டா?:)
அனுமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!:)

11 comments:

  1. வெறுமனே 'தரிசனம்' என்பது வைணவத்தில் அவ்வளவாக இல்லை! அடியார் தொண்டு 'செய்'யணும்! அடியவர் தொண்டே ஆண்டவன் தொண்டு!

    சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பெய்தாற்போல்
    மாதவிப்பந்தலில் இனிமையான பகிர்வுகள்..
    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. "இந்த உண்ணா நோன்பு கடவுளுக்கு இருக்கிறதுங்க" நல்ல நகைச்சுவை உணர்வு திரு பாலராமனுக்கு:-)கண்ணபிரானுக்கு மூத்த சகோதரர் என்று இவர் பெசுவதிலிருந்தே தெரிகிறது! ரொம்ப நல்லா விளக்கியிருக்கீங்க பலராமன்.
    KRS, பறையடிச்சு நோன்பு கொண்டாடும் நேரமா அல்லது பறையை (தொண்டு செய்யும் பேற்றினை) பெற்று வணங்கும் நேரமா?
    amas32

    ReplyDelete
  3. உண்மையிலேயே இந்த #PaavaiPodCastஇல் பங்கேற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி இரவி.
    'எறுழ்வலி' என்றால் 'Hero' என்று பொருளாம்! ;) http://bit.ly/e93nRY

    @amas32 நன்றி தோழரே! :)

    ReplyDelete
  4. பலராம் அண்ணா என்னோட காலேஜ் சீனியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்... தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் தமிழ் மீடியத்திலிருந்து வந்து குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல் தடவிக் கொண்டிருந்த என்னை, கிட்டத்தட்ட அவர்கள் கேங்கில் ஒருவராகவே சேர்த்துக் கொண்டு எனக்கு நிறைய உதவிகளைப் புரிந்தவர்....

    அண்ணனோட நகைச்சுவை உணர்வு அளப்பரியது.. யாருமே சிந்திக்காத கோணத்தில் சிந்தித்து அவர் அடிக்கும் பதில் கமெண்ட்கள் பட்டையைக் கிளப்பியவை... இவ்வளவு தூரம் பழகிய நான், அண்ணனின் தமிழ் உணர்வை கல்லூரிக்காலத்திலேயே அறியாமல் விட்டது அடியேனை வருந்த வைக்கிறது.. இல்லையேல், தமிழுக்கு அண்ணன் செய்யும் தகவுகளுக்குக் கல்லூரிக்காலத்திலேயே தளம் அமைக்கக் கை கோர்த்திருப்பேன்...

    பலராம் கண்ணனுக்கு மட்டும் அண்ணனல்ல....

    ReplyDelete
  5. @பாலசுந்தர்: தம்பி, நீ என் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. கல்லூரி காலத்தில் நான் இணையத்தில் எழுதத்தொடங்கவில்லை. எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று இப்பொழுது தோன்றுகிறது. நீ இப்பொழுது தொலைவில் இருந்தாலும் என் பதிவுகளுக்கு கருத்துகள் இடுகிறாய். அவை தான் என்னை இன்னும் நிறைய எழுதத் தூண்டுகிறது. எனவே, ஒருவகையில் நான் இப்பொழுது நிறைய எழுதுவதற்கு நீயும் ஒரு காரணமே.

    ReplyDelete
  6. கல்லூரியில் நாம் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கையே நடத்தியிருக்கலாம்... என்ன செய்ய?? காலம் கடந்து விட்டது..:( :( :( இணையத்தின் மூலம் மேலும் இணைவோம்...

    அய்யா கண்ணபிரான்(ஆயர்பாடிக்காரன் அல்ல, நியூயார்க் காரர்) அவர்களுக்கு மனங் கனிந்த நன்றிகள்..

    ReplyDelete
  7. முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்காம விட்டுட்டோமே... கோதை பசுவை விட, எருமைகளை ரொம்பப் பாட்டில் பயன்படுத்தி இருக்குறா பாருங்க... எருமையை ஏன் அவளுக்கு ரொம்ப புடிச்சுருக்கு?? அவளின் "அவனோட" வண்ணத்துல இருக்குறதனாலயா?... இல்லை அவளோட அன்பு அந்த எருமைப்பாலைப் போல கெட்டியானதுன்னா??

    இப்பத்தான்யா புரியுது ஸ்ரீவில்லிபுத்தூர்ல ஏன் பால்கோவா அவ்வளவு அருமையா இருக்குதுன்னு?? ஒருவேளை காலங்காலமாவே ஆயர்பாடி மக்கள் நிறைந்து விளங்கியதாலேயே, அங்கு பால்கோவா பிரபலமடைந்து இருக்கலாமோ...? ராஜபாளையத்துக்குப் போற வழியில, (ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் பால்கோவா வாங்கித் தின்னுட்டே ஆண்டாள் கோவில் கோபுரத்தைப் பார்த்துட்டே போறது தனிருசி..ஆண்டாளின் நந்தவனத்தை,அது கோதை வாழ்ந்த இடம் என்று அறியாமலேயே இந்த "எருமை" சுற்றிப் பார்த்து வந்தது..

    ஹைய்யா.. இனிமே எந்தப் பொண்ணுங்களாச்சும் "எருமை..எருமை"-ன்னு திட்டுச்சுன்னா ரொம்ப சந்தோஷப்படலாம்...ஹாஹ்ஹ்ஹா...

    ReplyDelete
  8. /முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்காம விட்டுட்டோமே... கோதை பசுவை விட, எருமைகளை ரொம்பப் பாட்டில் பயன்படுத்தி இருக்குறா பாருங்க... எருமையை ஏன் அவளுக்கு ரொம்ப புடிச்சுருக்கு?? அவளின் "அவனோட" வண்ணத்துல இருக்குறதனாலயா?... இல்லை அவளோட அன்பு அந்த எருமைப்பாலைப் போல கெட்டியானதுன்னா??
    ////

    ஆஹா,,,இப்படியும் சிந்திக்கலாமா?:)
    அருமை!

    ReplyDelete
  9. சேவித்தல் அருமையான சொல். சமீபத்தில் திருப்பதி சென்றிருந்தேன். அங்கேயும் தரிசனம்தான்.

    அது மட்டுமில்லாமல் சாதாரண மக்கள் கும்புடுதான். சாமியைக் கும்புடுன்னுதான் சொல்றாங்க.

    ஒருவேளை நீங்க குறிப்பிட்ட மக்களைக் கூறுகின்றீர்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. வைணவத்தில் 'குறிப்பிட்ட' மக்கள் மட்டுமில்லை 'சாதாரண' மக்களும் கும்பிடறதைச் சேவித்தல்ன்னு தான் சொல்லிப் பார்த்திருக்கிறேன். :-)

    ReplyDelete
  11. //போவான் போகின்றாரைப் போகாமல் காத்து//ஒருத்தரையும் மிஸ் பண்ணாமல் கோயிலுக்கு அழைத்துப் போயிருக்கிறாள்
    ஆண்டாள்.அப்படியென்றால் அவள் காலை மூன்று மணிக்கே எழுந்து கொண்டிருக்க வேண்டும். :)

    -"கூவுவான் வந்து நின்றோம்" தன்யாசியில் இந்த இடத்தை
    எம்.எல்.வி பாடுவது மிக அழகாக இருக்கும்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP