Friday, December 30, 2011

கோதைத்தமிழ்15: ஒல்லை @iamkarki

மக்கா...இன்னிக்கிப் பேசப் போறது ஒரு ட்விட்டர் பிரபலம்! குறும்படப் பிரபலம்! Blog பிரபலம்! - பிராப்லமோ பிராப்லம்:))
வேற யாரு? நம்ம எடுப்பட்ட பய, குஜ்ஜூ குமரன், தோழியின் தோழன் = @iamkarki தான்!:)

ஆளைப் போல் அல்லாமல், கார்க்கியின் குரலில் மென்மை, என்னைப் போலவே!:)
கார்க்கி = மென் குரல்! இன் குரல்! வசீகரமான குரல்!

அடங்கொய்யால! இவனுக்கு என்னடாத் திருப்பாவை பத்தித் தெரியும்? எந்த மடையன்டா இவனைப் பேசக் கூப்பிட்டது-ன்னு கேக்குறீயளா? ஐயோ! நானில்லை நானில்லை!:))

ஆண்டாளை யாரும் பேசலாம்! எலக்கியவாதி தான் பேசணும் என்பதற்கு தமிழ் ஒன்னும் மேட்டுக்குடியல்ல!
தமிழ் = யாவருக்கும் எட்டும் குடி = எட்டுக்குடி! கேளுங்க கார்க்கித் தமிழில் கோதைத் தமிழை!நன்றிடா! கலக்கிட்ட கார்க்கி! I enjoyed கார்க்கித் தமிழ்!:)டூயட் (Duet) முதலில் போட்டது யாரு? = ஆண்டாள்
அட, மெய்யாலும் தாங்க சொல்லுறேன்! கோதை தான் மொத டூயட் போட்டா!
இன்னிக்கி ஒரு டூயட் இல்லாம காதலே இல்லை-ன்னு ஆகிப் போச்சு! :)

இந்தப் புன்னகை என்ன விலை? = எல்லே இளங் கிளியே!
என் இதயம் சொன்ன விலை! = இன்னும் உறங் குதியோ?

அதே மெட்டில், பி.சுசீலாம்மா பாடின மாதிரியே, பாடிப் பாருங்க! ha ha ha! எப்படி இருக்கு?

கோதை போட்ட டூயட் நண்பர்களுக்கு இடையில் தான்! காதல் டூயட் அல்ல! Conversational Tunes, Dialogue Tunes-ன்னு சொல்லுவாய்ங்க!
முதலடி ஒருத்தர் கொடுக்கணும்! அடுத்த அடி இன்னொருத்தர் எடுக்கணும்!

* இந்தப் புன்னகை என்ன விலை? = என் இதயம் சொன்ன விலை!
* இவள் கன்னங்கள் என்ன விலை? = இந்த கைகள் தந்த விலை!
* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ? =  சில்லென்று அழையேன்மின்! நங்கையீர் போ-தரு கின்றேன்!

எப்படி இருக்கு ஆண்டாள் டூயட்? இது போன்று ஆங்கிலப் பாடல்களிலும் உண்டு!
Donna: I work all night, I work all day! = Group: Ain't it sad? That's too bad!
(Mamma Mia Musical)
You are sixteen going on seventeen! = I am sixteen going on seventeen
- என்று Sound of Music-இல் வருவதும் கிட்டத்தட்ட இந்த வகையே!

இது போல பாடல்கள் இப்போ பெரிய விடயமில்லை தான்! ஆனா அந்தக் காலத்தில்? யார் பாடி இருக்கா, 1200 ஆண்டுக்கு முன்னால?
பொதுவா நாட்டுப்புறப் பாட்டுகள் தான் இப்படி இருக்கும்! ஏற்றம் இரைக்கும் போதும், சுமை தூக்கும் போதும் இப்படி மாறி மாறிப் பாடுவாய்ங்க!


* மூங்கில் இலை மேலே, தூங்கும் பனி நீரே =  தூங்கும் பனி நீரை, வாங்கும் கதிரோனே!
ஏற்றம் இரைப்பது, நாட்டுப்புற வாழ்வு - இதெல்லாம் கோதை உன்னிப்பா பார்த்திருப்பாள் போல!
அதை அப்படியே இலக்கியத்துக்கு எடுத்து வருகிறாள்!* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ?
# சில் என்று அழையேன்மின்! நங்கையீர் போதருகின்றேன்!
* வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்!
# வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக!

* ஒல்லை நீ போதாய்! # உனக்கென்ன வேறுடையை?
# எல்லாரும் போந்தாரோ? # போந்தார் போந்து எண்ணிக் கொள்!
வல்-ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:

இவள்: எலே, இன்னுமாத் தூங்குற?
அவள்: ச்ச்சீ...சில்ல்-ன்னு கூப்பிடாதங்கடி...இவ்ளோ காலைல! வரேன் வரேன்!

இவள்: ஏய்...நீ எப்படிப்பட்ட தில்லாலங்கடி-ன்னு தெரியும்! எங்க கிட்ட என்ன சொல்லி டபாய்க்கலாம்-ன்னு உன் வாய் முன்னமே திட்டம் போட்டு வச்சிருக்குமே!
அவள்: உக்கும்...நான் ஒன்னியும் இல்ல! நீங்க தான் தில்லாலங்கடி!

இவள்: சரி சரி, சீக்கிரம் வந்து தொலை!
அவள்: எல்லாரும் வந்துட்டாங்களா?

இவள்: தோடா! வந்தாச்சு வந்தாச்சு, வந்து நீயே எண்ணிக்கோ!
அவள்: அன்று மதயானையை அடக்கினானே! எதிரிகளை ஒடுக்கினானே! மாயோன்...அந்தக் கண்ணன் வீட்டுக்குத் தானே போறோம்?

எல்லோரும்: ஆமாம்! தமிழ்க் கடவுளான மாயோனைப் பாடுவோம் வாருங்கள்!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = ஒல்லை!

ஒல்லை வா = வேகமா வா!
சட்-னு வா, சரேர்-னு வா ன்னு சொல்றோம் அல்லவா? அதே போல் ஒல்-என்று வா என்பதும் ஒலிக் குறிப்பு!

இன்னும் சில சொற்கள்:
* எல்லே = எலே, என்ன-லே, வா-லே-ன்னு நெல்லைத் தமிழ்/ தென்பாண்டித் தமிழ்!
* சில்லென்று = சில்-ன்னு குளிரில், சிலிர்க்க அழைக்காதே!

* போந்தாரோ? = போந்தார்! போந்து எண்ணிக் கொள்!
போதுதல் என்பது பாவையில் மறுபடி மறுபடி வரும்!
நீராடப் போதுவீர், போதுமினோ, போதராய், போதருகின்றேன், போதருமா போலே, போந்தார் போந்து = இப்படிப் பல "போதுகள்"!

போது என்றால் என்ன? = போதலா? (அ) வருதலா??
=>நீராடப் போதுவீர் = நீராடப் போகின்றவர்களே!
=>போந்தாரோ? போந்து எண்ணிக் கொள் = வந்துட்டாங்களா? வந்து நீயே எண்ணிக்கோ
அப்போ போதுதல் = போ? இல்லை வா? :)

ரெண்டுமே தான்!
போது = Move! It can be either Come or Go!
Can I come with you?ன்னும் கேட்கிறோம்! Can I go with you?-ன்னும் கேக்கறோம்-ல்ல?
அதே போலத் தான்:) முன்னிலை ஒருமை/பன்மை வினைமுற்று!

நாளைக்கு யாரு? = ஆம்ஸ்டர்டாம் ஆளு! ட்விட்டர் அறிஞ்ச அறிஞரு...தமிழ் ஆர்வலர்.....வர்ட்டா?:)

11 comments:

 1. கார்க்கி பேச்சு என்றுமே கேட்பதற்கு இனிமையானது தான். அவர் எதைப் பற்றி பேசினாலும் அதில் ஒரு சுவாரசியம் இருக்கும். நன்றி கார்க்கி. நன்றி kryes. :)

  ReplyDelete
 2. //சட்-ன்னு வா, சரேர்-ன்னு வா ன்னு சொல்கிறோம் அல்லவா? அதே போல் ஒல்-ன்னு வா என்பதும் ஒலிக் குறிப்பு!//
  இதத்தான் தமிழ்ல "உணர்வொலிக்கிளவி"ன்னு(ideophone) சொல்லுவாங்க.
  தமிழ்ல தான் உணர்வொலிக்கிளவிகள் மிகையா இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். (எ.கா) படபடன்னு பேசுறான், சுருக்குன்னு வந்துட்டான், தடதடன்னு சத்தம் வருது...

  ReplyDelete
 3. //எல்லே = எலே, வாலே-ன்னு நெல்லைத் தமிழ்/ தென்பாண்டித் தமிழ்//
  ஒருமுறை "Hello" என்பதற்கு தமிழில் "வணக்கம்" தவிர வேற ஏதாவது பொருத்தமான சொல் இருக்கிறதா என்று 'வளவு' இராம.கி ஐயாவிடம் கேட்ட பொழுது "எல்லோ" என்று தமிழில் சொல்லலாம் என்றார்!!! அதற்கு இந்த "எலே" என்ற நெல்லைப் பண்பாட்டையும், "எல்லே" என்ற ஆண்டாள் மொழியையும் தான் காட்டாகக் கூறினார்!!! :)

  ReplyDelete
 4. Karky, super, as always! கார்க்கி உங்களுக்கு வசீகரா என்று உங்க அம்மா பேர் வெச்சிருக்கலாம் :-)
  இந்த பாசுரத்தில் தான் ஆண்டாளின் கூப்பாடுக்கு ஒரு தோழியாவது வாயை திறந்து பதில் சொல்லியிருக்கிறாள்.(வாயாடியிருக்கிறாள்)
  பைய என்ற நெல்லை வழக்கில் வரும் சொல்லுக்கு எதிர்பதம் ஒல்லையா?
  "எல்லோரும்: ஆமாம்! தமிழ்க் கடவுளான மாயோனைப் பாடுவோம் வாருங்கள்!"
  எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க KRS
  amas32

  ReplyDelete
 5. நன்றி பலராமன், & Amas.

  :)))

  ReplyDelete
 6. இந்த மாதிரி டூயட்கள் சிலப்பதிகாரத்திலேயே இருக்கின்றன. ஆண்டாள் டூயட் பாடினாள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் முதலில் என்று நீங்கள் கூறுவது தவறு.

  ReplyDelete
 7. GR.. sir.. you are right.. but இருக்கட்டுமே.., அதை தனியாக சொல்லிக்கொள்ளலாம்.

  ReplyDelete
 8. ஆனந்தராஜ் சார்,

  தனியாகச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. அதே நேரத்தில் ஆண்டாள் பாடியதும் டூயட்தான் என்பதும் ஏற்புடையதுதான்.

  முதலில் டூயட் பாடியவர் என்று ஆண்டாள் பெயரைச் சொன்னதால்தான் நான் மறுப்புச் சொல்ல வேண்டியதாயிற்று.

  கே.ஆர்.எஸ் அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றவர்கள் நிறைய உண்டு. அதனால்தான் சொன்னேன். வாதாடுவதற்காக அல்ல. :)

  ReplyDelete
 9. @மகிழ்வரசு
  :) நன்றி! இங்கேயே மறுத்தும் சொல்லலாம்; தவறில்லையே! கருத்துரையாடல் தானே!

  //அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றவர்கள் நிறைய உண்டு//

  ha ha ha!
  No way! I ain't that an authority!

  நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நானே பந்தல் வாசகர்களுக்குப் பல முறை சொல்லியுள்ளேன்:)
  தக்க தரவுகளோடு உரசிப் பார்த்தே கொள்ளும் பழக்கம் வரவேணும் என்பதே என் நெடுநாளைய வேண்டுகோள்!
  ------------

  ராகவா...
  சிலப்பதிகாரத்தில் இது போன்ற Duet எனும் இருநிலை மாற்றுரைத் தொடர்மொழிகள், எங்குள்ளன என்று அறியத் தாருங்களேன்!

  ReplyDelete
  Replies
  1. சிலம்பில்...இது போன்று அடுத்தடுத்த வரி Conversational Tunes இல்லை!
   Conversation உண்டு! ஆனால் "நீ ஒரு வரி-நான் ஒரு வரி" என்பது போலான இருநிலை மாற்றுரைத் தொடர்மொழி இல்லை!

   * மலையிடைப் பிறவா மணியே என்கோ என்று கண்ணகியைப் புகழும் கோவலன் உரையாகட்டும்...
   * நடந்தாய் வாழி காவேரி என்ற மாதவியோடு ஆடும் கானல் வரியாகட்டும்
   * கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன் என்னும் குரவைக் கூத்து ஆகட்டும்
   * ஆலமர் செல்வனின் வேலன் வருமாயின் என்ற குன்றக் குரவை முருகவேள் கூத்தாகட்டும்...

   பாட்டு மடை என்று "நீண்ட பத்திகள்" வருமே அன்றி...
   ஒரே பாவில், Conversational Tunes இல்லை!
   இது போன்ற ஒரு வரி மொழிகள்...நாட்டுப்புறப் பாடல்களில் மட்டுமே உண்டு!

   ஆனால் அவை தமிழ் இலக்கியத்துக்குள் ஏறாத கால கட்டம்! ஆண்டாளின் இந்தப் பாசுரம், இந்த மாற்றுரை எனும் Conversational க்கு முன்னோடி!

   ஊசல், அம்மானை போன்ற பகுதிகள் சிலம்பில் வரும்; வஞ்சிக் காண்டத்தில்!
   ஆனா அது one line - dialogue/conversation அல்ல!
   அது ஒரு விளையாட்டு; two two lines வரும்; ஒருத்தி ரெண்டு வரி பாடுவா; அதுக்கு இரண்டாமவ ரெண்டு வரி பாடுவா, பின்னாடி மூன்றாமவ dbl meaningல்ல பாடி, முடிச்சி வைப்பா; Not a casual one-one conversational;

   எப்படி அம்மானைக்கு இளங்கோ முன்னோடியோ..
   எப்படி தெள்ளேணத்துக்கு மணிவாசகர் முன்னோடியோ..
   எப்படி பிள்ளைத் தமிழுக்குப் பெரியாழ்வார் முன்னோடியோ..
   அப்படி Conversational Tunes-க்கு இந்தக் கோதையின் பாசுரம் முன்னோடி!

   Delete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP