Friday, January 06, 2012

கோதைத்தமிழ்22: பள்ளிக்கட்டு @mSathia

மக்கா, இன்று பேசப் போவது = தமிழ்க் கணிமையாளர்! தமிழ்த் தொழில்நுட்பவியலர்! தமிழ் ஆர்வலர்!
இவர் மட்டுமல்ல! இவர் மொத்த குடும்பமும் கூட!:)

கதை, கதாபாத்திரங்களை அலசுவதில் வல்லவர்! மாபாரதக் கதைமாந்தர்கள் பற்றிய ஒரு iPhone/Android App (செயலியும்) செய்துள்ளார்!
சத்தியா (எ) @msathia என்ன சொல்லுறாரு கேளுங்கோ...



நன்றி சத்தியா, அழகிய விளக்கம்! இதைச் சிங்கை வானொலியில் ஒலிபரப்பி விடலாமா?:)


அங் கண் மா ஞாலத்து அரசர், "அபிமான
பங்கமாய்", வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே,
சங்கம் இருப்பார் போல், வந்து தலைப் பெய்தோம்!
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே


செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் "இரண்டும் கொண்டு", எங்கள் மேல் நோக்குதியேல்!
எங்கள் மேல் சாபம் இழிந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: பரந்த உலகத்தின் அரசர்கள் எல்லாம், தங்கள் தற்பெருமை விலகிப் போய், உன் பள்ளிக் கட்டின் கீழே வந்து திரண்டு நிற்கிறார்கள்!
(சென்ற பாட்டிலும் இதையே சொன்னாள்: மாற்றார் உனக்கு வலி தொலைந்து, உன் வாசற்கண், ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே)

கால் சதங்கையின் மணிகள், பாதி மூடியும் மூடாமலும் இருக்கும்! அது போல் உன் கண் பாதித் தூக்கம், பாதி விழிப்பில் இருக்கே கண்ணா!

கண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் திறந்து எங்களைப் பாரேன்டா! பகலவனும், பால்நிலவும் ஒரே நேரத்தில் எழுந்தாப் போலே, இரண்டு கண்கள் விழித்து எங்களைப் பார்! எங்கள் சாபங்கள்/துன்பங்கள் எல்லாம் விலகிப் போய் விடும்!
-----------

உவமை நயம்:

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே = கால் சலங்கையில் இருக்கும் சிறுசிறு கிங்கிணிகள்!
ஒவ்வொரு கிங்கிணி வாய்ப்புறமும், பாதி மூடிய தாமரைப்பூ போல இருக்கும்!

அதுக்கு உள்ளாற ஒரு பொட்டு மணி! சல்-சல்-ன்னு சத்தம்!
மணி, ஓட்டையின் வழியாத் தெரியும், ஆனா ஓட்டையில் இருந்தும் விழாது! அப்படி மூடியும் மூடாமலும் இருக்கும்!

ஆண்டாளுக்கு நடனம் தெரியும் போல!
பாதி மூடிய கண்ணுக்கு, சலங்கையின் மணியை உவமை காட்டுறான்னா, இவ எப்பேர் பட்டவளா இருப்பா? Wow! Love you dee, Kothai! :))


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = பள்ளி!

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு-ன்னு பாட்டைக் கேட்டிருப்பீங்க! சுள்ளிக்கட்டு தெரியும்! அது என்ன பள்ளிக்கட்டு?

* பள்ளி = பள்ளிக்கூடம் (கல்வி நிலையம்) ன்னு பொதுவழக்கில் ஆகிப் போச்சு!
* பள்ளி = பள்ளிவாசல் என்பது சமய வழிபாட்டு இடம்!
* பள்ளி = பள்ளியறை என்பது படுக்கை அறை!
* பள்ளி = மடைப்பள்ளி என்பது சமையல் அறை!
இந்தப் பள்ளிகளுக்கெல்லாம் ஒன்னோடவொன்னு எந்தவொரு தொடர்பும் இருக்குறாப் போலத் தெரியலையே! எப்படி எல்லாமே பள்ளி-ன்னு குறிக்குது?

தமிழில், பள்ளி = இடம்!
குறிப்பா, பள்ளத்தில் அமைந்திருக்கும் இடம் = பள்ளி!

வேளாண்மை நிலங்கள், வரப்பில் இருந்து பள்ளமாய்த் தான் இருக்கும்! அங்கே உழுபவன் = பள்ளன்/ பள்ளத்தி! அங்கே பாடும் பாட்டு = பள்ளுப் பாட்டு! (முக்கூடற் பள்ளு)
பள்ளமான இடம் = பள்ளி!
இப்போ ஒவ்வொன்னாப் பொருத்திப் பாருங்க!

* பள்ளிக் கூடம் = ஆறு போல் பல படிப்புகள் வந்து ஒன்னாத் தேங்கும் பள்ளம் = பள்ளி! பள்ளியில் உள்ள கூடம்!
* பள்ளி வாசல் = இறைவனின் கருணை பொங்கி வந்து தேங்கும் பள்ளம்! பிரார்த்தனைத் தலம்!

* பள்ளி அறை = உறங்கும் அறை, மற்ற பகுதிகளை விடச் சற்று தாழ்வாத் தான் இருக்கும்! மேட்டில் உறங்காமல், சற்றே பள்ளமான இடத்திலேயே உறங்குவார்கள்! மேட்டில் உருண்டு விழுந்தால் அடி பலம்:) பள்ளமே கள்ளத்துக்குச் சரி:)

* மடைப் பள்ளி = சமைக்கும் இடமும் அப்படியே! பல பேருக்குச் சமைக்கும் இடம், சற்றே பள்ளமாக இருக்கும்! பெரும் பாத்திரங்களை இறக்கிச் சமைப்பார்கள்!

எல்லாஞ் சரி, அது என்ன பள்ளிக்கட்டு சபரிமலைக்கு?
பள்ளிக் கட்டில் = பள்ளிக் கட்டு என்று ஆனது!
ஆண்டாளும், வந்து நின் "பள்ளிக் கட்டில்" கீழே, சங்கம் இருப்பார் போல்-ன்னு சொல்லுறாப் பாருங்க!

அரசனின் அரியணை உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், அது ஆடாமல் என்றுமே நிலையா நிக்கணும்!  அதன் பொருட்டு, அதன் கால்கள் அங்கேயே சற்றே பள்ளத்தில் ஆழ்ந்திருக்கும்!
அப்படித் தான் இறக்கிக் கட்டுவார்கள்! அப்படியான அரியணைக் கட்டில் = பள்ளிக் கட்டில்!

இறைவன் கொலுவிருக்கும் இடமான பள்ளிக் கட்டில் = அரியணை!
அது சபரிமலையில் இருக்கு! அதான் பள்ளிக்கட்டு (டில்) சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை-ன்னு பாட்டு! புரியுதா?:)

நாளிக்கிப் பேசப் போவது...பாடகர்! ட்விட்டரின் பாட்டுக்காரர்! வர்ட்டா?:) தூங்கணும்!
(அதென்னமோ தெரியல, இந்த ஊருக்குப் போகும் போதெல்லாம் காய்ச்சல் வந்துருது! காதல் குளிர்:)) சென்ற ஆண்டும், அதுக்கு முன்னரும் கூட இப்படியே!:)

4 comments:

  1. சத்தியா எவ்வளவு தெளிவா சொல்லியிருக்கீங்க! உங்களுக்கு ரொம்ப நல்ல பாசுரம் அமைந்திருக்கு :-) அருள் கிடைக்க அகங்காரம் அழியணம், நாம் உய்ய அவன் கண் பார்வை நம் மேல் பட வேண்டும். நன்றி சத்தியா.
    கால் சலங்கை மணிகளோடு பாதி திறந்த திருமாலின் திருக்கண்களை எப்படி அழகாக ஒப்பிடுகிறாள் கோதை.
    KRS, பள்ளி என்ற சொல்லுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கத்துக்கு நன்றி :-)
    amas32

    ReplyDelete
  2. பள்ளிக்கு சொல்லிய அர்த்தங்கள் அருமை! எங்கேருந்துதான் இதெல்லாம் தோணுமோ ரவிக்கு?:):)

    ReplyDelete
  3. சாமியே சரணம் ஐயப்பா!!

    சாமியே சரணம் ஐயப்பா!!

    சாமியே சரணம் ஐயப்பா!!
    :)

    ReplyDelete
  4. நல்ல விளக்கம்...

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP