Monday, January 09, 2012

கோதைத்தமிழ்25: திருமதி.செல்வம் @anandraaj04

மக்கா...இன்று பேசுவது, ட்விட்டரின் கப்பல் தளபதி, நாலடியார் நாயகர், நம்ம @anandraaj04 (எ) மகிழ்வரசு....பாட்டிலும் மகிழ்-ந்தேலோ ன்னு வருது!:)

இசை விரும்பி, தமிழ் விரும்பி, தத்துவ விரும்பி.....என்ன சொல்றாரு-ன்னு நீங்களே கேளுங்க:)



நன்றி ஆனந்த் (எ) மகிழ்:) உங்கள் சேவை #365பா-க்கு இன்னும் தேவை:)


ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்,
தரிக்கிலான் ஆகித், தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,


நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்! பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி,
வருத்தமும் தீர்ந்து, மகிழ்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: ஓர் இரவில், ஒருத்தி மகனாய்ப் பிறந்தாய், அன்றிரவே இன்னொருத்தி மகனாய் விரைந்தாய்!
ஆனால் அதையும் பொறுக்க மாட்டாத உன் மாமன், உனக்குத் தீங்கு நினைத்துக் கொண்டே இருக்க, அவன் எண்ணத்தைப் பிழை ஆக்கினாயே!

வயிற்று எரிச்சல்! அதுவே அவன் வயிற்றில் தீ போல் பரவி அவனை விழுங்கி விட்டது!

உன்னை அருச்சனை செய்து வந்தோம்! எங்கள் அன்புக்கு நீ ஏதாச்சும் தர நினைத்தால்...உன் பணி செய்யவே எங்களுக்கு வாய்ப்பு குடு!
திருத்தக்க செல்வம்! திரு=செல்வம்! செல்வத்துக்கே தக்க செல்வம் = உன் உறவு! அதைக் குடு!
வருத்தம் தீர்ந்து, மகிழ்வுடன் பாடுவோம்!



இன்றைய எழிலான சொல் = திருத்தக்க

திருத்தக்க தேவர் -ன்னு ஒருத்தரு! யாரு-ன்னு தெரியும் தானே? சீவக சிந்தாமணி எழுதியவரு!

அது என்ன திருத்-தக்க செல்வம்? திரு-ன்னாலே செல்வம் தானே! செல்வத்துக்கு தக்க செல்வமா? என்ன உளறுகிறாள் கோதை?:)

ஏற்கனவே "நீங்காத செல்வம்"-ன்னு மூன்றாம் பாசுரத்திலும் வரும்!
ஆண்டாள் காட்டும் செல்வம் = "நீங்காத செல்வம்" & "திருத்தக்க செல்வம்"!

எவ்வளவோ சம்பாதிக்கறோம்! பணம்-ன்னு மட்டும் இல்லை, நல்ல பேரு, புகழ், கல்வி, கலை-ன்னு எத்தனையோ செல்வங்கள்!
ஆனால் யாருக்காக? = நமக்காகத் தான், நம் அபிமான-அகங்காரத்துக்காகத் தான் என்றாலும் கூட, ஒரு கட்டத்தில் இதெல்லாம் மாறி விடுகிறதே! எவ்ளோ சம்பாதிச்சாலும், என்ன நினைக்கிறோம்?

குழந்தைகள் நல்லபடியா இருந்தாப் போதும்-ப்பா என்று நம்மை மறக்கடிக்கச் செய்வது யாரு?
தான், தான்-ன்னு பிறந்ததில் இருந்து சுயநலமா இருந்த மனுசன், பெத்த அம்மா-அப்பா கிட்ட கூட ஓரளவு சுயநலம் காட்டும் மனுசன், தான் அம்மா-அப்பா ஆவும் போது மட்டும் எப்படி மாறுகிறான்?

கொஞ்ச நாளைக்கெல்லாம் இந்தப் புத்தி வந்து விடுகிறதே! "புள்ளைங்க நல்லா இருந்தாப் போதும்" - இந்த ஞானம் எப்படித் தானா வருது?
எந்த மரத்தின் கீழேயும் உட்காரலை! எந்த குருவும் சொல்லிக் கொடுக்கலை!

இப்படி யாருமே சொல்லிக் கொடுக்காமல், "தான்" என்பதை, வாழ்க்கையில் தானாகவே நீக்க வைக்கும் 1st step = மழலைச் செல்வம்!
* சேர்த்த செல்வத்தையே உணர வைக்கும் செல்வம் ஆகையாலே = திரு-வுக்கே தக்க செல்வம் ஆகையாலே திரு+தக்க+செல்வம்!

இந்த மழலைச் செல்வத்துக்கான சேவகம் செய்வதில் நாம வெட்க மானம் பார்ப்பதில்லை! மலத்தையும் துடைத்து விடுகிறோம், ஆய் கழுவி விடுகிறோம்! ரொம்பவும் அலுத்துக் கொள்வதும் இல்லை! சம்பளம் வாங்காம கூடச் சேவகம் செய்கிறோம் அல்லவா?

அதான் திரு+தக்க+செல்வமும், சேவகமும் என்கிறாள் கோதை!
*** இல்லாத குழந்தைக்கு எங்கிருந்து சேவகம் செய்வாள் தேவகி? ஆனாலும் செய்தாளாம்! எப்படி-ன்னு கேக்கறீங்களா? இல்லாத குழந்தைக்குத் தாலாட்டு பாடுவாளாம்! அச்சோ.......

வேணாங்க, நான் சொல்லலை! தேவகி புலம்பல்-ன்னு ஆழ்வார் தனியாகவே பாசுரம் பாடி கண் கலங்கி இருக்காரு!
அப்படித் திருத்தக்க செல்வத்துக்குத் தாலாட்டு பாடிப் பாடி, வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தாள்!

பிள்ளையைப் பறிகொடுத்து நிற்கும் பெற்றோர்கள் பலருக்கும் இந்தப் பாசுரம் ஆறுதல் தரட்டும்! வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

திருத்தக்க செல்வம் = மற்ற செல்வங்களுக்கெல்லாம் தக்க செல்வம் = உன் உறவு! அதுவே வேண்டும்! அருள்வாய்!


நாளை பேசப் போவது....எங்கள் அபிமான Twitter Sound Service! வர்ட்டா?:)

2 comments:

  1. //உனக்குத் தீங்கு நினைத்து//
    இங்கே தனக்குத் தானே தீங்கு நினைத்துக் கொண்டதாகக் கூடப் பொருள் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    பிறருக்குத் தீங்கு நினைத்தால் அது தன்னையே எறித்துவிடும் என்பதால் அது கம்சன் நினைத்த தீங்கு அவனுக்கே நெருப்பாகி விட்டதாகவும் ஆண்டாள் கூறுவதாக நல்ல விளக்கம்.

    நன்றிகள்.

    ReplyDelete
  2. ஆனந்த்ராஜ் உங்கள் விளக்கம் அருமை! தாய் மாமன் எப்படி இருக்கணமோ அதற்கு எதிர் மறையாகத தான் இருந்தான் கம்சன்.

    உன்னை அருத்தித்து வந்தோம்! பறை தருதியாகில்,
    "உன்னை அருச்சனை செய்து வந்தோம்! எங்கள் அன்புக்கு நீ ஏதாச்சும் தர நினைத்தால்...உன் பணி செய்யவே எங்களுக்கு வாய்ப்பு குடு!"
    இது தான் ஆண்டாளின் தலையையாய வேண்டுகோள். திருப்பாவையில் எவ்வளவு தடவை இதை இறைவனிடம் கேட்கிறாள் பாருங்கள்!
    இறைவன் நம் முன் தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், நீ தான் வேண்டும் என்று கேட்கும் மனதை தா என்று ஆண்டாளிடம் இருந்து கற்றுக் கொள்வோம்.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்.
    amas32

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP