Tuesday, August 31, 2010

திரிகடுகத்தில் தமிழ்க் கடவுள்!

திரிகடுகம்

திரிகடுகம்-ன்னு ஆறாங் கிளாஸ் தமிழ்ப் புத்தகத்தில் செய்யுளை உருப்போட்ட ஞாபகம் இருக்கா? :))

இது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று! திருக்குறள் போலவே பல அறங்களைச் செப்புவது! ஆனால் இரண்டடிக் குறள் வெண்பா இல்லை, நாலடி வெண்பாவால் ஆனது!

ஒவ்வொரு பாட்டிலும் மூன்று கருத்துக்கள்! ஒவ்வொரு மருந்திலும் மூன்று பொருட்கள் போல்!(சுக்கு,மிளகு,திப்பிலி)!

மூன்று மருந்துகள் உடலுக்குச் செய்யும் நன்மை போல்,
இதன் மூன்று கருத்துக்கள் உள்ளத்துக்கு நன்மை செய்வதால்,
இதற்குத் திரிகடுகம் என்று பெயர்!

இதன் ஆசிரியர்: நல்லாதனார்!
மாயோன்-திருமால் என்னும் பழந்தமிழ்க் கடவுளைக் குறிப்பிடுகிறார்!

கண்அகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்நறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய

மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்

பூவைப் பூவண்ணன் அடி


அன்று அகலமான உலகம் அளந்தது ஓரடி!
பூக்கள் பூக்கும் குருந்த மரத்தைச் சாய்த்தது ஓரடி!
மாயச் சகடம் என்னும் வண்டிச் சக்கரத்தை உதைத்து ஓரடி!
இம்மூன்றும் பூவைப் பூவண்ணனான திருமாலின் திருவடிகள்!

அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தெடார்ச்சியும் - சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து

இது காப்புப் பாடலாகத் திரிகடுகத்தில் வருவது! இதையும் சேர்த்துத் தான் நூறு வெண்பாக்கள் திரிகடுகத்தில்! எனவே இது ஆசிரியரே எழுதி இருக்கக் கூடிய ஒன்றாக இருக்கலாம்! அதனாலேயே இதையும் இங்கு தரவாகச் சேர்த்தேன்! மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லுங்கள்!

மற்ற சங்க நூல்களுக்கு அமைந்த கடவுள் வாழ்த்து எல்லாம், பின்னாளில் எழுதிச் சேர்த்த ஒன்று! பாரதம் பாடிய பெருந்தேவனார், அகநானூறு போன்ற தொகை நூல்களுக்கெல்லாம் அவரே எழுதி இப்படிச் சேர்த்திருப்பார்! இத்தனைக்கும் அகநானூறைத் தொகுத்தவர் அவரில்லை! வெறும் "கடவுள் வாழ்த்து" மட்டுமே எழுதிச் சேர்த்தது!

(என்னளவில்) இது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை! நாம் எழுதிய நூலுக்கு, இருபது ஆண்டு கழித்து, Chapter 0-ன்னு வேறு ஒருவர் எழுதிச் சேர்த்தால் நம் மனம் ஒப்புமா? :)

சரி, இந்தப் போக்கு, தமிழ் இலக்கியத்தில், உரையாசிரியர்கள் மூலமாகவோ, இல்லை வாழ்த்துநர்கள் மூலமாகவோ எப்படியோ ஏற்பட்டு விட்டது!

இந்தப் பாடல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், தரவுகளின் எண்ணிக்கை எனக்கும் அதிகமாகும் தான்! ஆனால் அவற்றைத் தமிழ்க் கடவுள் தரவுகளுக்கு எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை! முழுதும் சங்க காலப் பாடல்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, தரவுகளை முன் வைக்கிறேன்! பின்னாளில் எழுதிச் சேர்த்த கடவுள் வாழ்த்துகளை அல்ல!

திரிகடுகம் அப்படி இல்லாமல், அதன் ஆசிரியரே எழுதிய ஒன்றாக இருப்பதாலே, அதை இங்குச் சுட்டினேன்! இப்படியாக, மாயோன்-திருமால் காட்சிகளைச் சங்கத் தமிழர்கள் அறிந்து வைத்துப் போற்றியதை, திரிகடுகமும் காட்டுகிறது!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

5 comments:

  1. தொகை நூல்களில் வரும் கடவுள் வாழ்த்துப் பகுதிகள் பின்னாளில் வந்தவர்கள் எழுதி இணைத்ததாக இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றை இங்கே தொகுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்; சொல்லாமல் சொன்ன செய்தியாக எனக்குத் தோன்றுவது - 'அவை சங்க காலப் பாடல்கள் இல்லை' என்பது. சரி தானா இரவி?!

    பத்துப்பாட்டு நூல்கள் ஒவ்வொன்றும் ஒரே ஆசிரியரைக் கொண்டதாக இருக்கிறது. அங்கே தனியாக 'பகுதி - 0' என்று பின்னாளில் சேர்த்ததாகத் தெரியவில்லை. எட்டுத் தொகை நூல்கள் அப்படி இல்லை. சங்க காலத்திச் சேர்ந்த பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புலவர்களால் எழுதப் பட்ட பாடல்களைத் தொகுத்து வைத்தவை இந்த தொகை நூல்கள். அவ்வாறு தொகுக்கப்பட்ட காலமும் சங்க காலமே. அப்படி தொகுத்தவரே கடவுள் வாழ்த்து எழுதிச் சேர்த்திருக்க வாய்ப்புண்டு. ஆதலால் அவையும் சங்கப் பாடல்களே. பாரதம் பாடிய பெருந்தேவனார் பல தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து எழுதியிருப்பதைக் காணும் போது அவரே பெரும்பாலான தொகை நூல்களைத் தொகுத்தவர் என்றும் தோன்றுகிறது. தொகுக்கப்பட்ட பாடல்களில் சேராமல் தொகுத்தவரால் எழுதி இணைக்கப்பட்ட சங்கப்பாடல்களே இந்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் என்பது பாவின் வகையாலும் புழங்கிய சொற்கூட்டங்களாலும் இன்னும் பல விதங்களாலும் உறுதியாகின்றன இரவி.

    ReplyDelete
  2. //'அவை சங்க காலப் பாடல்கள் இல்லை' என்பது. சரி தானா இரவி?!//

    சரி தான் குமரன்!
    (என்னளவில்) அவை சங்கப் பாடல்கள் அல்ல!

    நீங்களும், தோழன் ராகவனும் "இலக்கியத்தில் இறை" என்று தனித்தனியாக எழுதியதைப் படித்து மகிழ்ந்துள்ளேன்! ஆனால் அவை "இலக்கியம்" என்ற அளவில் பிடிக்குமே தவிர, அவற்றில் வரும் வாழ்த்துப் பாக்களைச் "சங்கப் பாடல்" என்று ஒப்ப மாட்டேன்!

    பாரதம் பாடிய பெருந்தேவனார், 9ஆம் நூற்றாண்டு! பாரத வெண்பாவின் காலமும் அஃதே!
    அவர் அகநானூறுக்கு ஒரு வாழ்த்துப் பா எழுதி விட்டால், அது சங்கப் பா ஆகி விடுமா என்ன? ஆகாது அல்லவா!

    அதான் என்னளவில், இலக்கிய நேர்மையைக் கடைப்பிடிக்க விரும்புகிறேன்!

    திருமால்=தமிழ்க் கடவுள் என்று முன் வைக்கும் தரவுகளில், பின்னாளில் எழுதிச் சேர்த்த பாக்களைக் கணக்கில் கொள்ளாமல், ஒரிஜினல் சங்கப் பாக்களை மட்டும் தரவாகத் தர விரும்புகிறேன்!

    கடவுள் வாழ்த்துப் பாக்களை எல்லாம் வைத்தால், தரவுகளின் எண்ணிக்கை கூடும் தான்! ஆனால் அதைச் செய்ய நான் விரும்பவில்லை!

    ReplyDelete
  3. //பத்துப்பாட்டு நூல்கள் ஒவ்வொன்றும் ஒரே ஆசிரியரைக் கொண்டதாக இருக்கிறது. அங்கே தனியாக 'பகுதி - 0' என்று பின்னாளில் சேர்த்ததாகத் தெரியவில்லை//

    உண்மை தான் குமரன்!
    பத்துப் பாட்டு நூல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆசிரியர் தான்! தொகுப்பு அல்ல!

    ஆனால் இன்னொன்றும் நோக்க வேண்டும்! அவை எவற்றுக்கும் கடவுள் வாழ்த்து என்று தனியாக இல்லை (நக்கீரரின் திருமுருகாற்றுப்படை உட்பட)!

    மேலும் அவை ஒரே அகவற்பா போன்ற அமைப்பால் ஆனது! நீளமாக இருக்கும்! அதனால் தான் அதற்கு யாரும் கடவுள் வாழ்த்து என்று தனியாக எழுதிப் பின்னாளில் சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  4. //அவ்வாறு தொகுக்கப்பட்ட காலமும் சங்க காலமே. அப்படி தொகுத்தவரே கடவுள் வாழ்த்து எழுதிச் சேர்த்திருக்க வாய்ப்புண்டு. ஆதலால் அவையும் சங்கப் பாடல்களே//

    இல்லை குமரன்! தவறு இருப்பின் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்!

    இவையே எட்டுத் தொகை நூல்களுக்கான கடவுள் வாழ்த்துப் பகுதிகள்:
    1. நற்றிணை - திருமால் - பெருந்தேவனார்
    2. குறுந்தொகை - முருகன் - பெருந்தேவனார்
    3. ஐங்குறுநூறு - சிவபெருமான் - பெருந்தேவனார்
    4. பதிற்றுப்பத்து - சிவபெருமான் - பெயர் கிடைக்கவில்லை (அனானி)
    5. பரிபாடல் - கடவுள் வாழ்த்து இல்லை
    6. கலித்தொகை - சிவபெருமான் - பெயர் கிடைக்கவில்லை (அனானி)
    7. அகநானூறு - சிவபெருமான் - பெருந்தேவனார்
    8. புறநானூறு - சிவபெருமான் - பெருந்தேவனார்

    இதிலிருந்தே தெரியவில்லையா?

    இப்படி எல்லா நூல்களுக்கும் பாரதம் பாடிய பெருந்தேவனாரே கடவுள் வாழ்த்தைச் சேர்த்துள்ளார்! பரிபாடலில் முழுக்க திருமால்/ முருகன் பாடல்கள் என்பதால் அதற்கு மட்டும் தனியாக கடவுள் வாழ்த்து இல்லை!

    பாரதம் பாடிய பெருந்தேவனார் காலம் 9ஆம் நூற்றாண்டு! இதோ சுட்டி!

    அப்படி இருக்க, அவர் பாடியதைச் சங்கப் பாக்களில் எப்படிச் சேர்க்க முடியும்! சங்கப் பாக்களுக்கு வாழ்த்து பாடினார் என்று வேண்டுமானால் சொல்லலாம்!

    மேலும் இவர் எட்டுத் தொகை/பத்துப் பாட்டு நூல்களைத் தொகுத்தாரா என்ன? அப்படி இல்லை என்றே நினைக்கிறேன்! இவர் கடவுள் வாழ்த்தை மட்டுமே பின்னாளில் எழுதிச் சேர்த்தவர்!

    இவருக்கு முன்பே 18 மேல்கணக்கு நூல்கள் தொகுக்கப்பட்டு விட்டன!
    * கலித்தொகையைத் தொகுத்தவர் = நல்லந்துவனார்!
    * ஐங்குறுநூறு = கூடலூர் கிழார் (சேரல் இரும்பொறை சொல்லித் தொகுத்தது)
    * குறுந்தொகை = பூரிக்கோ
    * அகநானூறு = மதுரை உப்புரிக் குடிக் கிழான் மகனான உருத்திர சன்மன்

    இப்படித் தொகுத்தவர்களில் பலர், சங்க காலத்திலேயே வாழ்ந்தவர்கள்! யாரும் கடவுள் வாழ்த்து என்று தனியாக எழுதவில்லை! அவ்வாறு எழுதியது பாரதம் பாடிய பெருந்தேவனாரே!

    அப்படியிருக்க, கடவுள் வாழ்த்துப் பாடல்களைச் "சங்கப் பாடல்கள்" என்று சொல்லுமாறு எங்ஙனம்?

    ReplyDelete
  5. இன்னொன்றும் இப்பத் தான் தோன்றியது குமரன் அண்னா!

    நாலாயிர அருளிச் செயல்களில் ஆழ்வார்கள் ஈரத் தமிழ் மட்டுமே உண்டு!(திருவரங்கத்து அமுதனார் தவிர)

    ஒவ்வொரு திருமொழிக்கும், பின்னாளில் தனியன் என்று எழுதினார்கள்! அது அந்த நூலின் மாண்பினையும், அதைப் பாடிய ஆழ்வாரின் குறிப்பையும் சொல்ல வல்லது! இராமானுசர் உட்பட பல பேர் எழுதினாலும், இராமானுசரே எழுதினாலும், அதை "அருளிச் செயலில்" சேர்க்க மாட்டார்கள்! அவை "தனியன்களே"!

    அது போல நோக்கினால், பாரதம் பாடிய பெருந்தேவனார் எழுதிச் சேர்த்தது சங்கப் பாடல் கிடையாது! சங்க காலமும் கிடையாது! அது "சங்கத் தனியன்"-ன்னு வேணும்-ன்னா சொல்லலாமோ? :))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP