Tuesday, August 31, 2010

மதுரைக் காஞ்சியில் தமிழ்க் கடவுள்!

மதுரைக் காஞ்சி

மதுரைக் காஞ்சி-ன்னா என்ன?
காஞ்சிப் போன மதுரையா? :)
இல்லை மதுரையும் காஞ்சிபுரமுமா?

இரண்டுமே இல்லை! காஞ்சி என்பது காஞ்சித் திணை! வஞ்சி x காஞ்சி, உழிஞை x நொச்சி-ன்னு எல்லாம் சின்ன வயசில் உருப்போட்டு இருப்பீங்களே! :)
இவையெல்லாம் போர்த் திணைகள்! வஞ்சிப்பூ சூடி வரும் எதிரிப் படைகளை, நாட்டின் எல்லையில் தடுத்து நிறுத்தி, அந்த நாட்டு வீரர்கள் காஞ்சிப்பூ சூடி, எதிர்ப்பது!

ஆனால் இந்த நூலுக்கு அதுவும் பொருளில்லை! தொல்காப்பியர் குறிப்பிடும் காஞ்சி-ப்படி பொருள் அமைகிறது! அதாவது "நிலையாமை"யைச் சொல்ல வந்த திணை!
போர் என்னும் மறக் கூறாக இல்லாமல், போரில் செல்வம்/இளமை என்று ஒரே நேரத்தில் சாய்ந்துவிடும் "நிலையாமை" பற்றிச் சொல்ல வந்ததால் காஞ்சி!

அப்பறம் என்ன மதுரைக் காஞ்சி? மதுரையில் பாடப்பட்ட "நிலையாமைத் தத்துவக் காஞ்சி"!
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரையில் பாடியது!

இது தான் பத்துப் பாட்டிலேயே நீளமான பாடல்! :)
இதில், மதுரையின் பல சிறப்புகளையும், விழாக்களையும் சொல்லும் கவிஞர்,
பெருமாளுக்கு உரிய திருவோண விழாவை,
பண்டைய தமிழ் மக்களும், மதுரை மறவர்களும் கொண்டாடுவது பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறார்!


(மாயோன் மேய ஓண நன்னாள் - மாயோனுக்குரிய திரு ஓண விழா பற்றிய குறிப்புக்கள்)


பாடியவர்: மாங்குடி மருதனார்
பாடப்பட்டவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
திணை: காஞ்சி
பாவகை: ஆசிரியப்பா
மொத்த அடிகள்: 782

ஓணம் - திருவோணம் என்பது வான்வெளி விண்மீன் மண்டலம்!

Shravanam என்று வடமொழியிலும், Aquilae என்று ஆங்கில/கிரேக்க/லத்தீனிலும் குறிக்கப்படுவது இஃதே!
பார்க்க, சிறகுகள் விரித்துப் பறக்கும் பருந்து/கருடன் போல் இருக்கும்!
மிகவும் ஒளி பொருந்திய நட்சத்திர மண்டலம்! பல மண்டலங்களைத் தன்னுள் அடக்கியதும் கூட!

பண்டைத் தமிழர்கள் தங்கள் தெய்வமான மாயோனுக்குரிய விழாவினை, ஓணத்தில் தான் கொண்டாடினர்!
இன்றும் திராவிடத் தோன்றல்களுள் ஒன்றான மலையாளத்திலும் ஓணம் அவர்களுக்கே உரித்தான பெரும் பண்டிகை!

பத்து நாட்கள் உள்ள ஓண விழா, அத்தத்தின் பத்தாம் நாள் என்னும்படிக்கு, அத்தம் என்ற விண்மீனில் துவங்கி, ஓணத்தில் நிறைவு பெறும்! பூக்கோலங்களும், ஆடல்-பாடல் துள்ளல்களும், யானைத் துள்ளல்களும், ஒளி விளக்குகளும், சுவை உணவுகளும் - எல்லாம் உண்டு!



பாடலுக்கு வருவோமா?

ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம் பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப....5
...
...
...

(மறவர்கள் ஓண விழாவில் மகிழ்ந்து திரிதல்)

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நன்னாட்
...591

கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்

(அவுணரைக் கடந்து வெற்றி கொண்ட மாயோன், பொன்மாலை அணிந்துள்ள அவன் தோன்றிய ஓண நன்னாளில்...ஊர் விழா எடுக்க,
வடுக்கள் உள்ள முகம் கொண்ட மறவர்கள், சேரியில் வீர விளையாட்டுகளில் ஈடுபட)


மாறா துற்ற வடுப்படு நெற்றிச்

சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பரல் உறுப்பக்

(வளைந்த பூக்கள் கொண்ட மாலைகள் தரித்து, மறக் கூட்டம், களிறு ஓட்டம் முதலியன செய்ய...யானைக்கு முன்னே ஓடிய வீரர்கள்....
வேகமாக ஓடும் யானையை அடக்க, நெருஞ்சி முள் போல் கொத்துள்ள கப்பணம் என்னும் கருவியை, காழகம் என்னும் நீல ஆடையில் சுற்றி, நிலத்தில் பரவ, கால் பொதுக்கி, யானைகள் ஒரே இடத்தில் நிற்கின்றன...

அப்படியே கேரள ஓணம் திருவிழாக் காட்சி போலவே இருக்கு-ல்ல?)


கணவர் உவப்பப் புதல்வர் பயந்து
பணைத்தேந் திளமுலை அமுதம் ஊறப்

புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு

வள மனை மகளிர் குளநீர் அயர
திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி,
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி, 605

கணவருடனும், புதல்வர்களுடனும், சுற்றத்தோடும் குழுமி, செவ்வழிப் பண்ணில் பாடி, யாழ்-முழவு போன்ற இசைக் கருவிகள் வாசித்து...குரவைக் கூத்து ஆடி....

நுண் நீர் ஆகுளி இரட்ட, பலவுடன்,
ஒண் சுடர் விளக்கம் முந்துற, மடையொடு,
நல் மா மயிலின் மென்மெல இயலி,
கடுஞ்சூல் மகளிர் பேணி, கைதொழுது,
பெருந் தோள் சாலினி மடுப்ப

மயில் போல் ஒன்று திரண்டு, மகளிர் தேவராட்டியுடன் நின்று, தெய்வத்திற்கு மடை கொடுக்க...குலவை இட்டு, கை தொழுது, சாலினின் பெண்கள் அருள் வந்து ஆட...
....
....
இப்படி விழா இரவின் பல யாமங்கள் நீடிக்கிறது! சாலினி என்னும் அருள் வந்து ஆடலால், முருகனுக்கும் வேலன் வெறியாட்டு நடக்கிறது! இரவு முழுதும் விழா ஒலி பரவ.....மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் உறங்குகின்றான்!
....
....
(நிலம் தந்த பேர் உதவி,
பொலந் தார் மார்பின், நெடியோன் உம்பல்! )
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்,
நிலம் தரு திருவின் நெடியோன் போல,
வியப்பும், சால்பும், செம்மை சான்றோர்
பலர் வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி,

எல்லா நிலங்களையும் தன்னிடத்தே அளந்த திருவுடைய மாயோனைப் போல...
சிறப்புடன் தோன்றுவாயாக என்று பாண்டியனை வாழ்த்துகிறார்!
....
....




மாயோனுக்குரிய திரு ஓண நன்னாளைச் சுற்றத்தோடு கொண்டாடும் காட்சி காட்டப்படுகிறது!
பின்னாளில் இம்மரபையே ஆழ்வார்களும் சொல்லப் போந்தனர். திரு ஓணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பெரியாழ்வார் திருமொழி!

ஆவணி மாதத்தில் ஓணம் விண்மீனில் (Shravanam Star in Shravanam Month) வரும் இவ்விழா தான், பின்னால் வரும் மற்ற விழாக்களுக்கு எல்லாம் துவக்க விழா!
கேரளத்தில் இன்றும் வீடுகளில் சிறப்பாகக் கொண்டாடும் இந்த விழா, தமிழகத்தில் ஆலயங்கள் அளவில் மட்டும் நின்று விட்டது!

திருமாலின்/மாயோனின் தோற்றங்கள் பலவும் இந்தத் திருவோண/கருட/பருந்து விண்-மீன் நாளிலே தான் நிகழ்வதாகவே தொன்மங்களும் கதைகளும் பேசுகின்றன!

மாவலியின் பொருட்டும், உலகின் பொருட்டும் மூன்றடி மண் இரந்து பெற்ற இறைவன், இந்தத் திருவோண விண்மீனில் தான் தோன்றினான்! இதே விண்மீனில் தான் அத்தனை உலகையும் உயிரையும் அளந்தான்! திருவடிகளால் அத்தனை படைப்புகளும் தோய்க்கப் பெற்ற நாளும் இதுவே!

கீழுலகங்களுக்கு மட்டும் மாவலியைத் தலைவனாக்கி, அதிகாரப் பரவல் செய்து முடித்து, இருப்பினும் ஆசை தீராத மாவலிக்கு, அடியவன் என்பதால்...
அடுத்த சுழற்சியில், அமரர் தலைவன் பதவியும் அளித்து இன்புறச் செய்தான்! இன்றும் ஆண்டுக்கொரு முறை மாவலி, தன் பழைய நாட்டினையும் மக்களையும், இதே ஓணத்தன்றே பார்க்க வருவதாக நாட்டார் நம்பிக்கை! அதன் பொருட்டே மலையாள ஓணம்!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

5 comments:

  1. மாயோன் எப்படி திருவோணத்தான் ஆகிறான் என்று சொல்லவே இல்லையே!

    ReplyDelete
  2. என்ன கேட்கறிங்க-ன்னு புரியலையே குமரன்! மாயோனுக்கு திருவோண விண்மீன் எப்படி வந்தது என்று பாடல் சொல்கிறதா என்ன?

    நான் பாதலின் முழுப் பொருளையும் சொல்லிச் செல்லவில்லை! அப்படிச் சொன்னால் அது சங்கத் தமிழ் உரை ஆகி விடும்! நீளும் ஆனால் இன்பம் தான்!

    பேசு பொருளை ஒட்டி, தமிழ்க் கடவுளான மாயோன், சங்கப் பாடல்களில் வரும் இடத்தை மட்டுமே விளக்கிச் செல்கிறேன்! இங்கு மாயோன் மேய ஓண நன்னாள்!

    இந்த விளக்க முறை சரியா என்று பார்த்துச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  3. பாடலின் முழுப்பொருளை சொல்ல வேண்டாம் இரவி. எங்கே தமிழ்க்கடவுளைப் பற்றிய குறிப்பு வருகிறது என்று சொன்னால் போதும்.

    மாயோனுக்குரிய ஓண நன்னாள் என்று இந்தப் பாடல் சொல்கிறது என்றும் பெரியாழ்வார் 'திருவோணத்தான்' என்று சொல்கிறார் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். மாயோனுக்கு எப்படி திருவோண நன்னாள் அமைந்தது என்ற விளக்கம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  4. இப்போ பாருங்கள் குமரன்! மாற்றி விட்டேன்!

    வெறுமனே, சங்கத் தமிழில் இங்க இங்க மாயோன் வரான்-ன்னு காட்டிட்டு போயீறலாம்-ன்னு பார்த்தா,

    "ஓணம் பத்திச் சொல்லு, மாயோன் - ஓணம் கனெக்சன் என்ன?" கேட்டுக் கேட்டு இப்படி வேலை வாங்கறீயளே? தெரியாத்தனமாக் காலை வச்சிட்டேனோ? :)

    ராகவா நீயே துணை! என்னையக் காப்பாத்து!
    ராகவா அபயம்! ராகவா அபயம்!

    ReplyDelete
  5. இந்த புத்தகம் 'மதுரை கஞ்சி' ISBN no. ?? நான் விகிபெடியாவில்(ஆங்கிலம்) பதிய வேண்டும்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP