Tuesday, August 31, 2010

சீவக சிந்தாமணியில் தமிழ்க் கடவுள்!

சீவக சிந்தாமணி:

சீவக சிந்தாமணி அருங் காப்பியம்! பெருங் காப்பியம்!
சமணம் சார்ந்த கப்பியம் என்று சமய முத்திரை குத்தி ஒதுக்கிட முடியாதபடி, தமிழ் நிறைந்து இருக்கும் அழகிய காப்பியம்!

எழுதிய திருத்தக்க தேவரும் ஒரு சமண முனிவர்!
சமணர்கள் தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ் மருத்துவத்துக்கும் ஆற்றிய தொண்டுகள் மிகப் பெரிது!
ஆனால் சில சமயப் போர்களாலும், சமயவாதிகளாலும், நல்ல பல நூல்கள் தீக்கும், நீருக்கும் இரையாகியது, நமது போகூழ் (துரதிருஷ்டம்) தான்! :(

இது பின்னாளைய காப்பியம் (9-10 நூற்றாண்டு)! சங்க காலம் அல்ல! இருப்பினும் ஐம்பெருங் காப்பியங்களுள் இது ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது!

விருத்தப் பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியம்! 13 இலம்பகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது! 3000+ செய்யுள்கள் கொண்டது! சேக்கிழார் பெரிய புராணம் என்னும் நூலை எழுத, "எதிர்த் தூண்டுகோலாக" இருந்ததும் இந்தச் சமணக் காப்பியமே என்று சைவ சமயமும் இதைக் குறிப்பிட்டு பேசும்!

அதற்காகச் சீவக சிந்தாமணியைச் "சிற்றின்ப நூல்" என்றெல்லாம் குறை சொல்லிவிட முடியாது! ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு கதைக்களன், ஒவ்வொரு நோக்கம்!
சமணம் எப்போதும் துறவை மட்டுமே பேசுகிறது, மக்கள் வாழ்வையும் இன்பத்தையும் பேசவேயில்லை என்னும் கருத்தைத் துடைக்கவே, சிந்தாமணியை அருளினார் திருத்தக்க தேவர்!

மன்னன் மகனாகப் பிறந்த சீவகன், விதி வசத்தால் இடுகாட்டில் பிறந்து, வணிகன் வீட்டில் வளர்கிறான்! அச்சணந்தி என்னும் முனிவரிடம் கல்வி கற்கிறான்!
பல கலைகளிலும் தேர்ந்த வீரன், எட்டு பெண்களை மணந்து கொள்வது தான் கதை! :)

பல பெண்களை மணம் கொண்டதன் மூலம், பணம்/படைகளைப் பெருக்கி, இழந்த அரசை மீட்டு, நல்ல முறையில் ஆட்சி செய்து விட்டு, சமணக் கோட்பாடுகளின் படி, துறவு பூண்கிறான்! சுபம்! :)

கதைக்களனில், சிலப்பதிகாரம் போல் திருப்பங்கள் அதிகம் இல்லை என்றாலும், காப்பிய அழகும், விருத்தப் பாவின் வீரியமும், காட்சிகளின் வர்ணணையும் இந்தக் காவியத்தின் சிறப்புகள்! பின்னாளில் விருத்தம் என்னும் ஒண்பாவுக்கு உயர் கம்பன் என்று சொன்னாலும், விருத்தத்தின் வித்து என்னமோ சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர் தான்!நாம், எடுத்துக் கொண்ட பேசு பொருளான, பெருமாள் என்னும் தமிழ்க் கடவுளுக்கு மட்டும் வருவோம்! மாயோன்-நப்பின்னையின் சங்க காலத் திருமணம் பற்றிச் சீவக சிந்தாமணியும் பேசுகிறது! அதைப் பார்ப்போமா? கோவிந்தையார் இலம்பகம் என்றே மாயோனிடம் இருந்து தான் திருமணப் படலங்களும் துவக்குகிறது! ஒரு வேளை பேர் ராசி போல! :)

குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே!

ஆநிரைகளை மீட்டுத் தருவோர் யாராயினும், அவர்களுக்கு தன் மகள் கோவிந்தையை மணம் முடித்துத் தருவதாக அறிவிக்கிறார் நந்தகோன் என்னும் ஆயர்க்குடி தலைவர்!
நம்ம ஹீரோ சீவகன் மீட்டுத் தர, அவனுக்கே கோவிந்தையைத் தருவதாகச் சொல்கிறார்! ஆனால் வேறு வேறு குலம்! அதனால் என்ன?

முருகன் எப்படி வள்ளியை மணந்தானோ, மாயவன் எப்படி நப்பின்னையை மணந்தானோ, அதே போலத் தன் மகள் கோவிந்தையைச் சீவகன் மணக்கலாம் என்பது நந்தகோன் கூற்று!
நப்பின்னையின் வாய்-அமுதைக் கண்ணன் துய்த்து அடைந்த இன்பத்தைக் கூறி, காவியச் சுவையும் கிளுகிளு சுவையும் கூட்டுகிறார் கவிஞர்! :)

சீவக சிந்தாமணி காலத்துக்கு முன்பாகவே, ஆழ்வார்கள் பாசுர மழை பொழிந்து விட்டார்கள்! அதனால் சீவக சிந்தாமணியைத் தமிழ்க் கடவுளுக்குத் தரவாக வைக்க முடியாது! இது சங்க கால இலக்கியம் அல்ல! இருப்பினும் ஐம்பெரும் காப்பியம் என்பதால், அதில் உள்ள திருமால் குறிப்புகளையும் தர முனைந்தேன்!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

3 comments:

 1. வள்ளி நலம் நுகர்ந்தவனைப் பற்றிய வரியைச் சொல்லிவிட்டு அதனைப் பற்றி பேசாமலேயே விட்டுவிட்டீர்களே. வியப்பு தான். :-)

  ReplyDelete
 2. //வள்ளி நலம் நுகர்ந்தவனைப் பற்றிய வரியைச் சொல்லிவிட்டு அதனைப் பற்றி பேசாமலேயே விட்டுவிட்டீர்களே. வியப்பு தான். :-)//

  :)

  வள்ளியின் காத்திருப்பு பற்றி ஏதாச்சும் பேசினா எமோஷனாலா ஆயிருவேன்! அதான் வரிகளுக்கு மேலோட்டமான பொருள் மட்டும் சொல்லிப் போந்தேன் குமரன்!

  நப்பின்னையின் வாய்-அமுதைக் கண்ணன் நுகர்ந்தான் என்று காட்டுபவர்,
  வள்ளிக்கு மட்டும் "நலம் நுகர்ந்தான்" என்பதோடு நிறுத்தி விட்டார்! இவர் சமண முனிவர்!

  வள்ளித் திருமணச் சொற்பொழிவுகளில் கூட, ஏதோ ஜீவான்மா-பரமான்மா என்று தான் அதிகம் பேசுகிறார்களே அன்றி, வள்ளி என்னும் சாதாரண பெண்ணின் ஏக்கங்களும், ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாது அவள் மனதிலே ஏற்றிக் கொண்டதும் எல்லாம் அதிகம் பேசுவதில்லை!

  அருணகிரி மட்டுமே பாதம் வருடிய மணவாளா என்று வலிந்து வலிந்து காட்டுவார்! ஏனையோர் அனைவரும், வள்ளி என்னும் சீவன், பரமனை அடையச் செய்த தவம் என்ற அளவில் நிறுத்தி விடுவார்கள்! அவள் சாதாரண அக வாழ்வியலை, ஏக்கத்தை அதிகம் காட்ட மாட்டார்கள்! பாவம் வள்ளி ராசி அப்படி! :(

  ReplyDelete
 3. வாய் இன் அமுதம் எய்தினான் என்பதை விட ஆழமான பொருள் நலம் நுகர்ந்தான் என்பதில் உள்ளதே இரவி. ஏன் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP