Tuesday, August 31, 2010

கலித்தொகையில் தமிழ்க் கடவுள்!

கலித்தொகை:
(காதலன், தன் காதலுக்காக எந்தத் தமிழ்த் தெய்வம் மேல் சத்தியம் செய்கின்றான்?)

இது போல் பல நுண்ணிய தமிழர் அகப் பொருளைக் காட்டுவது கலித் தொகை என்னும் பண்டைத் தமிழ்க் கருவூலம்!
கற்றறிந்தார் ஏத்தும் கலி என்பது இதைச் சிறப்பிக்க வந்த வாசகமே!

கலித்தொகை வெறும் இயல் (செய்யுள்) மட்டுமல்ல! இசைப் பாடலும் கூட! கலிப் பாக்களால் ஆனது! கலி என்றாலே ஓசை/இசை என்பது பொருள்!
கப்பம் தவிர்க்கும் "கலியே" துயில் எழாய்
என்று கோதையும் சங்கத் தமிழ் மரபை ஒட்டியே பின்னாளில் பாடினாள் அல்லவா!

கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை, மறுமையும், புல்லாளே ஆய மகள் - கொல்ல வரும் காளையை, அதன் கொம்பைக் கண்டு ஒரு தலைவன் அஞ்சுவானேல், அவனை மறுபிறவியிலும் விரும்ப மாட்டாள் ஒரு ஆயர் மகள்! - இப்படி வீரமும்+காதலும் கலந்த பாடல்கள் கலித்தொகையில்!

கலித்தொகை மொத்தம் 150 பாடல்களின் தொகுப்பு!
ஒவ்வொன்றும் பண்டைத் தமிழ் வாழ்க்கைக்கு அகச் சான்று! ஐந்து திணைகளாகப் பிரித்துத் தொகுக்கப்பட்டுள்ளது!

1. முல்லைக் கலி = நல்லுருத்திரனார்
2. குறிஞ்சிக் கலி = கபிலர்
3. மருதக் கலி = மருதன் இளநாகனார்
4. நெய்தற் கலி = நல்லந்துவனார்
5. பாலைக்கலி = பெருங்கடுங்கோன்

கலித்தொகை தொல்காப்பியத்துக்கும் முற்பட்டது (அ) சம-காலத்தது என்பது அறிஞர் பலரின் கருத்து! ஏனென்றால் தொல்காப்பியரே கலியையும், பரிபாடலையும் தன் நூலில் குறிப்பிடுகிறார்!
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர் - (தொல்காப்பியம்: அகத்திணை இயல் 53)

இது நூலைக் குறித்ததாகவும் இருக்கலாம்! அல்லது அந்த நூலின் பாவான கலியையும், பரிபாட்டையும் குறித்ததாகவும் இருக்கலாம்! ஆனால் இது தொல்காப்பிய காலத்திலேயே பண்டைத் தமிழ் மரபு என்பது மட்டும் தெளிவாகப் புலனாகிறது!
இப்பேர்ப்பட்ட மரபு! - அதில் தான் மாயோன் என்னும் திருமால் மேல் சத்தியம் செய்கிறான் காதலன்!
அதையா தமிழ்க் கடவுள் அல்ல என்று ஒதுக்குவது? தமிழைக் காதலிப்போர் செய்யத் துணியும் செயலா அஃது? :((


கலித் தொகை: 108 - அகப்புறத் தலைவன் காதற் சூள் (சத்தியம்) செய்தல்:

கலி: முல்லைக் கலி
பாடியது: சோழன் நல்லுருத்திரன்

என் காதல் உனக்கே என்று சொல்கிறேன்! என்னை நம்பு!
மார்பு மலையோடு ஒப்பமைந்த திருமால்!
அவர் திருவடியைத் தலையினாலே வணங்கி...
அந்தத் திருவடிகளைக் கையினால் தொட்டுச் சூளுரைத்தேன் என்றான்!

இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல -
அகல் அல்குல் தோள் கண் என மூ வழிப் பெருகி,
நுதல், அடி, நுசுப்பு என மூ வழி சிறுகிக்,
கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு,
அகல் ஆங்கண் அளை மாறி, அலமந்து பெயரும்கால்,
...
...
யாம் எவன் செய்தும், நினக்கு?

கொலை உண் கண் கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி,

இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி;

மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத்
தலையினால் தொட்டு உற்றேன், சூள்.


(நான் விரும்புதற்கு உரியவளாய்.....உன்னைக் காட்டிலும் இன்னொரு பெண் இல்லை! என் அருகில் வா! இனி நீ நினைத்த தவறுகளை எல்லாம் தெளிவிக்கிறேன்! என் காதல் உனக்கே என்று சொல்கிறேன்!
மார்பு மலையோடு ஒப்பமைந்த திருமால் அடியைத் தலையினாலே வணங்கிக் கையினால் தொட்டுச் சூளுரைத்தேன் என்றான்!

காதலுக்காக, காதலர்கள் எந்தத் தமிழ்த் தெய்வத்தின் மேல் சத்தியம் செய்கிறார்கள்? = சங்கத் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில், திருமால் தமிழ்க் கடவுள் என்று இப்போதாவது விளங்குகிறது அல்லவா!)


ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ; ஆயின் -
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்
வேந்து ஊட்டு அரவத்து, நின் பெண்டிர் காணாமை,
காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத்
தூங்கும் குரவையுஉள் நின் பெண்டிர் கேளாமை,
ஆம்பல் குழலால் பயிர் பயிர் - எம் படப்பைக்
காஞ்சிக் கீழ் செய்தேம் குறி.




கலித் தொகை: 124 - தோழி கூற்று - வரைவு கடாயது (திருமணத்துக்கு அவசரப்படுத்தியது)
(உலகளந்த இறைவனை "முதல்வன்" என்று மொழிகிறாள்! தலைவனைத் திருமணத்துக்கு அவசரப்படுத்துகிறாள்!)


கலி: நெய்தல் கலி
பாடியது: நல்லந்துவனார்

(களவு வெளிப்பட்ட பின், வரையாது, பொருள்வயின் பிரிந்து வந்தானைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, தலைவியது ஆற்றாமை கூறி, வரைவு கடாயது - திருமணத்துக்கு அவசரப்படுத்தியது)


ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்
பால் அன்ன மேனியான் அணி பெறத் தைஇய
நீல நீர் உடை போல, தகை பெற்ற வெண் திரை
வால் எக்கர்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப!
5 ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின்,
...
...
துணையாருள் தகை பெற்ற தொல் நலம் இழந்து, இனி,
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால்
இன்று இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
...
...
அரிது என்னாள், துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர,
20 புரி உளைக் கலிமான் தேர் கடவுபு
விரி தண் தார் வியல் மார்ப! விரைக நின் செலவே



கலித் தொகை: 103 - தோழி கூற்று - ஏறு தழுவுதல்
(காளையை அடக்கும் வீரத்திலும், பொலிந்த அழகிலும் இவன் மாயோன் போல இருக்கிறானே என்று வியப்பது)

கலி: முல்லைக் கலி
பாடியது: சோழன் நல்லுருத்திரன்

(ஆயர்கள் ஏறு தழுவி நின்றமையைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டி,
பின்னர், அவர் ஏறு தழுவி விட்டுக் குரவை ஆடுகின்றமையும் கூறி,

குரவை ஆடி, ''வழுதி வாழ்க!'' என்று தெய்வம் பராவுதும்...நீயும் அங்ஙனம் பாடுதற்குப் போதுவாயாக!' எனக் கூறியது)

கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை, மறுமையும், புல்லாளே ஆய மகள்!
- கொல்ல வரும் காளையை, அதன் கொம்பைக் கண்டு ஒரு தலைவன் அஞ்சுவானேல், அவனை மறுபிறவியிலும் விரும்ப மாட்டாள் ஒரு ஆயர் மகள்!

மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும்,
புல் இலை வெட்சியும் பிடவும், தளவும்,
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்-
கல்லவும், கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்,
...
...
ஓவா வேகமோடு உருத்துத் தன் மேல் சென்ற
சேஎச் செவி முதல் கொண்டு, பெயர்த்து ஒற்றும்
காயாம் பூங் கண்ணிப் பொதுவன் தகை கண்டை-
மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை

வாய் பகுத்து இட்டுப் புடைத்த ஞான்று, இன்னன் கொல்
மாயோன் என்று உட்கிற்று, என் நெஞ்சு!


(தோழியே, காளையை அடக்கும் இவன் காயாம்பூவால் ஆன கண்ணி சூடி நிற்கிறான்! இவன் அழகைப் பார்!
பகைவர் ஏவிய குதிரையை, அதன் வாயைப் பிளந்து கொன்ற மறத்தில், திருமால்
இவனைப் போலவே தோன்றினானோ? நடுங்குகிறது என் நெஞ்சம்...
)


மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்துப் பிறழப்-
பயில் இதழ் மலர் உண் கண்
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத்
தாது எரு மன்றத்து அயர்வர், தழூஉ.

கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்.

அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சு இலார் தோய்தற்கு அரிய- உயிர் துறந்து-
நைவாரா ஆய மகள் தோள்.
...
...
குரவை தழீஇ யாம், மரபுளி பாடி,
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்-
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே
!



கலித்தொகை 119: மாலை எனை வாட்டுதே - தலைவி தோழியிடம் ஏக்கம்! (திருமாலின் சக்கரம் போல், இப்படிக் காலத்தை விழுங்கி, மாலை வந்து என் தனிமையை வாட்டுதே!)

கலி: நெய்தல் கலி
பாடியது: நல்லந்துவனார்

அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக
பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,
நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தரக்,
கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்பத்

பல ஒளிக் கிரணங்களையே தனக்கு வாய் போல் கொண்ட கதிரவன், காலத்தை விழுங்கி, மாலையை உருவாக்குகிறான் போலும்! இது அந்த மாயோனின் சக்கரம் போல் அல்லவா இருக்கு! அந்தச் சக்கரத்தானின் நிறம் போல் அல்லவா இருள் வந்து சூழ்ந்து கவிகிறது?

இருள் கவியக் கவிய, தாமரைகள் கண் மூடும் காட்சி!
அது தம் கணவரைக் கூடிப் பெற்ற களைப்பால், தலைவியின் தூக்கம் வழியும் கண்ணைப் போல் இருக்கே! :))

தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்தச்
சிறு வெதிர் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மெனப்,
பறவை தம் பார்ப்பு உள்ளக், கறவை தம் பதி வயின்
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர,

தம் புகழைத் தம் காதுகளாலேயே கேட்கும் சான்றோர்கள், வெட்கப்பட்டு, தலை குனிந்து கொள்வார்களாம்! (இன்றைய அரசியல்வாதிகள் மாதிரிக் கிடையாது போல)...அதைப் போல் தலை சாய்த்து மரங்கள் எல்லாம் துஞ்ச....

இன்னும் மலர்கள் மலர, வண்டுகள் இம்-மென்று ஆர்ப்ப, பறவைகள் தம் கூட்டுக்குள் பேடுடன் ஒடுங்க, கறவைப் பசுக்கள் கொட்டகையில் அடங்க...மாலை நேரக் காட்சிகள்.....

மா வதி சேர, மாலை வாள் கொள

அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந்தீச் செவ் அழல் தொடங்க - வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்,
மாலை என்மனார் மயங்கியோரே!



(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

1 comment:

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP