Tuesday, August 31, 2010

திருமுருகாற்றுப்படையில் தமிழ்க் கடவுள் பெருமாள்!

திருமுருகாற்றுப்படை:

அருளியவர்: நக்கீரர்.
இவரே தமிழில் முதல் ஆன்மீகப் பதிவர்!

பின்னே..... எல்லாப் புலவர்களும் அகத்துறை, புறத்துறை-ன்னு பாட...
இவர் மட்டும் தான் ஆன்மீகத்துக்குன்னே, தனியாக ஒரு ஆற்றுப்படை பாடினார்! எல்லாப் புலவர்களும் மன்னனை நோக்கி ஆற்றுப்படுத்த,
இவர் தான் முதன் முதலில், இறைவனை நோக்கி ஆற்றுப்படுத்தினார்!

மாயோனையும் பாடும் வாயோன் என்று தன்னை அறிவித்து, நமக்கும் அதை அறிவிக்கிறார் நக்கீரர்! திருமால், முருகன் என்று இருவரின் குணங்களையும் ஏத்துகிறார்!

கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் . . .150
புள்ளணி நீள்கொடிச் செல்வனும்,

(நச்சுப் பல்லும், தீப்பறக்கும் கண்களும், அச்சம் கொடுக்கும் திறலும் கொண்ட பாம்புகளே அஞ்சும், பெரிய சிறகுகள் உடைய பருந்து பறவை! அதைக் கொடியில் கொண்டுள்ள மாயோனே! நீள் கொடிச் செல்வா!)
...
....

திருவாவினன் குடி என்னும் பழனி மலைக்கு பல முனிவர்களும், கந்தருவப் பெண்களும், நான்முகன், இந்திரன் முதலானோரும், சிவனாரும், திருமாலும் ஒருங்கே வரும் காட்சியை விவரிக்கும் போது....

மாயோனைப் "புள்ளணி நீள் கொடிச் செல்வன்" = பறவையைக் கொடியில் கொண்ட செல்வன் என்று ஏத்துகிறார்! இவ்வாறு முருகனோடு வந்த முத்தொழில் மூர்த்திகளை அனைவரும் ஏத்துவதாகவும் பாடுகிறார்!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன்: முருகன்
திணை: பாடாண்திணை
துறை: ஆற்றுப்படை
பாவகை: ஆசிரியப்பா
மொத்த அடிகள்: 317


நக்கீரர் சங்கத் தமிழ் புலவரே அல்ல! அவர் காலம் கி.பி 9! சொல்லுது விக்கிப்பீடியா! :)

திருமுருகாற்றுப்படையில் சரவண பவ என்னும் ஆறெழுத்து மந்திரம் பற்றிய குறிப்பு வருவதால் (ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி), இது சங்க கால நூல் தானோ? என்று ஐயுறுவாரும் உண்டு! மும்மூர்த்திகள், கந்தர்வ தேவதைகள் என்று பல பிற்காலச் சேதிகளும் இதில் காணப்படுவதால் தான் இந்த ஐயம்!

மேலும் பன்னிரு சைவத் திருமுறைகளில், திருமுருகாற்றுப்படையும் பதினோராம் திருமுறையாகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது!

அதில் நக்கீரர் பாடியதாக, இன்னும் சில தொகுப்புகள் - கோபப் பிரசாதம், கண்ணப்ப நாயனார் வரலாறு, கயிலை பாதி காளத்தி பாதி - என்றெல்லாம் வைக்கப்பட்டுள்ளதால், அந்த வடமொழிப் பெயர்களைப் பார்த்து, இது போன்ற ஐயம் வந்து, நக்கீரர் பிற்காலத்தவர் (9th Century AD) என்று விக்கிப்பீடியாவிலும் எழுதி வைத்து விட்டனர்!

ஆனால் இது தவறு!

நக்கீரர் சங்கத் தமிழ்ப் புலவரே! கடைச் சங்கமாக இருக்கலாம்!
திருமுறைகளில் உள்ள தொகுப்புகளைப் பாடியது பிற்கால நக்கீரர்களாக இருக்க வாய்ப்புண்டு! நக்கீரர் பற்றிய கதைகளும் பிற்காலத்தையவே!
ஆனால் அதற்காகத் திருமுருகாற்றுப்படையையோ, நக்கீரரையோ பிற்காலத்தவர் என்று முடிவு கட்டிடக் கூடாது! அதன் பாடல் அமைப்பும், இன்ன பிற சேதிகளும், அதைச் சங்க நூலாகவே காட்டுகின்றன!

எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன்? முருக ஆசையினாலா? :) மாயோன் பாசத்தாலா? :) இல்லை! தமிழ்ச் சான்றாண்மையால்!

ஏனென்றால்.....புறநானூற்றில் வரும் இன்னொரு நக்கீரர் பாடலும், இதற்குச் சான்று! - 56 ஆம் பாடல்! இதிலும் மாயோனைப் போற்றுகிறார்!
எங்கும் புகழ் பரவி இருப்பதில், திருமாலைப் போல இருக்கீயே
என்று பாண்டியனைப் பாடுகிறார்!

விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்,


கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே, வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்
அரியவும் உளவோ, நினக்கே?


மாற்ற முடியாத கோபத்தில் கூற்றுவனைப் போல இருக்கீயே!
வலிமையில் பலராமன் போல இருக்கீயே!
புகழ் பரவி இருப்பதிலும், பகைவரைப் பணிய வைக்க வல்லதிலும் திருமாலைப் போல இருக்கீயே!
நினைச்சதை முடிப்பதில் முருகனைப் போல இருக்கீயே!
உன்னால் முடியாததும் ஒன்று இருக்கா, பாண்டிய மன்னா?



கவனியுங்கள், நக்கீரர் காலத்துப் பாண்டியன் = நன்மாறன்!
சினிமாவில் வருவது போல்...கூந்தலுக்கு வாசனை கண்டு புடிக்க படாதபாடு பட்ட ஏ.பி நாகராஜனின் செண்பகப் பாண்டியன் அல்ல! :)

"இறையனாரும், தமிழ்க் கடவுள் எம்பெருமான் முருகவேளும்" என்று சினிமா வசனத்தை மட்டும் வச்சிக்கிட்டு, தமிழ்க் கடவுள் இவர் ஒருவரே என்று முடிவு கட்டி விட முடியாது! அதற்குத் தமிழர் தந்தையான தொல்காப்பியரிடம் கேட்க வேண்டும்! ஏபி நாகராஜனிடம் அல்ல! :))

திணை = பாடாண் திணை
துறை
= பூவை நிலை
பாண்டியன், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை,மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது!

தமிழ் இலக்கியம் பயிலும் போது, சமய விருப்பு வெறுப்புகளைக் கடந்து, உள்ளது உள்ளவாறு, தக்க தரவுகளோடு நோக்க வேண்டும்;

பன்னிரு சைவத் திருமுறையில் இருக்கும் நக்கீரர் "கோபப் பிரசாதம்" என்ற நூலை வைத்து, அதில் இருக்கும் நக்கீரர் திருமுருகாற்றுப்படையும் அப்படியே என்று முடிவு கட்டினால், அது தவறு அல்லவா?
சமயம் கடந்த அந்த "இலக்கிய நேர்மை" நமக்கு வந்தால் தமிழ் தழைக்கும்!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

3 comments:

  1. இன்னும் நிறைய விளக்கங்கள் வேண்டுமோ? சும்மா குறிப்புகளை மட்டும் எடுத்து வைக்கிறீர்களோ இங்கே?!

    ReplyDelete
  2. திருமுருகாற்றுப்படையில் திருமாலின் வர்ணனை அவ்ளோ தான் குமரன்! அவர் முருகனையே கொஞ்சமாத் தான் வருணிக்கிறார்! நிறைய அறுபடைவீட்டுச் செய்திகளும், அங்கு மக்கள் வாழ்வும் தான்! கூடவே கதைக் குறிப்புகள்!

    அதான் அதே நக்கீரர் பாடிய புறநானூற்றுப் பாட்டும் கூடவே வச்சிருக்கேனே!

    புகழ் எங்கும் பரவி இருப்பதில் மாயோனை ஒத்தீயே! :)
    விளக்கம் கேட்பதில் குமரனை ஒத்தீயே! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP