Tuesday, August 31, 2010

பரிபாடலில் பெருமாள் என்னும் தமிழ்க் கடவுள்!

பரிபாடல்:

பரிபாடல் போல் இறைவனை "மட்டுமே" அதிகமாகப் பேசும் சங்க நூலைக் காண்பது அரிது! அப்போதே ஆன்மீகப் பதிவுகள்! :)
முருகனைப் பற்றியும், திருமாலைப் பற்றியுமான சங்கத் தமிழ்க் குறிப்புகள் தேடுவோர்க்குப் பரிபாடல் என்பது ஒரு களஞ்சியம்! அத்தனையும் இசைப் பாடல்கள்!

அகம், புறம் இரண்டும் சார்ந்தது! ஆனால் புறத் திணையே அதிகம்! இன்றைக்கு கிடைக்கும் 22 பாடல்களில்...
* வைகை/மதுரை மேல் 8 பாடல்கள்
* முருகன் மேல் 8 பாடல்கள்
* திருமால் மேல் 6 பாடல்கள்!

முருகன் பாடல்கள் அகம்/புறம் இரண்டிலும் வர,
திருமால் பாடல்கள் புறத் திணையில் வருகின்றன!

உடனே, சில எதுகை மோனை எகத்தாளர்கள், "பார்த்தீங்களா, முருகனை அகத்தில் வைத்து, திருமாலைப் புறத்தில் வச்சாங்க" என்று கூடப் பல்லிளிக்க வாய்ப்புண்டு! :) இப்படி எல்லாம் சிந்திக்க அவர்களால் மட்டுமே முடியும்! :)

புறம் = வீரம்! அகம் = காதல்!
புறம் என்றால் புறத்தே (வெளியே) வைத்தல் என்று எடுத்துக் கொள்வது பிழையானது! தமிழர்கள் வாழ்வில் அகமும் புறமும் இயைந்தே இருந்தன!
பரிபாடலில் முருகன் புறத்திலும் இருக்கிறான்!
"புற"நானூறு என்றால் "வெளியே தள்ளி வைச்ச நானூறு"-ன்னு சொல்ல முடியுமா? அய்யோ அய்யோ! :))

காதலன், தன் காதலை நிரூபிக்க யார் மேல் சத்தியம் செய்தான்? = திருமால் என்னும் தமிழ்க் கடவுள் மீது!
கலித் தொகைப் பாடல் 108-இல் பார்த்தோம் அல்லவா? ஆக, அகம்/புறம் என்று திருமாலும் இரண்டு திணைகளிலுமே வருகிறார் என்பது கண்கூடு! சிலருக்கு மட்டும் கண்"மூடு"! :)

திருமாலைப் பரிபாடலில் பாடிய புலவர்கள்:
1. இளம் பெருவழுதியார்
2. கடுவன் இளவெழிநியார்
3. கீரந்தையார்
4. நல்லேழினியார்
5. மற்ற புலவர்கள் - பெயர் கிடைக்கவில்லை!

திரு இருந்தையூர், திருமாலிருஞ்சோலை என்ற தலங்கள் பாடப் பாடுகின்றன!
இரண்டுமே மதுரைக்கு அருகில் உள்ளவையே!
* திருமாலிருஞ்சோலை = அழகர் கோயில்/பழமுதிர் சோலை
* ஆனால் திரு இருந்தையூர் தலம் இப்போது எங்குளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை!

"இருந்தையூர்" குறுங்கோழியார் என்னும் புலவர், இரண்டாம் சங்கத்தில் (இடைச் சங்கம்) இருந்தது பற்றிச் சொல்லப்படுகிறது! அடியார்க்கு நல்லார் உரையில் கூட இவர் வருகிறார்!
இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் துவரைக் கோமான் = கண்ணன் வீற்றிருந்த செய்தியும் சொல்லப்படுகிறது!

அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் உரைகள் இதை விரிவாகப் பேசுகின்றன!

"இருந்தையூர்" குறுங்கோழியாரின் ஊர்ப் பெயரில் இருந்து, "இருந்தையூர்" இருந்தது புலனாகிறது அல்லவா!
அங்குள்ள இறைவனைப் பாடும் பாடல்கள் பரிபாடலில் உள்ளன!
திருமால் வழிபாட்டில், நாகர் வழிபாடும் (ஆதிசேடனும் ) கூடவே காட்டப் படுகின்றது! இதோ...பரிபாடல்-கள்!



பரிபாடல் 3: "மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி மாயோனே"!
செழுந்தமிழில் திருமால் தத்துவம் தொனிக்கும் நல்ல இசைப்பாட்டு!

இது ஒரு எசப்பாட்டு (இசைப்பாட்டு)!
எழுதியது ஒருவர்! இசை அமைத்தது இன்னொருவர்!

அப்பவே கண்ணதாசன்-எம்.எஸ்.வி, வாலி-இளையராஜா, வைரமுத்து-ரஹ்மான் ஸ்டைல் போல! :)

பெருமாளை, "மாஅயோயே, மாஅயோயே, மாயோனே" என்றெல்லாம் வாய் விட்டு அழைக்கிறார்!
"முன்னை மரபின் முதுமொழி முதல்வ "
என்கிறார்! அப்படியே "அரும்பெயர் மரபின் பெரும்பெயர் முருக!" என்பது போலவே இருக்கு-ல்ல? :)


பாடியவர்: கடுவன் இளவெயினனார்
இசை அமைத்தவர்: பெட்டனாகனார்
பண் (ராகம்): பாலையாழ்

மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!


திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள்

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10

ஐம்பூதங்கள், கதிர்/மதி (சூரிய/சந்திரன்), அறம்/ஐந்தொழில், அசுரர்/அமரர், எண் திசைகள், பதினொரு ருத்திரர், மருத்துவ இருவர், கூற்றுவன், மூன்று*ஏழு உலகம், அதிலுள்ள உயிர்கள்....எல்லாம்....உன்னில் இருந்தே விரிந்தன!

மாயா வாய்மொழி உரைதர வலந்து:
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ‘ என பொழியுமால், அந்தணர் அரு மறை.
முனிவரும் தேவரும் பாடும் வகை

தாமரைச் செல்வன் பிரமனும் உன்னுள் இருந்தே தோன்றினான்! இவை அனைத்தும் மறையில் உள்ள தரவு!

‘ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், 15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்

பருந்துப் புள்ளினைக் கொடியில் உடைய சேவல் கொடியோனே! (சேவல்=பறவை)! உன் சேவடி தொழாதவரும் ஒருவர் உண்டா?

ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்‘ எனவும்,
‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25
சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்‘ எனவும்,
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை. 30

ஊழிக் காலத்தில் பன்றியாய்த் தோன்றி உலகினை மீட்டு, அன்னமாய்த் தோன்றி பெருநீரைச் சிறகால் வறண்டு போகச் செய்தாய் என்றெல்லாம் பாடுகின்றார்கள்! நானும் உன் சீர்மையை எண்ணி வியக்கிறேன்!

வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை,
இரூ கை மாஅல் ! 35

கேசி என்னும் கூந்தலானைச் சினந்தவனே! உன் கைகள் தான் எத்தனை எத்தனை பணிகளைச் செய்துள்ளது? இரு கை மால்! அதில் ஒரு கை மட்டும், அமிழ்தம் ஒரு சாராருக்கு மட்டுமே ஈந்து, நடுவுநிலை தவறியதோ என்னவோ? (அப்படித் தான் இப்போது நான் நினைக்கின்றேன்)

முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!

அதற்கு அப்புறம் உனக்குப் பல கைகள் இருப்பதைப் பலரும் காட்டியுள்ளனர்! 3,4,5,6,7,8,9,10,100,1000,10000, 100000 என்று விரிந்து கொண்டே போகிறது உன் ஆற்றல்!

அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ!

எம்பெருமானே! முன்னை மரபின் முதுமொழி முதல்வா!
வரம்பு அறியா யாக்கை (திருமேனி) கொண்ட உன்னை...வரம்புள்ள யாக்கை கொண்ட யாங்கள் அறிய ஏலுமோ? உன்னை நீ அல்லவா உணர முடியும்!

நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50

அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும், ‘செங் கண் மாஅல்! 60
ஓ!‘ எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;

அமரர் அசுரர் இருவர்க்கும் முதல்வன் நீயே! அதனால் நண்பர்/பகைவர் என்ற பாகுபாடு உன் மரபுக்கு உண்டா என்ன?
ஆயிரம் படமுடைப் பாம்பும் கொண்டவன்! பருந்தும் ஊர்தியாய்க் கொண்டவன்!
இப்படி ஓ-வென்று விரியும் கால வெளியில், இரண்டு எதிர் எதிர் தத்துவங்களுக்கும் (Pair of Opposites) உடையவன் நீ! நன்கு அறிந்தேன்!

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

எம்பெருமானே!
தீக்குள் சூடு நீ! மலருக்குள் மணம் நீ!
அணியில் ஒளி நீ! சொல்லில் உண்மை நீ!

(தெரிய மாட்டாய், உணர மட்டுமே படுவாய்!
சொல்லில் பொய் இருப்பது அப்போது சொல்லப்படும் அந்தச் சொல்லுக்கு மட்டும் தானே தெரியும்! அதற்கு இது பொய் என்ற உண்மை தெரியும் அல்லவா?)

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,

எம்பெருமானே!
அறத்துக்குள் ஒளிந்திருக்கும் அன்பு நீ!
மறத்துக்குள் ஒளிந்திருக்கும் வீரம் நீ!
கதிர்-மதிகளும், அனைத்தும் நீயே! ஏன் என்றால் அனைத்தின் உட்பொருளாய் இருக்கின்றாய்!

(பின்னாளில் மாறன் என்னும் நம்-ஆழ்வார், இந்தச் சங்கத் தமிழ் மரபை ஒட்டியே, "உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் மறைந்துளன்" என்று விதப்பொருமைத் தத்துவத்தை, பாசுரத்தில் வடித்துச் சென்றார்! )

உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;

உனக்குத் தங்கும் இடமும் இல்லை! தங்குவதும் இல்லை! ஆனால் தங்குகிறாய்!
உனக்குப் பிறவியும் இல்லை! மறவியும் இல்லை!
(இருப்பினும் உலக நலனுக்காகப் பிறந்து வாழ்ந்து காட்டுகிறாய்)

உன்னைப் பிறப்பித்தாரும் இல்லை!
(பிறவா யாக்கைப் பெரியோன் என்று ஈசனைச் சொல்வோம்! அவருக்குப் பிறவா-ஆனால் யாக்கை!
பிறவா உயிர்மைப் பெரியோன் என்று உன்னைச் சொல்லலமா? பிறவா-உயிர்மை! நீ தான் யாக்கைக்கு எல்லாம் உயிராய், உடல் மிசை உயிர் என நின்றுள்ளாயே!)

பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும் 75
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை; 80

காயாம் பூ கருநீல வண்ணா, உன் அருளே குறை! அறமே செங்கோல்! அப்படி உலகை ஆளும் மன்னா, எம் வண்ணா!
0, 1/4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 என்று எண்களின் தத்துவத்தில் உன்னை வைத்துப் பேசுவார்கள்!
("ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்"....என்றும் "பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்" என்றெல்லாம் ஆழ்வார் பின்னாளில் பேசியதும் ஈதே!)

செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!
இடவல! குட அல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! 85

பல வண்ணனே! இட-வலமாய் நின்று குரவைக் கூத்து, குடக் கூத்து ஆடுவோனே! கோவலா=இடைச் செல்வனே!

தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பொரு விறல் மள்ள! 90

நல்ல கவிஞனே! யாழ் இசை வாணனே! திருவின் காதல் கணவனே!

மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! 94

ஊழி வெள்ளத்தில் மீண்டும் தோன்றி, பிரமனுக்குத் திரு-வாய்மொழி மறை சொல்லி, உலகு படைத்தவனே!
உன் திருவாழிப்படையின் (சக்கரத்தின்) நிழலே, உலகுக்கு நல்ல நிழலாக அமைந்து காக்கட்டும்!

இது தான் பரிபாடல் காட்டும் திருமால்-தத்துவம்!
எவ்ளோ பெரிய பாட்டு-ல்ல? :)
அவ்ளோ தான் முடிஞ்சிரிச்சி-ன்னு நினைச்சிறாதீங்க! :) "இரண்டொரு பாடல் மட்டுமே திருமாலுக்கு"-ன்னு சொன்னாங்க-ல்ல? பரி பாடலில் கொட்டோ கொட்டோ-ன்னு கொட்டிக் கிடக்கு! இன்னும் வரும்! :))



பரிபாடல் 1: திருமாலே, "ஆர்வத்தால்" உனை என்னென்னவோ பேசுகின்றோம்!
சிறு பேர் அழைத்தாலும் சீறி அருளாதே!


இந்தப் பரிபாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை! ஆனாலும் பல செறிவான கருத்துக்கள் உள்ளன! இந்தப் சங்கத் தமிழ்ப் பாடலை ஒட்டி, நம்மாழ்வாரும் ஆண்டாளும் கூடத் தத்தம் கவிதைகளை அமைக்கின்றனர்!

ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பனைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5

(ஆயிரம் தலை கொண்ட பாம்பு, தீ உமிழ்ந்து, உன் திருமுடி மேல் விரித்து நிற்க...
மார்பிலோ திருவானவள் திகழ...
வெண்சங்கு மேனியும், பனைக் கொடி ஏந்தியும், கூர் கொண்ட கலப்பை ஏந்தியும், ஒரு குழை மட்டும் அணிந்த வாலியோனாகவும் (பலராமன்) , நீயே இருக்கின்றாய்!
...
...
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

(சேவல் அம் கொடியானே-ன்னு எதுக்குத் திருமாலைக் கூப்பிடுகிறார் என்று குழம்பக் கூடாது! சேவல்=பறவை! பருந்துப் பறவையைக் கொடியில் கொண்ட மாயோனே! நா வல்ல மறைகளை அறவோராகிய அந்தணர் ஓதுகிறார்களே! அந்த மறைக்குப் பொருளே நீ தான்! )

(சந்த ஓசை மிக்க வரிகள்...முழுதுமாய்க் கிடைக்கவில்லை)
இணை பிரி அணி துணி பணி எரி புரை விடர்
இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர் 15

நெரி திர டெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேர் அணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
...
...
(வணங்குதல் அல்லது வாழ்த்துதல் அரிது)
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:
அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35

(நீ எப்படி வருவாய் என்று அறிவது, நன்கு படித்த முனைவர்க்கும் அரிது! அப்படிப்பட்ட உன்னைப் போய், இன்னான்...இப்படி என்று என்னால் கூற முடியுமோ?)

(சிறு பேர் அழைத்தனவும்...சீறி அருளாதே)
அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்

பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.

(உன் அருமை அறிய மாட்டோம்! ஆனால் உன் பேரில் மிகுந்த ஆர்வம்!
அதனால் இங்கு பாடும் பாட்டெல்லாம், மிகுந்த மெலிதாக இருக்கிறதே என்று எண்ணாது....
அல்லிமலர் மங்கை மார்பா! நீ சீறாது அருள வேண்டும்!

இந்தப் பரிபாடலை ஆண்டாள் படித்திருப்பாள் போல! அதான் திருப்பாவையில்...
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே - என்றே பாடுகிறாள்!)

அடுத்து, பல திருமால் தத்துவங்களைப் பாட்டில் காட்டுகிறார் புலவர்...
உலக இயக்கமும், உடன்மறை-எதிர்மறைகளும்-Pair of Opposites, எல்லாமும் நீயே என்று காட்டுகிறார்!

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45

(ஐந்தலைச் சிவபிரானும் நீ! ஆகாசம் முதலான பூதங்களும் நீ, காட்சி-மாட்சியும் நீயே)
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்

மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50
நிலனும், நீடிய இமயமும், நீ.

(பரிபாடல் சங்கத் தமிழ்க் கருத்தையே, மாறன் என்னும் நம்மாழ்வாரும், பின்னாளில் அழகாகக் காட்டுகிறார்...
சிவ பிரானும் நீயே என்று திருமாலை வியக்கிறார்! -
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே"

ஆழ்வார்கள் வடமொழியை அதிகம் சாராமல், சங்கத் தமிழ் மரபினையே, தங்கள் பாசுரங்களில் பெரிதும் பேணி வளர்த்தனர்! நம்மாழ்வார் வரிகளைப் பாருங்கள்! இந்தப் பரிபாடல் கருத்து போலவே இருக்கும்!

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொலோ?

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்,
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்,
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ண னேறக் கொலோ?

(இப்படி , உன்னை இன்னாரைப் போல் என்று என்னால் முழுமையாகச் சொல்ல முடியவில்லை! ஏனென்றால் நீ ஒப்பாரும்-மிக்காரும் இல்லாதவன்! ஒப்பில்லா அப்பன்! சக்கரப் படையை வலத்தில் ஏந்திய "முதல்வன்")


அதனால்,
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,

நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!
நின் ஒக்கும் புகழ் நிழல் அவை;
பொன் ஒக்கும் உடை அவை;
புள்ளின் கொடி அவை; புரி வளையின் அவை; 60

எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,
ஆங்கு,

காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68

(உன் மேல் காமம் கொள்ளும் அன்பர்களோடு....ஒரூங்கிருந்து
உன் திருவடி தொழும் இன்பமே எமக்கு இன்பம்!
ஏமுறு நெஞ்சத்தோம் நாங்கள்! பொலிக பொலிக!)



பரிபாடல் (திரட்டு): திருமால்-நாகர் வழிபாடு (கிராமிய மக்கள், பாம்புகளை ஆலயத்தில்-மரத்தின் கீழ் வைத்து வழிபடும் வழக்கம்)
(இது பரிபாடல் திரட்டு; நச்சினார்க்கினியர் உரையில் இருந்து திரட்டிய பரிபாடல்கள்...)


வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் .. . .5
திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது


(மலையில் மேகங்கள் பொழிய, அந்த நீர், நான்மாடக் கூடலில் உள்ள மக்கள் எதிர்கொள்ள, அந்தத் துறையில் உள்ள இருந்தையூர் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள செல்வத் திருமாலே! உன் திருவடியைத் தொழுது வாழ்த்துகின்றோம்)
...
...
(திரு இருந்தையூரின் வளமும் நலமும், மக்களும்)
...
...
(மாயோன்-நாகர் கோயிலில் மைந்தரும் மகளிரும் பரத்தையரும் வழிபடுதல்)

வாய் இருள் பனிச்சை வாள் சிலைப் புருவத்து
ஒளி இழை ஒதுங்கிய ஒண் நுதலோரும்,
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்,
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும்,
விடையோடு இகலிய விறல் நடையோரும் . .. . . 40
...
மடையர், குடையர், புகையர், பூ ஏந்தி
இடை ஒழிவு இன்றி, அடியுறையார் ஈண்டி, ...45
...
...
சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.

...
...
(பாற்கடல் கடைந்த போது, நாகத்தின் தொண்டு, முப்புரம் எரித்து போழ்து ஆதிசேடனின் பங்கு - இவையும் நினைவுகூரப்படுகிறது!
பாற்கடலில் மத்துக்குக் கயிறு போல இருபுறமும் வாங்கி இழுத்தாலும், அதன் வலியைப் பொறுத்து, பொது நன்மைக்கு அணிகலனாய் நின்றதுவும்...
முப்புரிம் எரித்த காலை, ஈசனின் வில்லுக்கு நாணாய் நின்றதுவும் பேசப்பட்டு, வாழ்த்தப்படுகிறது)

திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக் கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி, ...65

மகர மறி கடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய, இரு வயின் நாண் ஆகி,
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க,
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் ...70

அறாஅது அணிந்தாரும் தாம்;
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்
புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்;
மணி புரை மாமலை ஞாறிய ஞாலம்
அணிபோல் பொறுத்தாரும் தாஅம்; பணிபு இல் சீர்ச் .....75

செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல் உயர் வென்னி இமய வில் நாண் ஆகித்
தொல் புகழ் தந்தாரும் தாம்
...
...
(நாகர்-ஆதிசேடனின் சிறப்புக்களைப் போற்றுதல்)

அணங்குடை அருந் தலை ஆயிரம் விரித்த
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி,
நல் அடி ஏத்தி நிற் பரவுதும்-
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே. ...82


(ஆயிரம் தலைகளைப் பரப்பி, சுற்றத்து அடியவர் கணங்களுடன் இருக்கும் ஆதிசேடனை வணங்கி...திருமாலே, உன் திருவடி பணிகிறோம்!
எதற்குத் தெரியுமா? நாங்கள் எல்லோரும், இதே போல், அடியார்களுடன் நின்னடியைப் பிரியாமல் இருப்பதற்கே!)


பரிபாடல் 2: திருமாலின் ஊழிப் பெரு வெள்ளம்

அடுத்த பாட்டைப் பார்ப்போமா? அதுவும் ஒரு எசப்பாட்டு (இசைப்பாட்டு)! எழுதியது ஒருவர்! இசை அமைத்தது ஒருவர்!
படைப்பு, உயிர்கள் தோற்றம், மறைவு, ஊழி-ன்னு பலவும் பேசுகிறது!

பாடியவர்: கீரந்தையார்
இசை அமைத்தவர்: நன்னாகனார்
பண் (ராகம்): பாலையாழ்

தொல் முறை இயற்கையின் மதிய
... ..... ... மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5

பெரும் ஊழியால் மண்ணும் விண்ணும் எல்லாம் பாழ்பட....அனைத்தும் ஒடுங்கிய பின்...

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும்; பனியடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10

ஒடுக்கத்தில் இருந்து வான்(வெளி) தோன்ற, பின்பு அதிலிருந்து காற்றும், அதில் உயிர்ப்பு பெற்று தீயும், அது குளிர்வித்து நீரும், அதிலிருந்து நிலமும்...

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை- 15

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்

உலகைக் காக்க கேழல் என்னும் பன்றியாகவும் ஆகி, நீருக்குள் புகுந்து நிலத்தை நிறுத்தினாய்! நிலத்தில் உயிர்கள் தோன்றின! உன் ஊழித் திறத்தை யார் அறிவார்? ஆழி முதல்வா, உன்னைத் தொழுகிறோம்!

திருமாலின் நிலைகள்

நீயே, ‘வளையடி புரையும் வாலியோற்கு அவன் 20
இளையன்‘ என்போர்க்கு இளையை ஆதாம்,
‘புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25

இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச்சிறப்பே.

உன்னை இளையன் என்று சொன்னால் பலதேவர்க்கும் இளையன் ஆகி விடுகிறாய்! முதியன் என்று சொன்னால், மூவா ஊழி முதல்வன் ஆகி விடுகிறாய்! இளையன்-முதியன் என்று அநாதி நாதனாய், உயிர்களுக்குள் உயிராய் நிற்கின்றாய்!

திருமாலின் சிறப்பு

ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
நித்தில மதாணி அத்தகு மதி மறுச் 30

செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று. 35

மண்மகளைப் பாசி தூர்த்து மணந்தாய் என்பர் சிலர்! ஆனால் அவர்கள் தத்துவம் அறியாதவர்கள்! திருமகள் தான் உன் மார்பில் முன்பிருந்தே இருக்கிறாளே! இது வெறும் ஊழியின் பொருட்டு செய்த செயல் அல்லவா! உங்கள் சேர்த்தி தான் என்றுமுள ஒன்றாயிற்றே!

படைச் சிறப்பு

ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து,
இடி எதிர் கழறும்-கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு,
முடிகள் அதிர, படிநிலை தளர,
நனி முரல் வளை முடி அழிபு, இழிபு, 40

தலை இறுபு தாரொடு புரள-
நிலை தொலைபு, வேர், தூர், மடல்,
குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப்
பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல்-
நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி, 45

ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,
அளறு சொரிபு, நிலம் சோர,
சேரார் இன் உயிர் செகுக்கும்-
போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே:
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே; 50
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.

உன் ஆழிப்படையாகிய சக்கரம், மாற்றார் வலியை அக்குவேறு ஆணிவேறாய்த் தொலைக்கும்! பனங்காய்கள் சிதறுவது போல் சிதறடிக்கும்! பார்ப்பதற்கு கூற்றத்தை ஒக்கும்! நிறமோ, பொன்னையே சுடவல்ல தீக்கொழுந்தை ஒக்கும்!

திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புக்கள்

நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;
கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;
வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், 55

சாயல் நினது, வான் நிறை-என்னும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்
எவ் வயினோயும் நீயே.

உடலோ = நீலமணி, கண்ணோ = தாமரை, வாய் = தவறாது வரும் நாள், பொறுமை = நிலம், அருளோ = மேகம் என்று மறைகள் கூறும்!

உருவமும், உணவும், வெளிப்பாடும்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே! 60

கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,
நின் உருபுடன் உண்டி; 65

பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு.

பல் புகழும் பரவலும்

வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
மூவா மரபும் ஓவா நோன்மையும் 70

சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்
... ... ... மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்-
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!‘ எனவே. 76

அமுதம் ஈந்து சாவா மரபில் செழிக்க வைப்பவா, உன்னைப் பலவாறு துதித்தோம்! வாழ்க! எங்கள் அறிவு, மாயையில் சிக்காது, மெய்யுணர்வே பெற அருள்வாயாக!



பரிபாடல் 4: போற்றினாலும் போற்றாவிட்டாலும் யாவர்க்கும் காப்பு - பெருமாள்!

பாடியவர்: கடுவன் இளவெயினனார்
இசையமைத்தவர்: பெட்டனாகனார்
பண்: பாலையாழ்

ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்துத் தம்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,
நின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்கு
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம், ஆயினும்,
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப; 5

ஐம்புலன்களால் உருவாகும் அக இருள் நீக்கும் திருமாலே! உன்னை ஆர்வலர் பலவாறு பேசித் தொழுகின்றனர்; அப்பேச்சு பிதற்றலாக இருப்பின் அது கண்டு நீ சிரிக்கக் கூடும்! ஆனால் அச்சிரிப்பும் எமக்கு உவப்பே! அதற்கெல்லாம் நாங்கள் வெட்கப்பட மாட்டோம்! உன்னைத் தொடர்ந்து ஏத்துவோம்!

திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;
மாஅ மெய்யடு முரணிய உடுக்கையை;
நோனார் உயிரொடு முரணிய நேமியை;

கதல் போன்ற கருத்த மேனி! அதற்குச் சற்றும் ஒட்டாத பொன்னிற ஆடை! திருவாழி என்னும் சக்கரம் தரித்து விளங்குகிறாய்!

செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ- 10
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி,
மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15

பெருகலாதன் (பிரகலாதன் - பிருங்கலாதன்) என்னும் பிள்ளை-அன்பன்!
அவன் உன்னை நெஞ்சில் புதைத்து வைத்திருந்தான்!
அதைப் பொறுக்க மாட்டாது, புகை சூழ்ந்த நெஞ்சம் கொண்டு, அன்பனைப் பல துன்பங்களுக்கு ஆளாக்க,
அவன் கூம்பி நடுங்கினும், தந்தை என்பதால், தன்னை இகழ்ந்தாலும் தான் இகழாது நின்றான்! அதனால் நீயும் இகழாமல் வந்தாய்!

நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியடு, 20
தடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;

தூணில் புடைப்ப, அப்போதும் மனம் மாறாது , ஒன்றாமல், பகையே விரும்பினான் அவன் தந்தை!
அவன் மார்பு மோதி, கூர் நகம் நட்டு, இடி போல் இயம்பி, அவனைக் கூறாக்கினாய்!

புருவத்துக் கரு வல் கந்தத்தால்
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;

உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;

நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம். 35

சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை;
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;
நின் ஒன்று உயர் கொடி யானை; 40

கருடச் சேவல் கொடியும் உனதே! பனைக் கொடி, கலப்பைக் கொடி, யானைக் கொடி என்று பல கொடிகள் உனக்கு, ஆயினும் கருடச் சேவல் கொடியே சிறப்பு!

நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று;
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;
அவன் மடிமேல் வலந்தது பாம்பு;
பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; 45
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;

அந்தக் கருடக் கொடியில் அரவமும் உண்டு! கருடனும் பாம்பும் பகையே என்றாலும், கருடனின் இடையில் பாம்பு! தலையணி, தொடி, பூண் என்று அவனை அலங்கரிப்பதும் அரவமே!
இப்படி வேறு வேறான இரண்டும் உன்னிடம் ஒன்றுகின்றன!

கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50
உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்‘ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;

நீ, உனக்கென்று ஒரு குணம் இல்லை! உன்னை எப்படிப் பார்க்கின்றார்களோ, அப்படியே நீ தெரிகிறாய்! (கண்ணாடி போல)
வெம்மைக்கு வெம்மையாய், தண்மைக்கு தண்மையாய்!
போற்றினாலும், போற்றா விட்டாலும், இருவர் உயிரிலும் மறைந்துறைவது நீ தான்! உனக்கென்று உறவும் இல்லை! பகையும் இல்லை! அவரவர் நினைப்பே வடிவாய் உடையாய்! உனக்கென்று என ஓர் வடிவும் இலையே!

கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,

நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60

அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள; அவை
நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65

உன்னை விட உன் திருவடிகள் சிறந்தவை!
உன்னை விட ஒரு கடவுளைக் காட்ட வேண்டுமென்றால், அது உன் திருவடிகளே!

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70

ஆலமர் செல்வனும் நீ, கடம்பணி மைந்தனும் நீ!
பல பெயர் கொண்டு விளங்குகிறாய்!

தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73

உன் அன்பர்களின் ஏவலாளனும் நீயே! காவலாளனும் நீயே!
அவர்கள் தொழுத கையில் உள்ள அமைதியில் உள்ளவனே! நீ வாழ்க!!


பரிபாடல் 13: திருமாலிடம் அன்பு செய்வார் பெறும் பேறு!

பாடியவர்: நல்லெழுதியார்
இசையமைத்தவர்: பெயர் அறியப்படவில்லை
பண்: நோதிறம்

மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத் 5

ஞாயிறு போல் உடை, பூ முடி, அருவி போல் தொங்கும் மாலை, புள் கொடி

தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாந்--
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண், 10

சங்கு சக்கரங்கள் (வளை-நேமி)

அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்
திரு வரை அகலம் --தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து.

திருமார்பு, அதோடு உன்னைத் தொழுவார்க்கு, வீடுபேறு என்பது வேண்டுதல் அல்ல! உரிமையாகவே ஆகி விடும்!

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்! 15
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே; 20

நான்கின் உணரும் நீரும் நீயே;
அதனால், நின் மருங்கின்று--மூ-ஏழ் உலகமும்,

ஐம்புலன்கள் - அதை உணர்த்த வல்ல ஐம்பொறிகள் - அது தோன்றும் ஐம்பூதங்கள் என்று எல்லாமும் நீயே! உன் முதற்றே உலகு!

மூலமும், அறனும், முதன்மையின் இகந்த
காலமும், விசும்பும், காற்றொடு கனலும் 25

தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்
துளவம் சூடிய அறிதுயிலோனும்--
மறம் மிகு மலி ஒலி மாறு அடி தானையால், 30

திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்--
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி 35

இலங்கு ஒளி மருப்பின் களிறும் -- ஆகி,
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!

துளவம் சூடிய அறி துயில், பகைவர் மனதையும் உழ வல்ல கலப்பை, நிலத்தை நீரில் இருந்து மீட்டமை, முத்தொழில் செய்யும் அயன்-அரன்-அரியும் நீயே!

படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;
ஏவல் இன் முது மொழி கூறும், 40

சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
வலம்புரி, வாய்பொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,
அவை நான்கும் உறழும்--அருள், செறல், வயின் மொழி; 45

முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும், அவை மூன்றும்
கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;
இருமை வினையும் இல, ஏத்துமவை;
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை-- 50

முக்காலமும் கடந்த உன் திருவடிகள்!
அதைப் பிடித்தார்க்கு ஒரு வினையும் இல!

அடியும், கையும், கண்ணும், வாயும்;
தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,
தாளும், தோளும், எருத்தொடு, பெரியை;
மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை;
கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை; 55

வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை;
அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,
செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப்
புரி மலர்த் துழா அய் மேவல் மார்பினோய்!-- 60

அன்னை எனநினைஇ, நின் அடி தொழுதனெம்;
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்--
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்;
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே! 64

பிறவிப் பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம்!
உன்னை இறைஞ்சி உனக்கென்று இருப்பதே எங்களுக்குக் காமம்!
திகிரிச் செல்வா! இன்னும் இன்னும் எம் காமம் இதுவே!

(அப்படியே மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் என்னும் திருப்பாவை போலவே இருக்கு-ல்ல? கோதை, சங்கத் தமிழை எல்லாம் படித்துத் தான், அப்படி உருகி உருகிக் காதலித்து இருப்பாளோ? சங்கத் தமிழ்ப் பாணியிலேயே, தன் பின்னாளைய கவிதையை அமைக்கின்றாளோ? சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே என்று சொன்னது, இதனால் தானோ?)



பரிபாடல் 15: மதுரை - திருமாலிருஞ்சோலை (அழகர் கோயிலின் சிறப்பு)

பாடியவர்: இளம்பெருவழுதியார்
இசையமைத்தவர்: மருத்துவன் நல்லச்சுதனார்
பண்: நோதிறம்

புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,
நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்
தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்
பல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும், 5

நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும் குன்று--அவை சிலவே:
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே: குல வரை சிலவினும் 10

சிறந்தது--கல் அறை கடாம் கானலும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.

புலவர்கள் பல மலைகளை ஆய்ந்து சொல்லி இருக்கிறார்கள்! ஆனால் பசியாற்றும் பசுமலைகள் வெகு சிலவே! அதிலும் தெய்வம் உறை மலைகள் வெகு வெகு சிலவே! அதிலும் மாயோனாகிய பெருமாளையும், வாலியானோகிய நம்பி மூத்த பிரானையும் ஒரு சேரத் தாங்கும் மலை = திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலை!

நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை 15
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.

பலர் பலதையும் அருள இயலும்! ஆனால் வீடுபேறு?
நாற்றத் துழாய் முடி திருமால்! அவனே நல்க முடியும்!
அவன் நல்காது, வீடு பேறு ஏறுதல் எளிதோ?
அரிதாகப் பெறும் வீடுபேற்றினை, எளிதாகப் பெறச் செய்வது மாலிருங்குன்றம்!

அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி, 20
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையடு தொடர் மொழி மாலிருங்குன்றம்--
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்--

அம்மலையில் சிலம்பாறு பாய்கிறது!
இது வாலியோன் மார்பில் உள்ள வெண்கடம்ப மாலை போல் மெல்லிதாய் ஓடுகிறது!
சோலையொடு திகழும் மாலிருங்குன்றம்!

நாமத் தன்மை நன்கனம் படி எழ, 25
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து,
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென,
பொன் புனை உடுக்கையோன் புணஎந்து அமர் நிலையே
நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!

சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ் 30
சினையெலாம் செயலை மலர, காய் கனி
உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,
மாயோன் ஒத்த இன் நிலைத்தே.

இம்மலை மாயோனின் திருவுருவமே ஒத்ததாகும்!
சுனைகளில் நீலமலர், வேங்கை மலர் என இரண்டுமே திகழும்! தலைவியும் தலைவனும் காமம் விதைத்து விளைக்கும் யாமம் உடைய மலை! இருளும் இளவெயிலும் ஒருங்கே திகழும் மலை! அதன் சீர் கேளுங்கள்! நினையுங்கள்!

சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே--
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே 35
பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது
கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள்.

சென்று தொழ முடியவில்லையா? இங்கிருந்தே கண்டு கொண்டாவது பணியுங்கள்!
ஏனென்றால் அது தொல் புகழ் உடைய கடவுள் மலை! காம மயக்கம் நீக்கும் காமக் கடவுள் மலை! (மற்றை நம் காமங்கள் மாற்றி, மயர்வில்லாக் காமங்கள் ஏற்றும் காமக் கடவுள்-விரும்பும் கடவுள்-மாயோன்)

மக முயங்கு மந்தி வரைவரை பாய,
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட,
மணி மருள் நல் நீர்ச் சினை மடமயில் அகவ, 40
குருகு இலை உதிர, குயிலினம் கூவ,

அந்த மலையில் குட்டிக் குரங்கு பெண் குரங்கை மடியைக் கட்டிக் கொள்ள, அப்படியே மலையில் தாவும்!
மருளும் மயில்கள் - நல்நீர்ச் சினை மயில்கள் அகவ, குருக்கத்தி இலைகள் உதிர, குயில்கள் கூவி மகிழும்!

பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன,
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது--ஒன்னார்க்
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று. 45

குழலோசை தவழ, பாண்டில் இயம்ப, நா நவிலும் பாடல்கள் பாட, முழவு மத்தளம் கொட்ட, சிலம்பு இசை ஒலிக்க....இத்தனை ஒலிகளின் எதிரொலியால்...ஒலி என்றுமே நீங்காத குன்று!

குன்றத்தானைச் சுற்றம் புடை சூழப் போற்றுமின்
தையலவரொடும், தந்தாரவரொடும்,
கைம் மகவோடும், காதலவரொடும்,
தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்--
புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன், 50

அந்தக் குன்றத்தானை = மாலிருஞ் சோலை நம்பியை = அழகனைப் போற்றுங்கள்!
பெண்களோடும், குரவர்களோடும், கைக் குழந்தைகளோடும், காதலர்களோடும்...இப்படி அனைவருமே கண்ணன் எனும் கருந் தெய்வம் பேணுகின்றனர்!

எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்
அன்பு-அது மேஎய் இருங்குன்றத்தான்.

துன்பம் களைவான்-அன்பே உருவாய் நின்றான்! மாலிருங் குன்றத்தான்!

கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;
ஒள் ஒளியவை, ஒரு குழையவை; 55
புள் அணி பொலங் கொடியவை;
வள் அணி வளை நாஞ்சிலவை,
சலம் புரி தண்டு ஏந்தினவை;
வலம்புரி வய நேமியவை;
வரி சிலை வய அம்பினவை; 60
புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை;
என ஆங்கு-

பசும் துளவம், ஒளிரும் மேனி, ஒற்றைக் குழை, கருடக் கொடி, கலப்பை உடையவன்!
அங்கையில் ஐந்து ஆயுதம் ஏந்தி உள்ளான்! - சங்கு, நேமி, தண்டு, வில், வாள்

நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
இது என உரைத்த[லி]ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை,
‘இருங்குன்றத்து அடி உறை இயைக!‘ என,
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே. 66

நலம்பல நல்கும் வாய்மொழி வாழ்த்தை - என்னுள்ளே தானிருந்து தானே தன்னை இசைத்துக் கொண்டான்!
இவனுடைய திருமால் இருங் குன்றத்தின் அடிவாரத்தில், எப்போதும் இயைந்து வாழும் வாழ்வை அருள வேணுமாய்...
நம்பி மூத்த பிரானையும், நம்பியையும் ஒரு சேரப் பராவித் தொழுகின்றேன்!

சதிரள மடவார் தாழ்ச்சியை மதியா(து)
அதிர்குரல் சங்கத்து அழகர்தம் கோயில்
மதிதவழ் குடுமி மாலிருஞ் சோலை
பதியது ஏத்தி எழுவது பயனே
(பின்னாளைய திருவாய்மொழியில், இதே போல் மாலிருங் குன்றத்தை வரைந்து காட்டுகிறார்! மதி தவழும் மலை முகடு! அதை ஏத்தி எழுவது கடனே என்று பாசுரம்)

பரிபாடலில் திருமால் பாடல்கள் இத்துடன் நிறைந்தன!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

1 comment:

  1. திருவிருந்தையூர் கூடல் அழகர் கோவில் தான்; இந்தப் பரிபாடலில் வரும் ஆறு கூடல் அழகர் கோவிலின் வலப்புறத்தில் ஓடிக் கொண்டிருந்த (இப்போது சாக்கடையாக ஓடிக் கொண்டிருக்கின்ற) கிருதமாலை ஆறு தான் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பாடல் அருவியைப் பற்றியும் கூறுகிறது என்று நினைக்கிறேன். கூடல் அழகர் கோவிலின் பக்கத்தில் குன்றும் இல்லை அருவியும் இல்லை. அதனால் திருவிருந்தையூர் எந்த கோவில் என்று தெரியவில்லை.

    அடுத்து பரிபாடலின் பொருள் எழுதலாமா என்று நினைக்கிறேன். ஆனால் தொடங்கினால் அதுவும் நாலாயிரம் போல் நீளுமோ என்று தயக்கமாக இருக்கிறது.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP