Tuesday, August 31, 2010

புறநானூற்றில் தமிழ்க் கடவுள்!

புறநானூறு:

புலியை முறத்தால் அடித்து விரட்டிய புறநானூற்றுத் தாய்-ன்னு சினிமா வசனத்தில் கேட்டிருப்பீங்க அல்லவா? புறநானூறு என்றால் என்ன?

சங்கத் தமிழர்களின் அக வாழ்க்கையை (Family) அக-நானூறும், புற வாழ்க்கையை (Social) புற-நானூறும் காட்டுகின்றன!
புறப் பொருள் பாடல்களாக நானூறு பாட்டுக்களின் தொகுப்பு = புற-நானூறு!
150-க்கும் மேற்பட்ட புலவர்கள் பல்வேறு காலங்களில் (சங்க காலங்களில்) பாடியது!

தமிழ்நாட்டு எல்லை, அரசர்கள், படை, மக்கள், ஆயுதம், உடை, உணவு, சமூக வாழ்க்கை, போர், கையறுநிலை, நடுகல், பெண்கள் தீப்பாய்தல்...
என்று சமூகத்தின் ஏற்றம்-இறக்கம் என்று அத்தனையும் ஒளிக்காது காட்டுவது புறநானூறு!

வானியல் நிகழ்வுகள், முருகன் கோட்டம், திருமால் கோயில், வான் ஊர்தி, ஊன் சோறு, வண்டிகளுக்கு சேம அச்சு (ஸ்டெப்னி) என்று மக்கள் வாழ்வில் ஒரு தனி ரவுண்டே வரலாம்!

குமணன், பெருஞ்சித்திரன், மாசாத்தன், இளவெழினி என்று பல கவிஞர்களின் பெயரைப் படிக்கும் போதே, பண்டைத் தமிழின் இனிமை விளங்கும்!

மன்னர்களும் சிறந்த கவிஞர்களாய் இருந்திருப்பதைக் காணலாம்!
பாண்டியன் நெடுஞ்செழியன், சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் நல்லுருத்திரன் போன்றவர்கள் = கவிஞர்+மன்னர்!

மூவேந்தர்கள் மட்டுமில்லாது குறுநில மன்னர்களும் அதே மதிப்புடன் பேசப்படுகிறார்கள்! முல்லைக்குத் தேர் தந்த பாரி, மயிலுக்குப் போர்வை ஈந்த பேகன் கதையெல்லாம் இங்கு தான்!

மன்னர்களின் பட்டப் பெயர்களை வைத்து தனி ஆய்வே நடத்தலாம்!
கரிகாற் பெரு வளத்தான், பஃறேர் இளஞ்சேட் சென்னி, ஒள்வாள் கோப்பெருஞ் சேரல், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று பல்திறம் வாய்ந்த தமிழ் மன்னர்கள், தமிழுலா வரும் தலையாய நூல், புற-நானூறு!

அதில், பண்டைத் தமிழ்த் தெய்வமான மாயோன் என்னும் திருமாலின் குறிப்புகள் இதோ....


புறநானூறு: 57 - காவன்மரமும் கட்டுத்தறியும்!

(வல்லார் - அல்லார் என்று யாதொரு பேதமின்றி, உயர்திணை/அஃறிணை அனைவருக்கும் பொதுவான மாயோன் என்று பாடுகிறார்)



பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: வஞ்சி.
துறை: துணை வஞ்சி.

வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!

(பாண்டியன் நன்மாறனை, மாயோன் போன்றவன் என்று வியந்து பாடுகிறார். வல்லமை கொண்டார்/வல்லமை இல்லாதார் என்று பேதம் பார்க்காமல் அருளும் மாயோன் போல்...புகழ் சால் பாண்டியா நன்மாறா என்று வியத்தல்!)

நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின்,
நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு
இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க:
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;

மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு! நின்
நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே.



புறநானூறு: 58 - புலியும் கயலும்!

(இருவேந்தரும் ஒருங்கே இருப்பது.....மாயோனும் வாலியோனும் ஒருங்கே இருப்பது போல் உள்ளது என்று பாடியது!)



பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும்
பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும்.

திணை: பாடாண்.
துறை : உடனிலை.

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது.
நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ,
.....
.....

வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்,
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே;
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின், நேமியோனும், என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு,


உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இந்நீர் ஆகலின், இனியவும் உளவோ?
....
....

காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி; வென்று வென்று
அடுகளத்து உயர்க நும் வேலே; கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே.


புறநானூறு: 291 - மாலை மலைந்தனனே!

(போர் வீரர்கள் மாயோனைப் போல் கருப்பாக, வெள்ளாடை உடுத்தி, வீரத்துடன் சென்றமை பற்றிப் பாடியது)


பாடியவர்: நெடுங்களத்துப் பரணர்
திணை: கரந்தை
துறை: வேத்தியல்


சிறாஅர் ! துடியர்! பாடுவல் மகாஅர்;
தூவெள் அறுவை மாயோற் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்,


(போருக்குச் செல்வோர், தூய வெள்ளை ஆடைகளை அணிந்து, கருத்துப் போய் இருக்கும் மாயோன் போல் இருந்தார்கள் , அவர்கள் பருந்துப் பறவைகள் எழுப்பும் ஒலிக் குறிப்பை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதைக் காட்டுகிறார்! மாயோன் = கரியவன், தமிழ் மண்ணின் மைந்தன் என்று தெரிகிறது அல்லவா?)

விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்;
என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே_
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை!
மணிமருள் மாலை சூட்டி, அவன் தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே!



(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

3 comments:

  1. நன்கு ஆழ்ந்து படித்தேன்;
    பாராட்டுக்கள்


    தேவ்

    ReplyDelete
  2. மாயோன் என்று வரும் வரிகளுக்கு மட்டுமே விளக்கம் உள்ளதால் என்னால் இன்னும் ஆழ்ந்து படிக்க இயலவில்லை. உரைகளின் உதவியுடன் மற்ற வரிகளுக்கும் பொருள் தெரிந்துக் கொள்கிறேன். :-)

    பனைக்கொடியோனும் நேமியோனும் இருபெருந்தெய்வம் என்று சொல்லப்பட்டுள்ளது மட்டும் இப்போது மனத்தில் நிற்கிறது. இருபெருந்தெய்வங்களில் ஒருவன் மட்டும் இன்றும் வணங்கப்பட இன்னொருவன் தமிழகத்தில் வணங்கப்படாமல் ஆனது ஏன் என்ற கேள்வியும் வலுப்படுகிறது. :-)

    ReplyDelete
  3. புலியை முறத்தால் அடித்த பெண் பற்றிய பாடல் உள்ளதா?

    இல்லை வழக்கம் போல உங்கள் வாய்மொழியில் கூறுவது போல "கப்சா"வா?

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP