முனியே! நான்முகனே!! முக்கண்ணப்பா!!! - 5
எம்பெருமான் எக்கி எக்கிப் பார்க்கிறான்! சரியாகத் தெரியவில்லை!
இன்னும் உயரத் தூக்குங்கள் என்கிறான்! தூக்குகிறார்கள்! ஆகா...மோகினியின் அழகில் மயங்கி விழுகிறான்!
என்னது இது அதிசயம்! அவன் தானே மோகினி வேடத்தில் சிவ பெருமானையே சிந்தை கலங்கச் செய்தவன்!
அவனே மயங்குகிறானா? ஆனானப்பட்ட மாயவனையே மயக்கும் மோகினி யாரப்பா? அவள் தான் பராங்குச நாயகி!
யார் அது? கேள்விப்பட்டதே இல்லையே! அவள் எந்த ஊர் நாயகி?
அட நம்ம நம்மாழ்வார் தான்! ஏழாம் நாள், மோகினித் திருக்கோலத்தில் உலா வருகிறார்!
ஒரு காலத்தில் பெருமாளிடம் மனத்தைப் பறிகொடுத்து, ஒரு காதலியாய் உருகி உருகிப் பொழிந்தார் பாசுரங்களை!
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே, தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே என்று மயங்கிக் கிடந்தார்!
| கைத்தல சேவை |
ஆழ்வார் என்னும் நாயகியை, அரங்கன் எம்பி எம்பிப் பார்க்கிறான்!
அவனை வாகனத்தில் வைத்தோ, தோள் மேலே வைத்தோ தூக்கவில்லை இன்று! பின்னே வேறு எப்படித் தூக்கி வருகிறார்கள்?
அர்ச்சகர்கள் தங்கள் கைகளில் தாங்கித் தாங்கித் தூக்கி வருகிறார்கள்!
கைத்தல சேவை என்று பெயர்!
கைகளால் உயர உயரத் தூக்கி, அவனுக்கு நம்மாழ்வரின் அழகுத் திருக்கோலத்தைக் காண்பிக்கிறார்கள்!
ஒரு அடியவருக்கு இதை விட வேறு என்ன பெருமை இருக்க முடியும் சொல்லுங்கள்!
அருமா மாயத்து எனது உயிரே, மனமே, வாக்கே, கருமமே!
ஒருமா நொடியும் பிரியான் என்ஊழி முதல்வன் ஒருவனே!
எட்டாம் நாள் திருமங்கை மன்னனின் வேடுபறியை விழாவாக நடித்துக் காட்டுகிறார்கள்! தங்கக்குதிரை வாகனம்! அது ஒரு சுவையான நாடகம் அல்லவா?
கால்மெட்டியை மட்டும் திருடமுடியாது போய், இறுதியில் காலமெல்லாம் நாராயணா என்று ஆன கதை ஆயிற்றே! பெருமாள் திருமங்கை மன்னனைக் கள்வர் தொழிலில் இருந்து மீட்டு, ஆட்கொண்டதை இந்தப் பதிவில் காணலாம்!
முன்பு ஒரு நாள், சங்கீத மகாகுரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீரங்கம் வந்தபோது இதே உற்சவம்;
அவர் தெற்கு வீதியில் நின்று கொண்டிருந்தார். அரங்கன் தங்கக்குதிரை வாகனத்தில் பவனி வருகிறான்.
மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்த அழகைப் பக்கத்தில் சென்று தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கப்பட்டார்.
அவர் என்ன பெரிய செல்வந்தரா இல்லை உபயதாரரா, அருகில் செல்ல?
இல்லையே! தனக்கு மாலை மரியாதை எல்லாம் ஒழுங்காகச் செய்யவில்லை என்று கோபித்துக் கொள்ளும் தலைவரும் கிடையாது! பரம சாது!
குதிரை வாகனம் வேறு வீதிக்குத் திரும்பி ஆனால் சற்று நேரத்தில் நின்று விட்டது. வாகனத்தைச் சுமப்போர் எவ்வளவோ முயன்றும் ஹூஹூம்.
அர்ச்சகரின் மேல் ஆவேசம் வந்து, ‘‘தெற்கு வீதியில் என் உள்ளார்ந்த பக்தன் ஒருவன், தரிசனம் செய்ய முடியாமல் துடிக்கிறானே! அவனை அழைத்து வாருங்கள்!’’ என்று உத்தரவிட்டார்.
உடனே கோஷ்டியில் உள்ளவர்கள் தியாகராஜரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரை சுவாமிக்கு அருகில் அழைத்து வந்தார்கள்.
இதே குதிரை வாகன அரங்கனை, "ராஜ வீதுல ஜூட முராரே, வைபோக ரங்கா" என்று தோடி ராகத்தில் பாடிப் பரவசப்பட்டார்;
பின்னர் "ஓ ரங்க சாயீ" முதலான ஸ்ரீரங்க பஞ்சரத்னக் கீர்த்தனைகளைத் தனியாகப் பாடி அருளினார்!
பத்து நாட்கள் ராப்பத்து விழா முடிந்து, இறுதி நாளில் நம்மாழ்வார் மோட்சம்!
இது தான் விழாவின் மிக முக்கியமான கட்டம்;
பல அன்பர்கள் கண்ணிலும் நீர் வரவழைத்து விடும்!
முன்பே சொன்னது போல் நம்மாழ்வாருக்காக வாசல் திறக்கப்படும் வைபவம் தான் சொர்க்க வாசல்.
அதில் பெருமாள், தானே ஒரு சாதகனாய் நுழைகிறான்! ஒரு சாதகன் (முமுட்சு) எப்படி அனைத்து நிலைகளையும் கடந்து, பரமபதத்தில் எப்படி எல்லாம் வரவேற்கப்பட்டு, தன்னிடம் வந்து சேர்கிறான் என்பதைத் தானே நடித்துக் காட்டுகிறான்!
சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின என்ற பாசுரம் முழங்குகிறார்கள்.
நம்மாழ்வார் திருவுருவச் சிலை சகல மரியாதைகளுடன் கொண்டு வரப்பட்டு நம்பெருமாள் முன் வைக்கப்படுகிறது.
நம்மாழ்வார்
அலங்காரங்கள் எதுவுமே இல்லை! வெறும் வெள்ளை உடையும் துளசி மாலை மட்டுமே! பன்னிரெண்டு திருமண் காப்பு திருமேனியில்!வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்று பாடுகிறார்கள்! பாடிக் கொண்டே, துளசி தளங்களால் அர்ச்சனை!
நம்மாழ்வார் திருவுருவச் சிலையை, அவர் தலை அப்படியே அரங்கன் திருவடிகளில் படுமாறு கிடத்துகிறார்கள்! தலையாலே கீழே விழுந்து வணங்கிப், பற்றற்றான் பற்றினைப் பற்றுகிறார்!
தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து, நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே!
என்று அன்று பாடினார் அல்லவா? அது அப்படியே இன்று நம் கண்முன்னால் நடக்கிறது!
நம்மாழ்வார் மோட்சம்
துளசி அர்ச்சனை இடையறாது நடந்து கொண்டே இருக்க, அச்சோ!...சிறிது நேரத்தில் நம்மாழ்வாரைக் காணவில்லை!ஆம்! துளசியால் முழுதும் மூடப்பட்டு விடுகிறார்!!
சற்று முன்னர் வரை நம் கண் முன்னே, திருவாய்மொழி பாடிக் கொண்டே வந்தவர், இப்போது காணவில்லையே!
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனிநான் போகல்ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே
பாசுர முழக்கம் நிறைவு பெற்றது!
எங்கும் ஒரே நிசப்தம்! துளி சத்தம் கிடையாது!
எல்லார் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர்!
மணியோசை எதுவுமில்லை!
எம்பெருமானுக்கு மகா தீப மங்கள கற்பூர ஆரத்தி!
பாதகங்கள் தீர்க்கும்! பரமன் அடி காட்டும்!
இது நம்மாழ்வார் மோட்சம்! வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!!
இத்துடன் திருவரங்கத்து வைகுந்த ஏகாதசித் தொடர் பதிவு நிறைந்தது!
ஆர்வமுடன் வாசித்தளித்த அன்பர்கள், அடியார்கள் அனைவருக்கும் நன்றி!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!
ஆழ்வார் திருவடிகளே சரணம்!
எம்பெருமானார் திருவடிகளே சரணம் சரணம்!!

அம்புயத்தான் அயோத்திமன்னர்க்கு அளித்தகோயில்
தோலாத தனிவீரன் தொழுதகோயில்
துணையான வீடணார்க்குத்துணை ஆனகோயில்
சேராத பயன்எல்லாம் சேர்க்கும்கோயில்
செழுமறையின் முதல்எழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினை அனைத்தும் தீர்க்கும்கோயில்
திருஅரங்கம் எனத்திகழும் கோயில்தாமே!















































