Sunday, December 21, 2008

மார்கழி-07: ஆனைச் சாத்தானா? ஃபேஷன் ஜூவெல்லரியா?

மற்ற பாவைகளில் இருந்து ஆண்டாளின் பாவை மட்டும் தனித்து நிற்க காரணம் என்ன? ஹா ஹா ஹா! ஆன்மீகத்தை ஆன்மீகமாப் பேசாதது தான் காரணம்! :)
மற்ற பாவைகளில் இருந்து ஆண்டாளின் பாவை சற்றே மாறுபட்ட ஒன்று! அவள் பாவை-யும் மாறுபட்டது! பார்-வையும் மாறுபட்டது! அது ஆன்மீகப் பாவை மட்டும் அல்ல! வாழ்க்கைப் பாவை!

சும்மா சாமி கும்பிட மட்டுமே சொல்லித் தர மாட்டாள் கோதை! காதல், இயற்கை, பறவை/விலங்கு, வானியல், மனித வளம், அறிவியல், லோக்கல் பேச்சு, ஃபேஷன் ஜூவெல்லரி-ன்னு கண்டதையும் "ரசிக்க" சொல்லித் தருவாள்! வாழ்க்கையை ரசிக்கச் சொல்லித் தருவாள் = அதுவே திருப்பாவையின் சிறப்பம்சம்! :)

புதிர்-07:
ஆனைச்சாத்தன் பறவை என்றால் என்ன?


போன பதிவிலேயே சொல்லி இருக்கணும்! மறந்துட்டேன்! அடுத்த பத்து பாட்டிலும், பத்து வீட்டுக் கதவைத் தட்டுறா ஆண்டாள்! எதுக்கு?
நாம எல்லாரும், வீட்டுக்கு அருகில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் ஆடணும்-ன்னு முடிவெடுத்தாச்சி! ஆனால் அஞ்சு பேர் தான் இருக்காங்க! ஆள் தேத்தணும்! என்னா பண்ணுவோம்? நண்பனுக்கெல்லாம் ஃபோனைப் போடு!

நீங்கள் தொடர்பு கொள்ளும் ஏர்டெல் வாடிக்கையாளர் தற்சமயம் பிசியாக உள்ளார்! = ஆமா, எவ கூட-ன்னா ஃபோன்ல ஜொள்ளு விட்டுக்கிட்டு, மொக்கைய போட்டுக்கிட்டு இருப்பானுவ!
தயவு செய்து சிறிது நேரத்துக்குப் பின் தொடர்பு கொள்ளவும்! = கிழிஞ்சுது.....
நேரா பக்கத்துத் தெரு நண்பனின் வீட்டுக்குப் போயி, டங் டங்-ன்னு கதவைத் தட்டி, "ஏய் ஒரு கை கொறையுது! வாடா மச்சி"-ன்னு உரிமையா கூப்புடுறோம்-ல? அதே தான் ஆண்டாளும் பண்ணுறா! :)

கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

கீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக், கை பேர்த்து,
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்,

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற ஏல்-ஓர் எம் பாவாய்!



கீசு கீசு என்று எங்கும் = கீச் கீச் எனக் கத்தும் பறவைகள்! இப்படி எல்லாம் லோக்கலா இது வரைக்கும் தமிழ்க் கவிஞர்கள் யாரும் எழுதலியே! இப்படி எழுதினா இலக்கணத்தில் பிழை இருக்கு-ன்னு புலவர்கள் வந்து சண்டை போடுவாங்களே என்று எல்லாம் கோதை அஞ்சினாளா? ஹிஹி! வெறுக்கத் தக்கதான தூய்மை வாதம்! :)
அப்படி யாராச்சும் அவ கிட்ட போயி வம்பு பண்ணினாங்களா-ன்னும் தெரியலை! பண்ணி அடி வாங்கினாங்களா-ன்னும் தெரியலை! கோதை மறத்தி! மதுரைச்சி! :)))

ஆனைச் சாத்தன் கலந்து = ஆனைச் சாத்தன் பறவை எது என்று பதிவுலகில் சுவையான சில இடுகைகள் உள்ளன! யாராச்சும் அதன் சுட்டிகளை இங்கு தொகுத்து தாங்களேன்!
பொதுவா ஆனைச்சாத்தன் = கருங் குருவி/தவிட்டுக் குருவி/வலியன் குருவி டைப்பில் ஒரு குட்டிப் பறவை! கிராமத்துல கரிச்சான் குஞ்சு-ன்னு நாங்க சொல்லுவோம்!

சிலர் செம்போத்து-ன்னும் சொல்வாங்க, ஆனா அது கருப்பா இருக்காது! கொஞ்சம் பெருசும் கூட! இதைப் பரத்வாஜ பட்சி என்றும் குறிப்பிடுவாய்ங்க!
திருவலிதாயம் என்ற சிவன் கோயில் சென்னை அம்பத்தூர் பக்கத்துல இருக்கு! அங்கே பரத்வாஜ முனிவர், இந்த பரத்வாஜ பட்சியாய் (வலியன் குருவியாய்) மாறி, ஈசனை வழிபட்டாராம்! வாலீஸ்வரர்-ன்னு தான் ஈசன் திருநாமம்!
கிராமத்தில் தான் கருங் குருவியைப் ரொம்ப பார்க்க முடியும்! அது கீச் கீச் என்று நடிகை சரோஜா தேவி போல் பேசுகிறது!:)

ஆனை+சாத்தல் = சாத்தல்-ன்னா அடித்தல்-ன்னும் பொருள், சாற்றுதல்-ன்னும் பொருள்!
குவலயா பீடம் என்ற கம்சனின் யானையைச் சாத்தினான்! கஜேந்திரன் என்னும் யானையைச் சாற்றினான் - என்று சும்மா சுவையாகச் சொல்லுவார்கள் ஆச்சார்யர்கள்! ஆனால் இங்கு ஆனைச் சாத்தன் என்பது பறவை தான்! யானை அல்ல!

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? = இந்தப் பறவைகள் பேசுதே! அது கூட காதில் விழாம அப்படி என்ன தூக்கம்?
பேய்ப் பெண்ணே! = பேய் புடிச்ச பொண்ணே! ஹிஹி! தோழியைப் பேயே-ன்னு கோதை திட்டுறாளா என்ன? இல்லையில்லை! பேய் ஆழ்வார்-ன்னு ஒருத்தர் இல்லையா? அது போலத் தான்! பேய்த்தனமா ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்தால் பேயன்/பேயள்!
இவ பேய்த்தனமா தூங்குறா! எழுந்து பெருமானிடத்தில் பேய்த்தனமா ஆழ்ந்து விடு! பேய்-ஆழ்வார் ஆகி விடு! அதான் கோதை சொல்றா!



காசும் பிறப்பும் = நாள், மலர், காசு, பிறப்பு-ன்னு வெண்பா இலக்கணம் இருக்குல்ல? அது என்னா காசு? பிறப்பு? ரெண்டும் ரெண்டு ஃபேஷன் ஜூவெல்லரி! :)
* காசு = கழுத்து மாலை, நாண் வழிக் காசு என்பார்கள்! காசு மாலை போல இருக்கும்! நான்கு வழிகளில் அதைக் கோர்த்துக் கொள்ளலாம்! அச்சுத் தாலி-ன்னும் ஊர்-ல சொல்லுவாங்க!
* பிறப்பு = ஒரு வகை சிறிய கழுத்து-அணிகலன். பொடிப்பொடியா விதைகள் போல கோர்த்து இருக்கும்! ஆனால் ஜல்-ஜல் தொங்கட்டான்கள் பொடிசு பொடிசா தொங்கும்! ஆமைத்தாலி-ன்னும் ஊர்ல சொல்லுவாங்க!

பெண்கள் எல்லாம் விடியற் காலையில் எழுந்து தயிர் கடைகிறார்கள்! அப்படின்னா அதுக்கு முன்னரே எழுந்து யாரோ பால் கறந்து இருக்கணும் இல்லியா?
அப்படியே ஆயர்ப்பாடியை பிசி ஸ்ரீராம் கணக்கா, வீடியோ எடுத்துக் காண்பிக்கிறாள் கோதை! ஆயர்ப்பாடியில் அத்தனை பெண்களும் செம க்யூட்டா வெண்ணெய்/நெய் போலவே கொழுக்-மொழுக்-ன்னு இருக்காங்கப்பா! என்ன, கிட்டக்க போனாத் தான் ஒரே பால் வாடை வீசுது :)

கலகலப்பக், கை பேர்த்து = கழுத்து மாலையும், கை வளையும் கல-கல-ன்னு ஓசை எழுப்ப, ஒரு கை அப்படியும், இன்னொரு கை இப்படியும் என மாறி மாறி வாங்கி!
பேர்த்து = மீண்டும் மீண்டும், மாறி மாறி! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே என்பதை ஒப்பு நோக்குங்கள்!

வாச நறும் குழல் ஆய்ச்சியர் = அவங்க கூந்தல்ல நல்லா பால் மணம் வீசுது! தயிர் கடையும் போது தலையைச் சொறிஞ்சிப்பாங்க போல! Dairy Smell! :)
கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கும்! மாட்டுக் கொட்டாய் பக்கம் போயிருக்கீங்களா? ஹிஹி! ஒரு விதமான முடை நாற்றம்!
கண்ணன் மேலயும் இது வீசும் போல! கோதை அவனை அடிக்கடி கிண்டல் பண்ணுவா! தான் சூடிக் கொடுத்த மலர் மாலைகளால் தான் ஓரளவு அவன் வீச்சம் குறையுது-ன்னு! :)

மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ = மத்துல தயிர் கடையும் சத்தம் கேட்கலையோ? கர்-டர்-ன்னு வரும் சத்தம் கேட்டுமா உனக்குத் தூக்கம்?


நாயகப் பெண் பிள்ளாய் = யம்மாடி, நீ பெரிய வீட்டுப் (நாயகத்தின்) பொண்ணா இருக்கலாம்!
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? = அதுக்காக சாமீ பேரைக் கூவிக் கூவிப் பாடுன பொறவும், கேட்டுக்கிட்டே கட்டில்ல தூங்கறீன்னா, உனக்கு எம்புட்டு மெதப்பு?

நாராயணன்-மூர்த்தி-கேசவன் என்கிற திருநாமங்கள் பாட்டில் அடுக்கப்படுகின்றன!
நாராயணன் = திருவெட்டெழுத்து, அஷ்டாட்சர மகா மந்திரம்!
மூர்த்தி = இல்லத் தலைவன்! ஆலயத் தலைவன்!
கேசவன் = கேசி என்னும் அரக்கனைக் கொன்றவன்! அழகிய கேசத்தையும் உடையவன்!

தேசம் உடையாய் = ஒளி பொருந்தியவளே! தேஜஸ்வனீ!
திறவேல் = திறக்காதே-ன்னு அர்த்தம் எடுத்துக்காதே!
திற, ஏல்-ஓர் எம் பாவாய்! = கதவைத் திற! நாரணனை ஏல் (ஏற்றுக் கொள்)! நாரணனை ஓர் (ஆய்ந்து அறிந்து கொள்)! எம் பாவாய்!

60 comments:

  1. நேற்று போட‌ வேண்டிய‌ ப‌திவு இன்று வ‌ந்திருக்கின்ற‌து இனி எல்லாம் இப்ப‌டி ஒரு நாள் பிந்தி தான் வ‌ரும் என்று நினைத்தேன். ஆனா...

    இர‌ண்டு ப‌திவை ஒரு நாள் போட்ட‌த‌ல் ப‌திவின் நீள‌ம் ச‌ற்று குறைந்துவிட்டதோஓஓ?

    //கண்டதையும் "ரசிக்க" சொல்லித் தருவாள்! வாழ்க்கையை ரசிக்கச் சொல்லித் தருவாள்//

    காத‌ல் செய்யும் போது க‌ண்ட‌தெல்லாமே அழ‌காய் தானே தெரியும்? அதுவும் கோதைக்கு ம‌னித‌ர் உண‌ர்ந்து கொள்ள‌ முடியாத‌ புனித‌ காத‌ல். பின் கேட்க‌வா வேண்டும்.

    ஆனைச்சாத்தன் பறவை ப‌ற‌வைக்கு த‌ந்த‌ விள‌க்க‌ங்க‌ள் அருமை.

    //கீசு கீசு என்று எங்கும்//

    நான் எதோ இந்த‌ குமுத‌ம் குங்கும‌தில் வ‌ருமில்ல‌ அதுன்னு நினைச்சேன் :)

    Dairy Smell! :))

    ReplyDelete
  2. ஆண்டு, (ஹி, ஹி, ஆண்டாளை செல்லமா கூப்புட்டேன்).. அலுவலகத்துக்கு போயிட்டு உன்கிட்ட பேசுறேன்.

    ReplyDelete
  3. Raghav said...
    ஆண்டு, (ஹி, ஹி, ஆண்டாளை செல்லமா கூப்புட்டேன்).. அலுவலகத்துக்கு போயிட்டு உன்கிட்ட பேசுறேன்.

    11:01 PM, December 21, 2008
    >>>>>>>>>>>>>>

    ராகு!! ஆண்டுவா !:) நான் செல்லமா ரங்கநாதரை ,ரங்ஸ் என்கிறமாதிரியா!! நன்னாருக்கே இது!


    ரவிசங்கு! இருங்கப்பாவரேன் வீட்ல காச்காச்னு குக்கர் சத்தம்போடறது சமையலைமுடிச்சிட்டு இங்கவந்து பின்னூட்டமிடறேன் :):)

    ReplyDelete
  4. //சும்மா சாமி கும்பிட மட்டுமே சொல்லித் தர மாட்டாள் கோதை! காதல், இயற்கை, பறவை/விலங்கு, வானியல், மனித வளம், அறிவியல், லோக்கல் பேச்சு, ஃபேஷன் ஜூவெல்லரி-ன்னு கண்டதையும் "ரசிக்க" சொல்லித் தருவாள்! வாழ்க்கையை ரசிக்கச் சொல்லித் தருவாள் = அதுவே திருப்பாவையின் சிறப்பம்சம்! :)//

    இரண்டு பாவைகளின் உள்ளர்த்தம் , தூங்கிக்கிடக்கின்ற ( ஜொள்ளு விட்டுக் கொண்டும், மொக்கை போட்டுக்கொண்டுன், வீணே பொழுது போக்கிக் கொண்டு இருப்பவரை) போதும் இனி மேலாவது பரமாத்மாவின் திருப்பாதம் பற்று, அவருடன் சேர்( நீராடல்) என்று அழைப்பன அல்லவா,

    அந்த திருப்பாவையை மிகவும் கொச்சப்படுத்துவது போல தோன்றுகின்றது??????

    ஏதோ மனதில் தோன்றியது எழுதிவிட்டேன்.

    ReplyDelete
  5. அப்படி என்ன தூக்கம்?
    பேய்ப் பெண்ணே! = பேய் புடிச்ச பொண்ணே! ஹிஹி! தோழியைப் பேயே-ன்னு கோதை திட்டுறாளா என்ன? இல்லையில்லை! பேய் ஆழ்வார்-ன்னு ஒருத்தர் இல்லையா? அது போலத் தான்! பேய்த்தனமா ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்தால் பேயன்/பேயள்!
    இவ பேய்த்தனமா தூங்குறா! எழுந்து பெருமானிடத்தில் பேய்த்தனமா ஆழ்ந்து விடு! பேய்-ஆழ்வார் ஆகி விடு! அதான் கோதை சொல்றா

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>மழை அதிகமா பெய்தால் பேய்மழைன்னு சொல்றோமே!

    ReplyDelete
  6. கோதை! ஆயர்ப்பாடியில் அத்தனை பெண்களும் செம க்யூட்டா வெண்ணெய்/நெய் போலவே கொழுக்-மொழுக்-ன்னு இருக்காங்கப்பா! என்ன, கிட்டக்க போனாத் தான் ஒரே பால் வாடை வீசுது :)>>>>>>>>>>>>>>

    பால் வண்ணம் பருவம் கண்டு.....:):)

    ReplyDelete
  7. வாச நறும் குழல் ஆய்ச்சியர் = அவங்க கூந்தல்ல நல்லா பால் மணம் வீசுது! தயிர் கடையும் போது தலையைச் சொறிஞ்சிப்பாங்க போல! Dairy Smell! :)
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>


    கூந்தல்ல பூ வச்சி அந்த நறுமணமாயிருக்கணும் எல்லாத்துக்கும் பால்மணம்னு சொல்லக்கூடாதுன்னு தோணுது..அதிகம் தமிழ்ப்பால் குடிச்சி
    அந்த நினைப்பால் சொல்லல! நறுங்குழல்னாலே மலர்கள்சூடியதின் விளைவாக வந்த‌ மணம் என்பதை நக்கீரர் மறுக்கவில்லை!

    ReplyDelete
  8. காசு = கழுத்து மாலை, நாண் வழிக் காசு என்பார்கள்! காசு மாலை போல இருக்கும்! நான்கு வழிகளில் அதைக் கோர்த்துக் கொள்ளலாம்! அச்சுத் தாலி-ன்னும் ஊர்-ல சொல்லுவாங்க!
    * பிறப்பு = ஒரு வகை சிறிய கழுத்து-அணிகலன். பொடிப்பொடியா விதைகள் போல கோர்த்து இருக்கும்! ஆனால் ஜல்-ஜல் தொங்கட்டான்கள் பொடிசு பொடிசா தொங்கும்! ஆமைத்தாலி-ன்னும் ஊர்ல சொல்லுவாங்க>>>>>>>>>>>>>>


    பிறப்பு என்பது குண்டு(நான் இல்ல):):)
    அதாவது காசுகள் நடுவே தங்கக்குண்டுகள் செய்துபோட்டு அணிவார்கள் என
    ஒரு ஆன்மீகபிரசங்கத்தில் கேட்ட நினைவு.

    ReplyDelete
  9. //Kailashi said...
    அந்த திருப்பாவையை மிகவும் கொச்சப்படுத்துவது போல தோன்றுகின்றது??????
    ஏதோ மனதில் தோன்றியது எழுதிவிட்டேன்//

    சேச்சே! இது போன்ற எண்ணங்களைத் தாராளாமாச் சுட்டிக் காட்டுங்க கைலாஷி ஐயா! தவறே கிடையாது! தென் மதுரை பற்றி ஜீவா, குமரன் என்று அவரவர் சுட்டிக்காட்டி இருக்காங்க பாருங்க! பயனுள்ள விவாதம் தானே இது!

    //இரண்டு பாவைகளின் உள்ளர்த்தம் , தூங்கிக்கிடக்கின்ற ( ஜொள்ளு விட்டுக் கொண்டும், மொக்கை போட்டுக்கொண்டுன், வீணே பொழுது போக்கிக் கொண்டு இருப்பவரை) போதும் இனி மேலாவது பரமாத்மாவின் திருப்பாதம் பற்று//

    நீங்கள் ஆன்மீகக் கண்ணோடத்தோடு மட்டும் பாக்கறீங்க! அதுனால அப்படித் தெரியுது!

    கோதை என்ன சொல்கிறாள்? வீணாக ஜொள்ளு விட்டுக் கொண்டிராமல், கண்ணனைப் பார்த்து ஜொள்ளு விடச் சொல்கிறாள் அல்லவா? கண்ணனின் எச்சிலையே பல இடங்களில் கேட்பாளே! அது கொச்சை ஆகுமா? :)

    நாம் தான் ஆன்மீகம் என்றாலே ஒரு இடைவெளி கொடுத்த, அவன் எங்கோ பரத்தில் இருக்கிறான்! அவனை அடையணும்-ன்னு பிரபலப்படுத்தி விட்டோம்! ஆனால் கோதைக்கோ பரவாசுதேவன் தேவையில்லை!

    அவன் எங்கோ இல்லை! அவளுடனேயே இருக்கான்! வாழ்ந்து கொண்டே அவனோடு ரசனையுடன் வாழலாம்! அந்தர்யாமி தான் கோதை உகந்தது!

    கோதை யோக நிலை, சமாதி நிலை, இறைவனுள் ஒன்றாய் கலத்தல் - இது பற்றி எல்லாம் அதிகம் பேசவில்லை! அவள் வாழ்க்கையை ரசித்துத் தான் வாழச் சொல்கிறாள்! இறைவனையும் ரசித்துத் தான் வணங்கச் சொல்கிறாள்! அதான் "ரசனை" என்று குறிப்பிட்டேன்!

    கோதை கேட்பது என்ன? மோட்சமா? இல்லையே! எற்றைக்கும், ஏழேழ் "பிறவிக்கும்"-ன்னு பிறந்து பிறந்து இருந்தாலும், அதில் எல்லாம் உனக்கு மட்டும் உற்றோமே ஆவோம்! மற்றைய விருப்பங்கள் வேணாம்-ன்னு தானே சொல்கிறாள்!

    வாழ்வின் பல பாடங்களையும், பரமன் பாடமாகவே காண்கிறாள்! அவள் ரசனை ரொம்ப விரிவானது! விரிந்து கண்ணனுள் அடங்குவது!
    எனவே அப்படிக் காட்டுவது கொச்சைப் படுத்துவதாகாது! கோதையின் இச்சைப் படுத்துவதாகவே ஆகும்! :)

    ReplyDelete
  10. ம்ம்ம்...தல உங்க உழைப்புக்கு ஒரு பெரிய வணக்கம் ;))))

    \\கோதை கேட்பது என்ன? மோட்சமா? இல்லையே! எற்றைக்கும், ஏழேழ் "பிறவிக்கும்"-ன்னு பிறந்து பிறந்து இருந்தாலும், அதில் எல்லாம் உனக்கு மட்டும் உற்றோமே ஆவோம்! மற்றைய விருப்பங்கள் வேணாம்-ன்னு தானே சொல்கிறாள்!
    \\

    தல...ஒரு கேள்வி.....ஏன் அவளுக்கு இப்படி ஒரு ஆசை!?? இதுல ஏதவாது ப்ளாஸ் பேக் இருக்கா!!???

    ReplyDelete
  11. இது குலசேகர ஆழ்வாரை போன்ற பெண்ணை எழுப்புதல் வகையான பாசுரம் , இதில் பேர்த்தல் அப்டிங்கிறது அவுங்கவூர் தயிரை உடைகிறதும் மலையை பேர்த்து எடுக்கிறதும் ஒண்ணாம் .

    Mani Pandi

    ReplyDelete
  12. இதற்க்கு முன் அமைந்த புல்லும் சிலம்பின காண பாசுரம் பெரியாழ்வார் போன்ற பெண்ணை எழுப்புவதாக அமைந்த பாசுரம்

    அதுல மெல்ல எழுந்து அப்படிங்கிறதுக்கு முனிவர்கள் யோகிகள் அவர்களுடைய நெஞ்சில் ஹரி இருக்கிறான்னு அவர்கள் வேகமாக எழும்போது ஏற்படும் அதிர்வினால் அவன் பாதிக்கப்பட குடாது நு பெரியவங்க மெதுவா ஹரி ஹரி சொல்லி எழுந்து கொள்கின்றனர் அப்படின்னு படிச்சிருக்கேன் சரிதானா

    ரவி

    Mani Pandi

    ReplyDelete
  13. இந்தப்பாடலில் காசும்பிறப்பும் கலகலப்பதாவது திருமந்திரமும் துவயமும் சப்திப்பது.

    இவைகளின் சப்தத்தைக்கேட்பவர்கள் உலகமாயவலையை அறுத்துக் கொள்கிறார்கள்.

    பாகவதர்களின் கோஷ்டியில் சேர்ந்து பகவத் அனுபவம் பெறுகிறார்கள்.
    அதனால் உண்டாகும் தேஜசில் பிற‌ரையும்நல் வழிக்கு இழுக்கிறார்கள்.

    ReplyDelete
  14. //திருமந்திரமும் துவயமும் //

    யக்கா, திருமந்திரம் சரி, துவயம்னா என்ன? விளக்குமாறு (இது அது இல்லை :) கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ஷைலஜா said...
    நறுங்குழல்னாலே மலர்கள்சூடியதின் விளைவாக வந்த‌ மணம் என்பதை நக்கீரர் மறுக்கவில்லை//

    ஹா ஹா ஹா!
    நக்கீரி அக்கா திருவரங்கப்ப்ரியா சொன்னதில் யாம் குற்றம் கண்டு பிடிக்கிறோம்! ஏன் தெரியுமா?

    அது மலர்கள் சூடியதால் வந்த மணம் அல்ல! இப்போ நோன்பு போயிக்கிட்டு இருக்கு! அதுக்கு என்ன கண்டிஷன்? மையிட்டு எழுதோம், "மலர் இட்டு நாம் முடியோம்"! ஸோ, நறுங் குழல் வாசம் மலர்களால் அல்ல! அப்போ எதனால்? Dairy Smell! :))

    வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம்! வாச/நறு-ன்னு ரெண்டு முறை சொல்லி கிண்டல் அடிக்கறா! புதுப் பொண்ணு, மாமியார் வீட்டில் சில பழைய பத்தாம்பசலித்தனங்களைக் கிண்டல் அடிக்கிறா மாதிரி :))

    மன்னா,
    எனக்கே ஆயிரம் பொற்காசுகளை..ச்சே மைசூர்பாக்களைத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்! :)

    ReplyDelete
  16. //மின்னல் said...
    நேற்று போட‌ வேண்டிய‌ ப‌திவு இன்று வ‌ந்திருக்கின்ற‌து இனி எல்லாம் இப்ப‌டி ஒரு நாள் பிந்தி தான் வ‌ரும் என்று நினைத்தேன். ஆனா...//

    ஹிஹி! வாங்க மின்னல்!
    ஒரு நாள் லேட் ஆனாலும், அடுத்த நாள் மின்னல் போல வந்துருவம்-ல? :)

    //இர‌ண்டு ப‌திவை ஒரு நாள் போட்ட‌த‌ல் ப‌திவின் நீள‌ம் ச‌ற்று குறைந்துவிட்டதோஓஓ?//

    எப்படி எப்படி எல்லாம் கணக்கெடுக்கறாங்கப்பா மக்கள்ஸ்? :)

    //கீசு கீசு என்று எங்கும்//
    நான் எதோ இந்த‌ குமுத‌ம் குங்கும‌தில் வ‌ருமில்ல‌ அதுன்னு நினைச்சேன் :)//

    ஹிஹி! கிசுகிசு தான் பறவைங்க பேசிக்கும் போது கீசுகீசு ஆகுது! :)

    ReplyDelete
  17. //Raghav said...
    ஆண்டு, (ஹி, ஹி, ஆண்டாளை செல்லமா கூப்புட்டேன்)..//

    அடப்பாவி! :)
    கோதையை கோத்ஸ்-ன்னு கூப்புடுவீகளா?

    ReplyDelete
  18. //ஷைலஜா said...
    ரவிசங்கு!//

    போச்சுறா! :)

    //இருங்கப்பாவரேன் வீட்ல காச்காச்னு குக்கர் சத்தம்போடறது//

    காச் காச் என்றெங்கும் குக்கர் சாதம் கலந்து
    பிசைஞ்ச பிசையரவம் கேட்டிலையோ ஷைல்ஸ் பெண்ணே!
    :))

    ReplyDelete
  19. //ஷைலஜா said...
    பிறப்பு என்பது குண்டு அதாவது காசுகள் நடுவே தங்கக்குண்டுகள் செய்துபோட்டு அணிவார்கள் என
    ஒரு ஆன்மீகபிரசங்கத்தில் கேட்ட நினைவு//

    உங்க கிட்ட இருக்கும் 100 சவரன் பிறப்பு நகையைப் போட்டோ புடிச்சி காட்டுங்கக்கோவ்! :)

    ReplyDelete
  20. //கோபிநாத் said...
    ம்ம்ம்...தல உங்க உழைப்புக்கு ஒரு பெரிய வணக்கம் ;))))//

    நன்றி மாப்பி!
    எவ்வளவோ உழைச்சிட்டோம்! கோதைக்காக இது கூட உழைக்கலீன்னா எப்படி? :)

    //தல...ஒரு கேள்வி.....ஏன் அவளுக்கு இப்படி ஒரு ஆசை!?? இதுல ஏதவாது ப்ளாஸ் பேக் இருக்கா!!???//

    பிளாஷ்-பேக் எல்லாம் ஒன்னுமில்லை கோபி! அவளுக்கு மோட்சம்-ன்னா என்ன கரீட்டாத் தெரிஞ்சிருக்கு! அதான்!

    நாம எல்லாம் உலக வாழ்வில் வரும் அன்றாட இன்ப துன்பங்களைப் பாத்து, மோட்சம்-ன்னா ஏதோ ஒரு இடம், ஹோட்டல் போல, ஜாலியா இருக்கலாம்-ன்னு அப்பவும் கணக்கு தான் போடுறாங்க!

    ஆனா கோதைக்கு அப்படி அல்ல! இறைவனின் நினைப்பே மோட்சம்!
    இறைவனின் அருகாமையே மோட்சம்!
    இறைவனைப் பற்றி இனிக்க இனிக்கப் பேசுவதே மோட்சம்!
    இறைவன் பணியே மோட்சம்!
    எல்லாத்துக்கும் மேலாக "கைங்கர்ய சாம்ராஜ்ஜியமே" மோட்சம்!
    என் கடன் பணி செய்து கிடப்பதே!

    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
    உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் "ஆட் செய்வோம்"

    ReplyDelete
  21. //ஷைலஜா said...
    இந்தப்பாடலில் காசும்பிறப்பும் கலகலப்பதாவது திருமந்திரமும் துவயமும் சப்திப்பது//

    அருமை!

    //இவைகளின் சப்தத்தைக்கேட்பவர்கள் உலகமாயவலையை அறுத்துக் கொள்கிறார்கள்//

    உண்மை
    திருமந்திரம் நம்மை உணர்விக்கும்! சரியான பாதையில் உய்விக்கும்!
    ஸ்ரீயுடன் உள்ள த்வய மந்திரம், நம்மைச் சேர வேண்டிய இடத்தில் சேர்பிக்கும்!

    //பாகவதர்களின் கோஷ்டியில் சேர்ந்து பகவத் அனுபவம் பெறுகிறார்கள்.
    அதனால் உண்டாகும் தேஜசில் பிற‌ரையும்நல் வழிக்கு இழுக்கிறார்கள்//

    ஆமாம்! நீங்க எல்லாரும் அடியேனை நல்வழிக்கு இழுக்கிறீர்களே! அது போல!

    நீங்களும், இத்தனை பேரும் பின்னூட்டம் இட்டு, கோதையின் சொற்களை ஒருவரோடு ஒருவர் கலந்து பேசி, அதனால் உண்டாகும் தேஜசில் அடியேனை நல்வழிக்கு இழுக்கிறீர்களே! அது போல!

    ReplyDelete
  22. //மணி said...
    இது குலசேகர ஆழ்வாரை போன்ற பெண்ணை எழுப்புதல் வகையான பாசுரம்//

    ஆமாங்க மணிபாண்டி ஐயா!
    எழுப்பும் பத்து பாசுரங்களும் பத்து ஆழ்வார்களுக்கு(ஆண்டாள்/மதுரகவிகள் தவிர்த்து) என்று வியாக்யானம் செய்யும் பெரியவர்கள் உண்டு!

    ஆண்டாள் தன்னையே எழுப்பி, அடுத்து நவ கன்னிகைகளை எழுப்புறா-ன்னு வியாக்யானம் செய்யும் பெரியவர்கள் உண்டு!

    //இதில் பேர்த்தல் அப்டிங்கிறது அவுங்கவூர் தயிரை உடைகிறதும் மலையை பேர்த்து எடுக்கிறதும் ஒண்ணாம்//

    ஹா ஹா ஹா
    அம்புட்டு கெட்டித் தயிரா! சூப்பர்!

    ReplyDelete
  23. //மணி said...
    இதற்க்கு முன் அமைந்த புல்லும் சிலம்பின காண பாசுரம் பெரியாழ்வார் போன்ற பெண்ணை எழுப்புவதாக அமைந்த பாசுரம்//

    ஆமாம்! அப்படி ஒரு வியாக்யானம் உண்டு! ஆண்டாள் அப்படி நினைத்து எழுத வில்லை ஆயினும், அவள் வாக்கு வேத வாக்கு என்பதால், இப்படித் தானாக அமைந்தது என்று கருதுவார்கள் உண்டு!

    //அவர்களுடைய நெஞ்சில் ஹரி இருக்கிறான்னு அவர்கள் வேகமாக எழும்போது ஏற்படும் அதிர்வினால் அவன் பாதிக்கப்பட குடாது நு பெரியவங்க மெதுவா ஹரி ஹரி சொல்லி எழுந்து கொள்கின்றனர் அப்படின்னு படிச்சிருக்கேன் சரிதானா//

    அருமையான குறிப்புரை மணி பாண்டி ஐயா!
    உண்மை! அந்தர்யாமி என்று நம்முள் இருக்கிறான் அல்லவா! நம் உடலைப் பாத்துக்கவும் மெல்ல எழணும்! அவன் உள்ளே இருக்கான் என்றும் மெள்ள எழணும்!

    காலையில் மென்மை, பொழுதெல்லாம் இனிமை!

    ReplyDelete
  24. //கவிநயா said...
    //திருமந்திரமும் துவயமும்//

    யக்கா, திருமந்திரம் சரி, துவயம்னா என்ன? விளக்குமாறு (இது அது இல்லை :) கேட்டுக் கொள்கிறேன்//

    அதானே!
    "உய்யுமாறு" என்று எண்ணி
    "விளக்குமாறு" கேட்டுக் கொள்கிறேன்!
    கவிக்காவுக்குப் பதில் சொல்லுங்க அரங்கப்ரியா! :)

    ReplyDelete
  25. இந்தப் பாடலில் இராகம் : பைரவி!

    ReplyDelete
  26. தாலாட்டாகத் திருப்பாவை பாட வேண்டும் என்றால் பல நேரங்களில் முதலில் வரும் பாசுரம் இந்தப் பாசுரம் தான். :-)

    ReplyDelete
  27. //குமரன் (Kumaran) said...
    தாலாட்டாகத் திருப்பாவை பாட வேண்டும் என்றால் பல நேரங்களில் முதலில் வரும் பாசுரம் இந்தப் பாசுரம் தான். :-)
    //

    தெரியுமே! :)
    "தேசம் உடையாய்"-க்கு அதுக்கேத்த மாதிரி பொருள் சொல்லியிருக்கேன்! :))

    ReplyDelete
  28. //பெண்கள் எல்லாம் விடியற் காலையில் எழுந்து தயிர் கடைகிறார்கள்! அப்படின்னா அதுக்கு முன்னரே எழுந்து யாரோ பால் கறந்து இருக்கணும் இல்லியா?//
    அதிகாலையிலே கறந்த பால் விடியற் காலையில் தயிராகி விட்டதா, அதற்குள்ளே?

    ReplyDelete
  29. ஜீவா (Jeeva Venkataraman) said...
    //பெண்கள் எல்லாம் விடியற் காலையில் எழுந்து தயிர் கடைகிறார்கள்! அப்படின்னா அதுக்கு முன்னரே எழுந்து யாரோ பால் கறந்து இருக்கணும் இல்லியா?//
    அதிகாலையிலே கறந்த பால் விடியற் காலையில் தயிராகி விட்டதா, அதற்குள்ளே?

    7:00 PM, December
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    பொதுவா பாலைக்காய்ச்சி முதல்நாளிரவு உறை ஊற்றுவதே வழக்கம் அதுதான் மறுநாள் காலை எழும்போது உறைந்துதயிராக இருக்கும்.

    ReplyDelete
  30. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ஷைலஜா said...
    ரவிசங்கு!//

    போச்சுறா! :)

    //இருங்கப்பாவரேன் வீட்ல காச்காச்னு குக்கர் சத்தம்போடறது//

    காச் காச் என்றெங்கும் குக்கர் சாதம் கலந்து
    பிசைஞ்ச பிசையரவம் கேட்டிலையோ ஷைல்ஸ் பெண்ணே!
    :))
    >>>>>>>>>


    யாருப்பா இந்த ஆண் ஆண்டாள்:):):)

    ReplyDelete
  31. கவிநயா said...
    //திருமந்திரமும் துவயமும் //

    யக்கா, திருமந்திரம் சரி, துவயம்னா என்ன? விளக்குமாறு (இது அது இல்லை :) கேட்டுக் கொள்கிறேன்.

    11:32 AM, December 22, 2008
    >>>>>>>>


    ஆஹா அரங்கத்துக்கு வந்த சோதனையா இது!!!:) துவயம்னா அதுவும் ஒரு
    ஸ்லோகம்னு நினைக்கிறேன் லைக் திருப்பாவை அல்லது திருமந்திரம்! விவரம்
    சான்றோர்கள் யாரவது வந்து விளக்கட்டும் இல்லேன்னா நான் காபிகுடிச்சி பாத்திரம் சற்றே விளக்கி. இங்க வந்து விளக்கமுடியுமா பாக்றேன் அதுவரை இந்தசந்தேகத்தை விலக்கி வைக்கவும் அன்புத்தங்கையே! கவியே! நயமே!

    ReplyDelete
  32. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ஷைலஜா said...
    பிறப்பு என்பது குண்டு அதாவது காசுகள் நடுவே தங்கக்குண்டுகள் செய்துபோட்டு அணிவார்கள் என
    ஒரு ஆன்மீகபிரசங்கத்தில் கேட்ட நினைவு//

    உங்க கிட்ட இருக்கும் 100 சவரன் பிறப்பு நகையைப் போட்டோ புடிச்சி காட்டுங்கக்கோவ்! :)

    1:47 PM, December
    >>>>>>>>>>>>>>>>>>>.......100!OMG!

    நான் சசிகலா அல்ல இரவி சங்கர் அவர்களே!

    ReplyDelete
  33. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //

    ஹா ஹா ஹா!
    நக்கீரி அக்கா திருவரங்கப்ப்ரியா சொன்னதில் யாம் குற்றம் கண்டு பிடிக்கிறோம்! ஏன் தெரியுமா?

    அது மலர்கள் சூடியதால் வந்த மணம் அல்ல! இப்போ நோன்பு போயிக்கிட்டு இருக்கு! அதுக்கு என்ன கண்டிஷன்? மையிட்டு எழுதோம், "மலர் இட்டு நாம் முடியோம்"! ஸோ, நறுங் குழல் வாசம் மலர்களால் அல்ல! அப்போ எதனால்? Dairy Smell! :))****\\\><<>>>>>>>


    இதெல்லாம் ரொம்பவே ஓவர்ப்பா.....சித்திரை டு கார்த்திகை வைச்சிருந்த மலர்களின் வாசனையின் மிச்சம் இருக்காதாக்கும்:):)

    ***வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம்! வாச/நறு-ன்னு ரெண்டு முறை சொல்லி கிண்டல் அடிக்கறா! புதுப் பொண்ணு, மாமியார் வீட்டில் சில பழைய பத்தாம்பசலித்தனங்களைக் கிண்டல் அடிக்கிறா மாதிரி :))*******

    ச்சேச்சேச்ச் ஆண்டாள் காலத்துல நானும் இருந்திருந்தா இந்த வாச, நறு கேட்டு இந்தாம்மா புரட்சிப்பெண்ணே உனக்கு உன் தோழன் மாத‌விப்ப‌ந்த‌ல் ஓன‌ரு உன் வாரணமாயிரம் சூழ நடக்கப்போகும் திருமணத்துக்கு ,நூறுதடா ச‌க்க‌ரைப்பொங்க‌ல் மொய் எழுத‌ச்சொன் னாருன்னு சொல்லி இருப்பேனே!!!!!(எப்டி ர‌வி நானும் ந‌று ஓன‌ரு நூறு சொன்னாரு என‌ டி ஆர் பாணில‌ பின்னூட்ட‌மிட்டுட்டேன் க‌வ‌னிங்க‌):)


    ****மன்னா,
    எனக்கே ஆயிரம் பொற்காசுகளை..ச்சே மைசூர்பாக்களைத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்! :)******>>>>>>>>>>>>>>>

    பொற்காசு கிடைப்பதே உறுதி என ராகவ் சொல்ல‌
    மைபாவை எதிர்பார்ப்பதும் வீண்!

    11:59 AM, December 22, 2008

    ReplyDelete
  34. //பொதுவா பாலைக்காய்ச்சி முதல்நாளிரவு உறை ஊற்றுவதே வழக்கம் அதுதான் மறுநாள் காலை எழும்போது உறைந்துதயிராக இருக்கும்.//
    அதானே.
    இன்னொருவழி: பாலேடுகளை திரட்டி, அதைக் கடைந்து, அதிலிருந்து வெண்ணெய் எடுத்தார்களோ?
    ஆனால் 'தயிர்' என்று வருகிறதே!

    ReplyDelete
  35. இவங்க தானே நோன்பு நோற்குறாங்க. அதுவும் இவங்க எல்லாம் கன்னிப்பொண்ணுங்க. அங்கே தயிர் கடையுறவங்க எல்லாம் தாலி கட்டிக்கிட்டவங்க. திருமணமானவங்க. அவங்க யாரும் 'மலரிட்டு நாம் முடியோம்'ன்னு சொல்லலை.

    ReplyDelete
  36. //மைபாவை எதிர்பார்ப்பதும் வீண்!//
    அப்பாடா, வேற யாராவது 'வீண்' என்கிற பெரிய வார்த்தையை சொல்ல மாட்டாங்களான்னு இருந்தேன்! ;-):-)
    டாங்கீஸ் ஷைலஜாக்கா!

    ReplyDelete
  37. ஜீவா (Jeeva Venkataraman) said...
    //பொதுவா பாலைக்காய்ச்சி முதல்நாளிரவு உறை ஊற்றுவதே வழக்கம் அதுதான் மறுநாள் காலை எழும்போது உறைந்துதயிராக இருக்கும்.//
    அதானே.
    இன்னொருவழி: பாலேடுகளை திரட்டி, அதைக் கடைந்து, அதிலிருந்து வெண்ணெய் எடுத்தார்களோ?
    ஆனால் 'தயிர்' என்று வருகிறதே!

    >>>>>>>>>>>>>>>


    குழப்பம் வேணாம் ஜீவா!

    பாலேடுகளிலிருந்து பட்டரே கிடைக்கும்‍_கிடைக்குமே
    பாலிலிருந்துமட்டும் தயிர்!!

    ReplyDelete
  38. குமரன் (Kumaran) said...
    இவங்க தானே நோன்பு நோற்குறாங்க. அதுவும் இவங்க எல்லாம் கன்னிப்பொண்ணுங்க. அங்கே தயிர் கடையுறவங்க எல்லாம் தாலி கட்டிக்கிட்டவங்க. திருமணமானவங்க. அவங்க யாரும் 'மலரிட்டு நாம் முடியோம்'ன்னு சொல்லலை.

    8:27 PM, December 22, 2008
    >>>>>wow!

    திருக்குமரன் சொல்கேட்டு அகமகிழ்ந்தோம்
    மறுபடியும் மாட்டிக்கொண்டது,மாதவிப்பந்தலு!

    ReplyDelete
  39. ஜீவா (Jeeva Venkataraman) said...
    //மைபாவை எதிர்பார்ப்பதும் வீண்!//
    அப்பாடா, வேற யாராவது 'வீண்' என்கிற பெரிய வார்த்தையை சொல்ல மாட்டாங்களான்னு இருந்தேன்! ;-):-)
    டாங்கீஸ் ஷைலஜாக்கா!

    8:38 PM, December 22
    >>>>>>>>
    பந்தலில் வீண் என்ற வார்த்தையை எதிர்பார்த்த காரண‌ம் என்ன என‌
    நொந்துபோகப்போகிறார் என் செல்லத்தம்பி, இரவி!

    ReplyDelete
  40. //அடுத்த பத்து பாட்டிலும், பத்து வீட்டுக் கதவைத் தட்டுறா ஆண்டாள்! எதுக்கு?//
    பத்து என கணக்குக்கு ஏதும் பொருள் உண்டோ?
    வெவ்வேறு விதமான பத்து பேர் என ஏதும்?

    ReplyDelete
  41. ஜீவா (Jeeva Venkataraman) said...
    //அடுத்த பத்து பாட்டிலும், பத்து வீட்டுக் கதவைத் தட்டுறா ஆண்டாள்! எதுக்கு?//
    பத்து என கணக்குக்கு ஏதும் பொருள் உண்டோ?
    வெவ்வேறு விதமான பத்து பேர் என ஏதும்?
    >>>>>>>>>>>>>>>>>>>>

    முதல் ஐந்தில் தோழிகளை நோன்புக்கு ஆண்டாள் அழைக்கிறாள் என்பது திருப்பாவை பாசுரத்தின் சாரம். இரண்டாவது ஐந்தில் தன்னிலும் சிறிய தோழிகளை அழைக்கிறாள். மூன்றாவது ஐந்தில் தன்னிலும் பெரிய தோழிகளை அழைக்கிறாள்.

    ReplyDelete
  42. //நான் காபிகுடிச்சி பாத்திரம் சற்றே விளக்கி. //

    யக்கா... கா குடிச்சு, பா விளக்கி, ஆச்சா? :)

    ReplyDelete
  43. கவிநயா said...
    //நான் காபிகுடிச்சி பாத்திரம் சற்றே விளக்கி. //

    யக்கா... கா குடிச்சு, பா விளக்கி, ஆச்சா? :)

    9:34 PM, December 22, 2008
    <<<<<

    அது ஆச்சு கவிநயா
    துவயம்க்கு விளக்கம் சொல்ல என் ஒன்றுவிட்ட பெரியப்பாவைதான் ஆன்(ண்)லைன்ல காணோம்னு இந்தப்பெண் காத்திட்டு இருக்கா!

    ReplyDelete
  44. //குமரன் (Kumaran) said...
    இவங்க தானே நோன்பு நோற்குறாங்க. அதுவும் இவங்க எல்லாம் கன்னிப்பொண்ணுங்க//

    நோன்பு நோற்பவர்கள் எல்லாம் கன்னிப் பொண்ணுங்களா இருக்கணும்-னு அவசியம் இல்ல! கூடவே பெரிய பெண்டிர் வழிகாட்டலுக்கும் துணைக்கும் நோற்கலாம்! வீட்டுல சின்னதுங்க விரதம் இருந்தா, விரதம் அவிங்களுக்குத் தானேன்-னு பெரியவங்க நல்லாத் தின்னறாங்களா என்ன? :)
    இன்னும் சொல்லப் போனா பாவை நோன்பை, கன்னி ஆண்களும் நோற்கலாம்! :))

    //அங்கே தயிர் கடையுறவங்க எல்லாம் தாலி கட்டிக்கிட்டவங்க. திருமணமானவங்க! அவங்க யாரும் 'மலரிட்டு நாம் முடியோம்'ன்னு சொல்லலை//

    இதுக்கும் தகுந்த தரவு தந்துட்டு பேசுங்க குமரன்! :)

    இளசுங்களே நோன்புத் தீவிரத்தில் வாடும் போது, தாலி கட்டிக்கிட்டவங்க நல்லாச் சாப்ட்டு, சீவி சிங்காரிச்சிக்கிடுவாங்களோ?

    இந்த மாதிரி அக விடயமெல்லாம் தரவுல தெரியாது! கோதை வீட்டுக்குப் போயி பார்த்தா அப்போ தெரியும்!

    கோதையும், அவ அப்பாவும் மனசால எண்ணிக் கொண்ட வட(தென்) மதுரை மாதிரித் தான் இது! இது அக விடயம்! தரவு தரவு எல்லாம் புற விடயத்துக்கு மட்டுமே! :)))

    ReplyDelete
  45. //ஷைலஜா said...
    திருக்குமரன் சொல்கேட்டு அக மகிழ்ந்தோம்//

    தோக்குற கட்சியில் சேராதீங்க-க்கா! :)
    ரெண்டு மாசம் முன்னாடி வச்ச பூ வாசம் எல்லாம் கூந்தல்-ல வராது!
    ப்ளஸ் மலரிட்டு நாம் முடியோம் கன்னிப் பெண்களுக்கு மட்டுமல்ல! மேலுள்ள பின்னூட்டம் வாசிக்கவும்!

    மன்னா, ஆயிரம் மை.பா. எனக்கே எனக்குத் தான்! இல்லாக்காட்டி நெத்திக் கண் சாமிய கூட்டியாருவேன் :)

    //மறுபடியும் மாட்டிக்கொண்டது,மாதவிப்பந்தலு!//

    ஹிஹி!
    அது என்ன "மறுபடியும்"?

    வட(தென்) மதுரை-ன்னு குமரன் தனிப் பதிவில் போட்டிருக்கேன் பின்னூட்டம்! அதை எல்லாம் படிச்சிட்டு வாங்க-க்கா! இங்கேயும் மேலே லைட்டா அகவிடயம்-ன்னு சொல்லி இருக்கேன் பாருங்க!

    அப்பாவுக்கு வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் தான் வட(தென்) மதுரை!
    பொண்ணுக்கும் அப்படியே கள்ளழகன் ஊரு தான் வட(தென்) மதுரை!

    இப்பிடி ஆழ்வார்களில் ரெண்டு பேர் கற்பனைக்கு மட்டும் பாண்டி நாடே, வட(தென்) மதுரை! அதான் அக விடயம்! :)

    ReplyDelete
  46. @அக்காஸ்!

    திருமந்திரம் = ஓம் நமோ நாராயணாய!

    துவயம் =
    ஸ்ரீ மன் நாராயணாய சரணெள சரணம் ப்ரபத்யே
    ஸ்ரீ மதே நாராயணாய நம:

    மேல் விளக்கங்கள் நீங்களே கொடுங்க!

    ReplyDelete
  47. அச்சுத்தாலி ஆமைத்தாலி என்று இரு சொற்கள் இந்த இடுகையில் வந்தன. அவற்றின் பொருள் என்ன என்று பார்க்கப் போனால் மாமைத்தாலி (மஞ்சள் நிறத் தாலி) என்பதே ஆமைத்தாலி என்றாயிற்று என்பார் இராம.கி. ஐயா. 'தாலி' என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரையை ஐயாவின் பதிவில் காணலாம். அந்தத் தமிழாய்வுத் தரவு போதாதென்றால் வைணவ நெறி உரைகளைக் காணலாம். காசும் பிறப்பும் என்பதற்கு அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் என்று பொருள் சொல்லிவிட்டு மேலும் விளக்கமாக காசு மாலையும் தாலியும் என்று விளக்கம் சொல்லியிருப்பார்கள். தாலி என்பது மாங்கல்யம் என்றும் சொல்லியிருப்பார்கள். இத்தரவுகள் மிக உறுதியாக காசும் பிறப்பும் அணிந்த ஆய்ச்சியர் திருமணமானவர்களே என்று உறுதிப்படுத்துகின்றன. :-)

    தற்காலத்தில் நோன்பு நோற்பவர்கள் கன்னிப்பெண்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆண்களும் நோன்பு நோற்கலாம். இந்தப் பாசுரத்தில்/திருப்பாவையில் ஆண்டாள் தன்னோடொத்த கன்னிப் பெண்களுடன் தான் நோன்பு நோற்கிறாள். இந்தப் பாசுரத்தில் சொல்லப்பட்ட 'வாச நறுங்குழல் ஆய்ச்சியர்' நோன்பை நோற்காமல் 'காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து மத்தினால் ஓசைப்படுத்தி'க் கொண்டிருக்கிறார்கள். தனியாக நோன்பென்று கிளம்பிய இவர்கள் 'மலரிட்டு முடியோம்' என்று நிற்க, தினப்படி வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் அவர்கள் அப்படி நிற்காமல் 'வாச நறுங்குழலுடன்' இருக்கிறார்கள்.

    புற விடயமோ அக விடயமோ அதெல்லாம் அடியேனுக்குத் தெரியாது. அடியேன் ஆசார்ய ஹ்ருதயம் அறிந்தவனுமில்லை. ஆண்டாள் திருவுள்ளம் அறிந்தவனுமில்லை. அடியேன் சிறிய ஞானத்தன். காலம் காலமாக உணர்வு பூர்வமாக அறியும் பெரியவர்களுடன் தரவினைப் பற்றி பேசக் கூடாது என்பது தங்களுக்கும் தெரியும். :-)

    வெற்றி, தோல்வி எல்லாம் இக்கலந்துரையாடல்களில் இல்லை. காமத்துப் பால் சொல்வது இங்கும் பொருந்தும். ஒருவர் தோற்பதே இங்கு அவர் பெறும் வெற்றி. ஏனெனில் இங்கே நடப்பது பகவதனுபவம்; பகவத் விஷய அனுபவம். சரி தானே?! :-)

    வட/தென்மதுரையைப் பற்றி நீங்கள் என்ன தான் சொன்னீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் நீங்கள் போட்ட பின்னூட்டங்களுக்கு பதில்(கள்) சொல்ல தாமதம் ஆகிறது. கோதைத் தமிழ் பதிவில் காத்திருக்கும் ஆண்டாளைப் போல் நீங்களும் கொஞ்சம் காத்திருங்கள். :-)

    ReplyDelete
  48. த்வய மந்திரத்தில் ஒரு அக்ஷரம் கூட வந்துவிட்டது. வடமொழி என்பதாலும் பலுக்கல் வேறுபாட்டைக் காட்டவும் ஆங்கிலத்தில் இடுகிறேன்.

    sriman nArAyana charanau saranam prabhadyE
    srimathE nArAyanAya nama:

    அகலகில்லேன் சிறிது காலமும் என்று அலர்மேல் மங்கை உறையும் மார்பன் - அவர்களது திருவடிகளில் அடைக்கலம் அடைகிறேன். திருவுடன் கூடிய நாராயணனே என்னை உடையவன்; நான் எனக்கு உரியவனல்லன்/ள்.

    ReplyDelete
  49. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    @அக்காஸ்!

    திருமந்திரம் = ஓம் நமோ நாராயணாய!

    துவயம் =
    ஸ்ரீ மன் நாராயணாய சரணெள சரணம் ப்ரபத்யே
    ஸ்ரீ மதே நாராயணாய நம:

    மேல் விளக்கங்கள் நீங்களே கொடுங்க!

    10:45 PM, December 22, 2008
    <<<<<<<<<<<<>>>.

    திருமந்திரம் ..இதைத்தான் ராமானுஜர் அனைவர்க்கும் எடுத்துரைத்தது.
    மூன்று பதங்கள் கொண்டது.


    வைஷ்ண‌வர்களின் பஞ்ச சமஸ்கார காலத்தில் ஆசார்யரால் சிஷ்யனுக்கு ரஹஸ்யத்ரயம் என்னும் திருமந்திரம், த்வயம், சரமச்லோகம் முதலியன உபதேசிக்கப்படுகின்றன.


    இந்த ரஹஸ்யத்ரத்தின் அஷ்டாஷர மந்திரம் திருமந்திரமாகும்

    பகவான் ச்ரம்ச்லோகத்தை அர்ஜுனனுக்கு உபதேசித்தார்.

    ReplyDelete
  50. அடுத்து சரமஸ்லோகம் என்றால் என்னன்னு கவிக்கா கேக்கப்போறாங்க. அதுக்கு முன்னாடியே அது என்னன்னு நீங்களே சொல்லிடுங்க ஷைலஜாக்கா.

    ReplyDelete
  51. @குமரன்
    அடியேனை மன்னியுங்கள்!
    துவய மந்திரத்தில் ஒரு அட்சரம் கூடித் தான் போனது!
    இரண்டு பதிவுகள் இடும்ம் மல்டி டாஸ்கிங் அவசரத்தில் இதைக் கவனிக்கவில்லை!

    துவயத்தில் முதலடியில் "நாராயண" என்றும் இரண்டாம் அடியில் "நாராயணாய" என்றும் வரும்!
    ஒன்று உபாயம், இன்னொன்று உபேயம் என்று ஆசார்யர்கள் அருளிச் செய்வார்கள்!

    இதோ சரியான மந்திரம்:
    துவயம் =
    ஸ்ரீ மன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே
    ஸ்ரீ மதே நாராயணாய நம:

    ReplyDelete
  52. குமரன் (Kumaran) said...
    அடுத்து சரமஸ்லோகம் என்றால் என்னன்னு கவிக்கா கேக்கப்போறாங்க. அதுக்கு முன்னாடியே அது என்னன்னு நீங்களே சொல்லிடுங்க ஷைலஜாக்கா.

    <<<<<<<<<<<<<<<
    அதை பகவான் அர்ஜுனனுக்குமட்டுமே அருளி இருக்கார் நான் அதைக்கேட்கல எனக்குத்தெரியாதுன்னு சொல்லிடுவேன்!!

    ReplyDelete
  53. @குமரன்
    //இத்தரவுகள் மிக உறுதியாக காசும் பிறப்பும் அணிந்த ஆய்ச்சியர் திருமணமானவர்களே என்று உறுதிப்படுத்துகின்றன. :-)//

    அதை யாரும் மறுக்கவில்லையே! பதிவில் நானே இரு வகைத் தாலிகளையும் குறிப்பிட்டுள்ளேனே!

    தயிர் கடைவோர் நறுங்குழலில் பூச்சூடிக் கொண்டிருக்கிறார்களா என்பதற்குத் தான் நீங்கள் தரவு தர வேண்டும்! :)

    தாலி கட்டிய பெண்டிர் தயிர் கடைகிறார்கள், சரி!
    ஆனால் அவர்கள் கன்னிப் பெண்களுக்கு உபகாரமாகவும் தாங்களும் நோன்புக்குத் துணை இருக்கிறார்கள்!
    தாங்களும் மையிடாமல், மலரிட்டு முடியாமல் தான் இருக்கிறார்கள் என்று கோதையின் வீட்டில் எட்டிப் பார்த்து விட்டுச் சொன்னேன்! காமிரா நாட் அலவுட் :))))

    இது பல வீட்டு வழக்கத்தில் உள்ளது தான் குமரன்!
    பூ வாங்கினாலும் மொதல்ல சிறுசுங்களுக்குக் கொடுத்திட்டு அப்புறம் தான் பெரியவங்க வச்சிப்பாங்க!
    அதே போல சிறுசுங்க விரதம் இருந்தா பெரியவங்களும் ரொம்ப சாப்பிடமாட்டாங்க! ஒரு குடும்ப அன்னோன்யம் தான் காரணம்!

    அதைத் தான் குறிப்பிட்டேன், மையிடு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம் என்பது நோன்பு நோற்கும் கன்னியர், தயிர் கடையும் மணமான பெண்டிர் - இருவருக்குமே பொருந்தும் என்று!

    ஹிஹி! வெற்றி தோல்விகளே ஆன்மீக வாதங்களில் இல்லை! ஆனாலும் மாறி மாறி இரு கட்சியாப் பேசணும்! பேசப் பேசத் தான் குணானுபவம் தாழாதே சாரங்கம் உதைத்த சர மழையாக் கொட்டும்!:)

    யார் வெல்லுறாங்க-ன்னு எல்லாம் நான் பாக்க மாட்டேன்-ப்பா!
    நான் மட்டையடி உற்சவத்தில் இருந்து எப்பமே தாயார் கட்சி தான்! தாயார் தான் எப்பமே வெல்லுவாங்களும் கூட! :))

    ReplyDelete
  54. //அதை பகவான் அர்ஜுனனுக்குமட்டுமே அருளி இருக்கார் நான் அதைக்கேட்கல எனக்குத்தெரியாதுன்னு சொல்லிடுவேன்!!//

    யக்கோவ்!
    சரம சுலோகத்தை
    சிரம சுலோகம் ஆக்காதீங்க! :))
    ஒழுங்காச் சொல்லுங்க! அதான் அர்ஜூன சீக்ரெட் ஊரெல்லாம் அவுட் ஆயிரிச்சில்ல? :)

    ReplyDelete
  55. //யக்கோவ்!
    சரம சுலோகத்தை
    சிரம சுலோகம் ஆக்காதீங்க! :))
    ஒழுங்காச் சொல்லுங்க! அதான் அர்ஜூன சீக்ரெட் ஊரெல்லாம் அவுட் ஆயிரிச்சில்ல? :) //

    ரிப்பீட்டேய்...! சொல்லுங்கக்கா...
    (குமரத் தம்பி என்னை நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்காரு :)

    ReplyDelete
  56. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //அதை பகவான் அர்ஜுனனுக்குமட்டுமே அருளி இருக்கார் நான் அதைக்கேட்கல என
    க்குத்தெரியாதுன்னு சொல்லிடுவேன்!!//

    யக்கோவ்!
    சரம சுலோகத்தை
    சிரம சுலோகம் ஆக்காதீங்க! :))
    ஒழுங்காச் சொல்லுங்க! அதான் அர்ஜூன சீக்ரெட் ஊரெல்லாம் அவுட் ஆயிரிச்சில்ல?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>.


    ஸ்லோகம் slow வாக‌த்தான் வரும், இப்போ திருப்பாவை க்ளாஸ்ல இதென்ன அடம்:)

    ReplyDelete
  57. நீங்கள் கோதையின் வீட்டில் எட்டிப் பார்த்தீர்களோ தேசம் உடையவளின் வீட்டில் எட்டிப் பார்த்தீர்களோ எனக்குத் தெரியாது இரவி. நான் அங்கே எட்டிப் பார்க்க எல்லாம் தேவையில்லை. அங்கே தான் வாழ்கிறேன் என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா? :-)

    எட்டிப் பார்த்த நீங்கள் சொல்வதை நம்புவதா அங்கேயே வாழ்கிற நான் சொல்வதை நம்புவதா என்பதை மற்றவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். :-)

    நீங்க தாயார் கட்சின்னா நாங்க தயார் கட்சி. தரவு தர்றதுக்கு இல்லை. அவள் கைச்சோறு உண்பதற்கு. :-)

    ReplyDelete
  58. //கவிநயா said...
    //யக்கோவ்!
    சரம சுலோகத்தை
    சிரம சுலோகம் ஆக்காதீங்க! :))
    ஒழுங்காச் சொல்லுங்க! அதான் அர்ஜூன சீக்ரெட் ஊரெல்லாம் அவுட் ஆயிரிச்சில்ல? :) //

    ரிப்பீட்டேய்...! சொல்லுங்கக்கா...
    (குமரத் தம்பி என்னை நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்காரு :)//

    தோடா!
    கவிக்கா, சொன்னது குமரத்தம்பி இல்ல! அடியேன், உங்க கண்ணன்!
    குமரத் தம்பியோட தம்பி!:)

    குமரனை குமரன் குமரன்-ன்னு மரியாதை இல்லாம பேர் சொல்லிக் கூப்பிட்டே பழக்கம் ஆயிரிச்சி! அண்ணான்னு கூப்பிடனும்! ஆனா இப்போ திடீர்ன்னு கூப்பிட என்னவோ போல இருக்கு! இது என்ன மாதிரி பாகவதாபசாரம் ஆகப் போவுதோ! முருகா! :)

    ReplyDelete
  59. //குமரன் (Kumaran) said...
    அங்கே தான் வாழ்கிறேன் என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா? :-)//

    ஹிஹி!
    ஆண்டாள் கிட்ட சொல்லி குமரனுக்கு மட்டும் வீட்டு வாடகையை உசத்தச் சொல்லணும்! :)

    //எட்டிப் பார்த்த நீங்கள் சொல்வதை நம்புவதா அங்கேயே வாழ்கிற நான் சொல்வதை நம்புவதா//

    ஹா ஹா ஹா
    காலேஜ்-ல படிக்கிறேன்! ஹாஸ்டல்ல இருந்து அப்பப்ப தான் எங்க வீட்டை எட்டிப் பார்க்க முடியும்! அதுக்காக எந்தை வீடு, அந்த வீடு, கந்த வீடு, சொந்த வீடு தானே! :))

    //நீங்க தாயார் கட்சின்னா நாங்க தயார் கட்சி. தரவு தர்றதுக்கு இல்லை. அவள் கைச்சோறு உண்பதற்கு. :-)//

    ஆகா...
    தாயார் கைச்சோறுக்கு ஆட்பட்டவரா நீங்க! அப்படின்னா மறுப்பேதும் இல்லை! உங்க கூட சண்டை போடாம, சமாதானமா போயிருவேன்! நீங்க அந்தப் பெருமாளு ஆளு-ன்னுல்ல நெனைச்சேன்! முன்னமே சொல்லக் கூடாதா? ஹே கோத்ஸ், குமரனுக்கு ஒரு குவளை பாயசம்(திருக்கண்ணமுது) கொடும்மா! :)

    ReplyDelete
  60. //கவிக்கா, சொன்னது குமரத்தம்பி இல்ல! அடியேன், உங்க கண்ணன்!
    குமரத் தம்பியோட தம்பி!:)//

    அச்சோ. பின்னூட்டி முடிச்சதுக்கப்புறம்தான் இந்தக் குழப்பம் வரப்போவுதுன்னு நெனச்சேன் :) கண்ணா... நீங்கதான் சொன்னதுன்னு தெரிஞ்சுதான் ரிப்பீட்டினேன்.

    //அடுத்து சரமஸ்லோகம் என்றால் என்னன்னு கவிக்கா கேக்கப்போறாங்க. அதுக்கு முன்னாடியே அது என்னன்னு நீங்களே சொல்லிடுங்க ஷைலஜாக்கா.//

    அடுத்து சொன்னது குமரன் சொன்னாரே -இதுக்குதான்.. :)

    ஆக மொத்தம் தம்பீஸ்லாம் வெரி ச்வீட் :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP