Tuesday, December 30, 2008

மார்கழி-16: தொழிலாளிக்கு பென்ஸ் கார் கொடுப்பாரா முதலாளி?

தான் விரும்பி உபயோகிக்கும், தனக்கே உரிய ஒன்றை, முதலாளி தொழிலாளிக்கு விட்டுக் கொடுப்பாரா? எடுத்துக்காட்டா ஒரு பென்ஸ் காரு-ன்னு வச்சிக்குவோம்! அது முதலாளியின் ஆளுமைச் சின்னம்! அதைத் தன் தொழிலாளி கிட்ட கொடுத்து, நீயும் யூஸ் பண்ணிக்கோ-ன்னு யாராச்சும் சொல்லுவாங்களா? ஹிஹி! அவ்ளோ நல்லவரு யாருங்க?

வேற யாரு? இறைவன் தான்! :)
* பெருமாளுக்கே உரிய அடையாளம் எது? = சங்கு-சக்கரம்!
* துவார பாலகர்கள் (வாயிற் காப்போர்) கையில் என்ன இருக்கு பாருங்க! = சங்கு-சக்கரம்!

ஆகா! இது எப்படிச் சாத்தியம்? இது எப்படிச் சாத்தியம்? ஹிஹி!
அதான் அவன் பெருமாள்=பெரும்+ஆள், நாம சிறுமாள்=சிறும்+ஆள்!


வீட்டில் நம் பொருட்களை, அம்மா-அப்பா ஏதாச்சும் அவசரத்துக்குத் தொட்டால் கூட கத்தறோம்! நண்பனுக்குக் கூட நம்மை மிஞ்சித் தான் தர்மம்! காதலிக்குத் தண்ணியா செலவழிச்சாலும், நம் ஈகோ, இமேஜ் சம்பந்தப்பட்ட பொருட்களை விட்டுக் கொடுப்பது கிடையாது! தங்கச்சிக்கு மட்டும் எப்பவாச்சும் கொஞ்சூண்டு பாசம் காட்டுறோம்! :)
ஆனால் ஆனானப்பட்ட சங்கு சக்கரங்களையே, பக்தர்களுக்காக விட்டுக் கொடுக்கிறானே! இது எப்படி முடிந்தது?
* சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கரில், இன்றும் ஆஞ்சநேயர் கைகளில் சங்க-சக்கரம்! தனக்கே உரிய உடைமையைத் தன் அன்பன் அனுமனுக்குக் கொடுக்கிறான்!
* திருமலை திருப்பதியில், தொண்டைமான் சக்கரவர்த்திக்கு, தனக்கே உரிய உடைமையான சங்கு சக்கரங்களை விட்டுக் கொடுத்து நின்றான்! வந்தது வினை! இவன் பெருமாளே அல்ல என்று சிலர் கும்மியடிக்கும் நிலைக்குச் சென்று விட்டது!

சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள், இன்றுள்ள பெருமாளை அப்போதே படம் பிடித்துக் காட்டுகிறாரே! அட, கும்மிக்கு இளங்கோவாவது? தமிழாவது? தரவாவது? அதெல்லாம் எதுவுமே பொருட்டல்ல! அந்த இறைவனுக்கே விதி விலக்கு கொடுக்க மாட்டார்கள்! :)
வீங்கு நீர் அருவி "வேங்கடம்" என்னும்
ஓங்குயுர் மலையத்து உச்சி மீமிசை
பகை அணங்கு "ஆழியும்" பால் வெண் "சங்கமும்"
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
செங்கண் "மால்" "நெடியோன்" நின்ற வண்ணமும்!


அப்போது கூடப் அவன் தன்னைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை! அதனால் தான் அவன் பெரும்+ஆள்! கடைசியில் இராமானுசர் வந்து தான் அவனை நிலைநாட்ட வேண்டிய நிலை!
இப்படித் தன்னையும் தன் உடைமையையும் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு, நம் அருளே புரிந்து இருக்கிறான்! நமக்காக விட்டுக் கொடுத்து நிற்கிறான் இறைவன்! - அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு!


இறைவன் "வீட்டின்" துவாரபாலகர்கள் = கோயில் காப்போர்! கொடி தோன்றும் தோரண வாயில் காப்போர்! அவர்களைப் பற்றிய பாட்டு இன்றைக்கு!
* கிழக்கு = ஜய-விஜயன் (பிரதான நுழைவாயில்)
* மேற்கு = சண்டப்-பிரசண்டன்
* தெற்கு = பத்ர-சுபத்ரன்
* வடக்கு = தாத-விதாதன்

ஆலயத்துக்குள் செல்லும் முன்னர், இவர்களையும் வணங்கிச் செல்வதே முறை! அடியார் வணக்கம் முதலில்! ஆண்டவன் வணக்கம் அடுத்து!
சக அடியார்களை முதலில் மதிக்கக் கற்றுக் கொண்டால், ஆண்டவனின் ஆன்மீகம் தானே வளரும்!

ஜய-விஜயன் தான், இறைவனுக்காக, இறைவனுடன் அவதாரம் எடுத்தனர்!
* இரண்யாட்சன்-இரணியகசிபு
* இராவணன்-கும்பகர்ணன்
* சிசுபாலன்-தந்தவக்ரன்

நமக்காக-அவனுக்காக, தாங்கள் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளக் கூடத் துணிந்த இவர்களின் பக்தி தான் என்னே! தம்மைப் பின்னிறுத்தி, இறைவனை முன்னிறுத்தும் குணத்தை நாம இவிங்க கிட்ட இருந்து தான் கற்றுக் கொள்ளணும்!
அடுத்த முறை ஆலயம் செல்லும் போது, இந்த ஜய விஜயர்களைப் பார்த்து ஒரு "ஹாய்" ஆச்சும் சொல்லுங்க! :))

கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக் கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியரோமுக்கு, அறை பறை

மாயன் மணி வண்ணன், நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம்! துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்!




இன்றிலிருந்து 2nd half of திருப்பாவை! அடுத்த பதினைஞ்சு பாடல்கள்! சென்ற பாட்டோடு,
* காலையில் எழுந்து, நாராயணா-ன்னு சொல்லியாச்சு
* ஊர் நல்லா இருக்க மழை வேணும்-ன்னு வேண்டிக்கிட்டாச்சு!
* எல்லா வகையான பெண்களையும் எழுப்பியாகி விட்டது!
* எல்லாரும் நோன்பில் இருக்கிறாங்க!
* குள்ளக் குளிரக் குடைந்து நீராடியாச்சி!
* புறத் தூய்மை-அகத் தூய்மை ரெண்டும் பண்ணிக்கிட்டாச்சி!
* நேரே கண்ணன் வீட்டுக்குப் போறாங்க அத்தனை பேரும்!

அங்கே சக அடியார்கள் - காவலர்கள்! அவர்களைப் பார்த்து புன்னகை பூக்கிறாள் கோதை! அவர்கட்கு முதல் வணக்கம் வைக்கிறாள்!
தங்களுக்குப் பறை தருவதா கண்ணன் நேற்றே சொல்லிட்டானே! இனி இவிங்கள எதுக்கு நாம மதிக்கணும்?-ன்னு அகந்தை காட்டலை! 200 Rs. டிக்கெட் வாங்கி ஸ்பெஷல் என்ட்ரென்ஸ் வழியா நுழையலை!
பொறுமை காட்டி, பணிவு காட்டி வணங்குகிறார்கள்! பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து!

சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோயிலுக்குள் போகும் போது, திருவாசிரிய மண்டபத்தில் உள்ள அடியார்களை எல்லாம் வணங்கிக் கொண்டே செல்வாராம்! அப்புறம் தான் சிவ வணக்கமே!
ஆனால் ஒரே ஒரு நாள், ஏதோ சிந்தனையில் சென்று விட, அப்போது தான் சிவபெருமான் காட்டி அருளினான் - திருத்தொண்டர் தொகை என்னும் அடியார்கள் நூல் பிறந்தது! அடியார்க்கும் அடியேன், அடியார்க்கும் அடியேன் என்று சுந்தரர் பாடினார்!

அடியார் வணக்கம் முதலில்! ஆண்டவன் வணக்கம் அடுத்து!
அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ-ன்னு சாற்றுமுறையில் கூட அடியார்கள் தான் மொதல்ல வருது! அதையே கோதை காட்டுகிறாள் இந்தத் திருப்பாவையில்!



நாயகனாய் நின்ற = எங்க ஆயர்களுக்கு எல்லாம் தலைவனாய் நின்ற

நந்தகோபன் உடைய கோயில் காப்பானே! = நந்தகோபனின் அரண்மனையைக் காப்பவனே! - வெளிக் காவலர்கள்!
கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே! = கொடிகள் கட்டப்பட்டுள்ள வாயி்லைக் காப்பவர்களே! - உள் காவலர்கள்!

மணிக் கதவம் தாள் திறவாய் = கதவைத் தாழ் திறந்து விடுங்கள்!
ஆயர் சிறுமியரோமுக்கு = ஆயர் சிறுமியரான எங்களுக்கு
அறை பறை = (நோன்புப் பொருளான) அடிக்கும் பறையைத் தருகிறேன்-ன்னு

மாயன் = தமிழ்க் கடவுளான மாயோன்
மணிவண்ணன் = கருநீல மணி வண்ணன்
நென்னலே வாய் நேர்ந்தான் = நேற்றே வாக்கு கொடுத்தான்!
(நெருநல் என்பது நேற்றைய காலம்! என்ன குறள்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்?
நெருனல் = நென்னல்! ஆண்டாள் தான் வட்டார வழக்கு வித்தகியாச்சே!)

தூயோமாய் வந்தோம் = நாங்களும் தூய்மையாய் வந்திருக்கோம்!
துயில் எழப் பாடுவான் = அனைவரும் விழித்து எழ, பள்ளி எழுச்சி பாடுறோம்!

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! = அம்மானே! வாயிலா! இது தான் எங்க நோன்பின் ஆரம்பம்! "வீட்டுக்கு" (கோயிலுக்கு) வந்திருக்கோம்! எங்கள் முதல் முதல் நோன்பு நிலை! அதை முதலிலேயே ஏதாச்சும் சொல்லி மறுத்துடாதீங்க!

நீ நேய நிலைக் கதவம் நீக்கு! = தாழ் நீக்கி, திருக் கதவம் திறப்பித்து, எங்களை உள்ளே அனுமதியுங்கள்!

அடியார்கள்
* அவர்கள் கருத்து எந்த வடிவில் இருந்தாலும், அது இறைக் கருத்து அல்லவா!
* அவர்கள் வழி என்னவாக இருந்தாலும், அது இறை வழி அல்லவா!
* சக அடியார்களிடம் துவேஷம் காட்டாது, அன்பும் மதிப்பும் காட்டுவோம்!

"நேயமாய்", நம் மனசின் நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்! ஏல்-ஒர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

35 comments:

  1. //வீட்டில் நம் பொருட்களை, அம்மா-அப்பா ஏதாச்சும் அவசரத்துக்குத் தொட்டால் கூட கத்தறோம்! நண்பனுக்குக் கூட நம்மை மிஞ்சித் தான் தர்மம்! காதலிக்குத் தண்ணியா செலவழிச்சாலும், நம் ஈகோ, இமேஜ் சம்பந்தப்பட்ட பொருட்களை விட்டுக் கொடுப்பது கிடையாது!
    //

    இதுல கூட தங்கச்சிக்கு கொடுக்கனும்ன்னு ஏதாச்சும் இருக்கா??என்ன பண்ணுறது...தங்கச்சிங்க நிலமை இப்படி ஆகி போச்சு :(


    இன்றைக்கும் விளங்கள் நல்லா இருக்கு அண்ணா :)
    நிஜமா படிச்சுட்டுதான் சொல்லுறேன்..
    எனக்கு கூட புரியுற மாதிரி எழுதுறீங்க பாருங்க..அதுதான் சூப்பர் :)))

    நன்றி அண்ணா..
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //ஆயர் சிறுமியரோமுக்கு = ஆயர் சிறுமியரான எங்களுக்கு//

    ஓஹோ :D
    இவங்களும் என் கேங் தானா :))))

    ReplyDelete
  3. //(unknown blogger) said...//

    Happy New Year, Sweet sis, Thurgah! :)

    //
    //ஆயர் சிறுமியரோமுக்கு = ஆயர் சிறுமியரான எங்களுக்கு//
    ஓஹோ :D
    இவங்களும் என் கேங் தானா :))))//

    இல்லை! இல்லை!
    அவங்க ஆயர் சிறுமி!
    நீ அப் பாவிச் சிறுமி!! :)))

    ReplyDelete
  4. //(unknown blogger) said...
    இதுல கூட தங்கச்சிக்கு கொடுக்கனும்ன்னு ஏதாச்சும் இருக்கா??என்ன பண்ணுறது...தங்கச்சிங்க நிலமை இப்படி ஆகி போச்சு :(//

    ஓ! இதை என்னால தாங்கிக்க முடியாது! இப்பவே என் தங்கச்சிக்காக பதிவை மாத்துறேன்! :)

    ReplyDelete
  5. //
    இல்லை! இல்லை!
    அவங்க ஆயர் சிறுமி!
    நீ அப் பாவிச் சிறுமி!! :)))//
    அப்போ அவங்க அப்பாவி இல்லைன்னு சொல்ல வரீங்களா?யாருப்பா அங்கே இந்த கேஆரெஸ் சும்மா விடாதீங்க :))

    பட் வீ ஆர் சிறுமிஸ் :D
    அந்த வகையில நாங்க எல்லாம் ஒன்னுதான்

    ReplyDelete
  6. //தங்கச்சிக்கு மட்டும் எப்பவாச்சும் கொஞ்சூண்டு பாசம் காட்டுறோம்! :)//

    அதுவும் சொல்லி காட்டினால்தான் பாசம் எல்லாம் வருது :D
    என்ன பண்ணுறது?எல்லாம் நிலமை :D

    ReplyDelete
  7. துவ‌ரா பால‌க‌ர்க‌ளிட‌ம் சொல்லிகிட்டு போய் தான் பெருமாளை சேவிக்க‌ணும் பெரியவ‌ங்க‌ சொல்லி இருக்காங்க‌. அதையே அழ‌கா சொல்லி இருக்கீங்க‌. ச‌ங்கு ச‌க்க‌ர‌ம் எல்லார் கையில் கொடுத்து இருப்ப‌தால் தான் பெரும்‍ ஆள் ம்ம் சூப்ப‌ர்ப்பா. பாவை விள‌க்க‌ங்க‌ளும் அருமை. தாள் திற‌வாய் என்று இன்னும் ஒரு பாவை பாட‌லிலும் வ‌ருது இல்லையா?

    புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  8. நீங்கள் உங்களைத் திரிவிக்கிரமன் போல என்று சொல்லிக் கொண்ட போதே நினைத்தேன் நீங்கள் சிறுமாலாகத் தான் இருக்க வேண்டும் என்று. சும்மா பேச்சுக்குத் தானே உங்கள் பெயர் சங்கரன் சங்கரன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்? உண்மையில் நீங்கள் சிறு மால் தானே. :-)

    ReplyDelete
  9. இதென்ன இந்த வாயிற்காப்போர்கள் எல்லாம் இரட்டையர்களா என்ன? பெயர்கள் எல்லாம் இந்தக் காலத்தில் இரட்டையர்களுக்கு வைப்பதைப் போல் இருக்கிறதே? :-)

    ஜயன் - வி'ஜயன்'
    சண்டன் - பிர'சண்டன்'
    பத்ரன் - சு'பத்ரன்'
    தாதன் - வி'தாதன்'

    ReplyDelete
  10. தந்தவக்ரனா? தந்தவக்த்ரனா? இந்தப் பெயருக்கு என்ன பொருள்?

    ReplyDelete
  11. உலகத்தின் பெருமையைச் சொல்வாரே ஐயன் அந்தக் குறள்ல தானே நெருநல் வருது. எனக்கு அந்தக் குறள் தெரியுமே. நீங்க சொல்லாததால நானும் சொல்ல மாட்டேன். :-)

    ReplyDelete
  12. மானே, நீ நென்னலை "நாளை வந்து உங்களை
    நானே எழுப்புவன்" என்றலும், நாணாமே
    போன திசை பகராய்! இன்னம் புலர்ந்தின்றோ?
    வானே நிலனே பிறவே அறிவரியான்,
    தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்,
    வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்,
    ஊனே உருகாய், உனக்கே உறும், எமக்கும்
    ஏனோர்க்கும் தங்கோனைப் பாடு, ஏலோர் எம்பாவாய்.

    ReplyDelete
  13. இந்தப் பாண்டிய நாட்டுக்காரி மட்டுமில்லீங்க பாண்டிய நாட்டுக்காரரும் நென்னலைங்கறார். மேலே சொன்ன பாட்டைப் பாருங்க.

    ReplyDelete
  14. துவார பாலகர்களை வணங்காமல் பெருமாளை சேவித்ததே இல்லை.

    அதிலும் எங்க ஊரில் பெருமாள் விக்ரஹத்தை விட ஜய விஜயர்கள் விக்ரஹம் பிரம்மாண்டமாக இருக்கும். சிறு வயதில் அவர்களை கோவில் காக்கும் பயில்வான்கள் என்று நினைத்திருந்தேன். :)

    ReplyDelete
  15. துவார பாலகர்கள் = வாயிற் காப்போர் சரிதான என சந்தேகம் எழுகிறது. வாயிற் காப்போர் கோவிலின் வாசலில் தானே இருக்க வேண்டும். ஆனால் ஜய விஜயர்கள் கருவறை, அர்த்த மண்டபம் முன்பு அல்லவா உள்ளனர்.

    மதுரை முதலான தென் தேசங்களில் கோவில் வெளியே காவல் தெய்வமாக கருப்பண்ண சுவாமி அல்லவா விளங்குகிறார். திருமாலிருஞ்சோலையில் கள்ளழகரை எதிர்த்து சண்டை போட வந்த கருப்பணனை வென்று அழகர் காவல் தெய்வமாக கொண்டுள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன். இவை பின்னாளில் ஏற்பட்ட ஒன்றா ?

    ReplyDelete
  16. Vanakkam sir,
    Nerunelulanoruvan indrillai endra kural,nalla vilakkangal.
    ARANGAN ARULVANAGA.
    SRINIVASAN.

    ReplyDelete
  17. //Raghav said...
    வாயிற் காப்போர் கோவிலின் வாசலில் தானே இருக்க வேண்டும்//

    கருவறை வாயில், வாயில் கிடையாதா?
    அதைக் காப்போர் வாயிற் காப்போர் கிடையாதா? :)

    கோயில் காப்போன், கொடி தோன்றும் தோரண வாயில் காப்போன்! = துவஜஸ்தம் தோன்றிய பின் உள்ள தோரண வாயில், அர்த்த மண்டப/கருவறை வாயில்!

    ஏழு பிரகார கோயிலை மனசில் நினைச்சிக்கிட்டா இப்படித் தான் சந்தேகம் வரும்!
    நந்தகோபன் வீடு இது! நோ சப்த பிரகாரம்ஸ்! :)

    சப்த பிரகாரத்திலும், ஒவ்வொரு வாயிலுக்குமே காவலர்கள் உண்டு!

    ReplyDelete
  18. //திருமாலிருஞ்சோலையில் கள்ளழகரை எதிர்த்து சண்டை போட வந்த கருப்பணனை வென்று அழகர் காவல் தெய்வமாக கொண்டுள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன். இவை பின்னாளில் ஏற்பட்ட ஒன்றா ?//

    நீங்க தானே வட(தென்) மதுரைக்காரரு! நீங்க தான் சொல்லணும்? :)
    இன்னொரு வட(தென்) மதுரைக்காரரும் வந்து சொல்லலாம்! :))

    ReplyDelete
  19. // Anonymous said...
    இந்தப் பாண்டிய நாட்டுக்காரி மட்டுமில்லீங்க பாண்டிய நாட்டுக்காரரும் நென்னலைங்கறார். மேலே சொன்ன பாட்டைப் பாருங்க//

    சூப்பர்! நென்னல் பாண்டி நாட்டுச் சொல் தான்! அதை மறுக்கவில்லையே! :)

    ReplyDelete
  20. //
    ஆனால் ஆனானப்பட்ட சங்கு சக்கரங்களையே, பக்தர்களுக்காக விட்டுக் கொடுக்கிறானே! இது எப்படி முடிந்தது?
    //

    சங்கு சக்கரம் என்ன ஜுஜுபி !!! தன்னையே அடியார்க்கு தந்தவன் அவன்.
    நம்ம வீட்ல வெத்தல, பாக்கு, குங்குமம் வைத்து பெண்களுக்கு தாம்பூலம் தரும் வழக்கம் உண்டு.
    கையில் கொடுக்க மாட்டாங்க, அந்த பெண்களே எடுத்துப்பாங்க. பெண்களின் உரிமை அது, அதனால் அவங்களே எடுத்துக்குவாங்க.
    ராமாவதாரம் முடிந்து, அயோத்தி விட்டுச் செல்லும் பொழுது, ராமன் அனுமனிடம் சென்று “அனுமா வந்து என்னை மேவிக் (தழுவி) கொள் என்றான்”.
    ராமன் போய் அனுமனை கட்டிப்பிடிக்கவில்லை. அது அனுமனின் உரிமை.
    ராமன் தன்னையே அனுமனிடம் ஒப்படைத்து, நான் உன் உடமை எடுத்துக்(தழுவிக்) கொள் என்று சொல்லாமல் சொன்னான்.
    (வலையில் படித்தடு, லின்க் நினைவில்லை)

    ReplyDelete
  21. //(unknown blogger) said...
    எனக்கு கூட புரியுற மாதிரி எழுதுறீங்க பாருங்க..அதுதான் சூப்பர் :)))//

    ஹிஹி!
    புரியாதவங்களுக்கும் புரிய வைக்கறது தான் கைங்கர்யம்!

    புரிஞ்சவங்களுக்கே மீண்டும் மீண்டும் புரிய வைக்கறது முக்கியமா?
    புரியாதவங்களுக்கும் புரிய வைக்கறது முக்கியமா?
    இதைப் புரிஞ்சவங்க புரிஞ்சிப்பாங்கன்னு நினைக்கிறேன்!:))

    ReplyDelete
  22. //மின்னல் said...

    வாங்க மின்னல்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    //துவ‌ரா பால‌க‌ர்க‌ளிட‌ம் சொல்லிகிட்டு போய் தான் பெருமாளை சேவிக்க‌ணும் பெரியவ‌ங்க‌ சொல்லி இருக்காங்க‌. அதையே அழ‌கா சொல்லி இருக்கீங்க‌//

    துவார பாலகர்கள் மட்டும் இல்லீங்க!
    ஆலயத்தில் வரிசையில் நிற்கும் சக அடியார்கள் கிட்டயும் அப்படியே கனிவு காட்டணும் என்பதையும் சொல்ல வந்தேன்!

    //ச‌ங்கு ச‌க்க‌ர‌ம் எல்லார் கையில் கொடுத்து இருப்ப‌தால் தான் பெரும்‍ ஆள் ம்ம் சூப்ப‌ர்ப்பா. பாவை விள‌க்க‌ங்க‌ளும் அருமை//

    நன்றி! நன்றி! :)

    //தாள் திற‌வாய் என்று இன்னும் ஒரு பாவை பாட‌லிலும் வ‌ருது இல்லையா?//

    பூங்கதவே தாள் திறவாய்-ன்னு சினிமாப் பாட்டா? :)

    ReplyDelete
  23. //Anonymous said...
    நீங்கள் உங்களைத் திரிவிக்கிரமன் போல என்று சொல்லிக் கொண்ட போதே நினைத்தேன்//

    நான் திரிவிக்ரமன் கிடையாதே! மீ ஒன் சிறிய சிறிய, சிற்றஞ்சிறு ஞானத்தன்! :)

    //நீங்கள் சிறுமாலாகத் தான் இருக்க வேண்டும் என்று//

    சிறுமாள்=சிறும்+ஆள்-ன்னு வேணும்னா சொல்லுங்க!

    சிறுமால=சிறு+மால்
    அடியேன் மாலும் இல்லை!
    மாலுக்கு என்றும் சிறுமையும் இல்லை!

    //சும்மா பேச்சுக்குத் தானே உங்கள் பெயர் சங்கரன் சங்கரன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்? உண்மையில் நீங்கள் சிறு மால் தானே. :-)//

    அடியேன் சங்கரன்!
    சங்கராச்சார்ய விரசித மாதவிப் பந்தல்! :))

    ReplyDelete
  24. //Anonymous said...
    இதென்ன இந்த வாயிற்காப்போர்கள் எல்லாம் இரட்டையர்களா என்ன? பெயர்கள் எல்லாம் இந்தக் காலத்தில் இரட்டையர்களுக்கு வைப்பதைப் போல் இருக்கிறதே? :-)

    ஜயன் - வி'ஜயன்'
    சண்டன் - பிர'சண்டன்'
    பத்ரன் - சு'பத்ரன்'
    தாதன் - வி'தாதன்'//

    ஹிஹி!
    அடுத்து யாருப்பா ட்வின்ஸ்-க்கு ப்ளான் பண்ணுறது? கைவசம் பேரு இருக்கு பாருங்க! :))

    ReplyDelete
  25. //Anonymous said...
    உலகத்தின் பெருமையைச் சொல்வாரே ஐயன் அந்தக் குறள்ல தானே நெருநல் வருது. எனக்கு அந்தக் குறள் தெரியுமே. நீங்க சொல்லாததால நானும் சொல்ல மாட்டேன். :-)//

    அடடா! என் வழியைப் பின்பற்றுபவரா நீங்க? :))

    கீழே ஸ்ரீநிவாசன் சார் சொல்லிட்டாரு!

    ReplyDelete
  26. //Anonymous said...
    தந்தவக்ரனா? தந்தவக்த்ரனா? இந்தப் பெயருக்கு என்ன பொருள்?//

    வடமொழியில் தந்த+வக்த்ரன் = பல்+நகன்! உறுதியான+நகம் கொண்டவன்!

    தமிழில் எழுதும் போது கம்சனை, "கஞ்சன்" வயிற்றில் என்று கஞ்சன் ஆக்குகிறாள் கோதை! அதே போல் தந்தவக்ரன்!

    தந்தவக்ரன் பற்றி மட்டும் இதோ கொஞ்சம் மேலதிக தகவல்:

    சாபத்தின் கடுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது கிருஷ்ணாவதாரத்தில்...அதனால் தான் இருவரும் மிகவும் உக்கிரமான தீத்தொழில் புரியவில்லை!

    ஜராசந்தன் மறைவுக்குப் பழிவாங்கத் தான் சிசுபாலன் கண்ணனை நூறு முறைக்கு மேல் அவமதித்து சபையில் சக்ராயுதம் பட்டு மாண்டான்.

    சால்வன் மறைவுக்குப் பழிவாங்க அவன் நண்பன் தந்தவக்ரன், கண்ணனின் முன் தோன்றினான். சரியான ஆயுதங்கள், தேர் எதுவும் இல்லாமல் கோபம் ஒன்றே ஆயுதமாக வந்தான். கண்ணனும் போர் தருமங்களின் படி, தேரை விட்டு இறங்கி வெறும் கதையினால் போரிட்டு, தந்தவக்ரனை மாய்த்தான்...

    அத்தோடு ஜய, விஜய சாபக் கணக்கு தீர்ந்தது!

    ReplyDelete
  27. //Raghav said...
    துவார பாலகர்களை வணங்காமல் பெருமாளை சேவித்ததே இல்லை//

    நல்லது ராகவ்!

    //சிறு வயதில் அவர்களை கோவில் காக்கும் பயில்வான்கள் என்று நினைத்திருந்தேன். :)//

    அடப் பாவி!
    சாப்பிடுங்கள் ஜீவன்டோன்-ன்னு சொல்லாம இருந்தியே! :))

    ReplyDelete
  28. //Anonymous said...
    Nerunelulanoruvan indrillai endra kural//

    ஆமாங்க ஸ்ரீநிவாசன் சார்!
    நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
    பெருமை படைத்து இவ்வுலகு!

    //nalla vilakkangal.
    ARANGAN ARULVANAGA//

    நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. //Rishi said...
    சங்கு சக்கரம் என்ன ஜுஜுபி !!!//

    வாங்க ரிஷி!
    சக்கரத்தாழ்வாரை ஜுஜுபி-ன்னு சொல்றீங்க! ஹா ஹா ஹா! :))

    //தன்னையே அடியார்க்கு தந்தவன் அவன்//

    அப்படி வரீங்களா? அருமை!

    //தாம்பூலம் தரும் வழக்கம் உண்டு.
    கையில் கொடுக்க மாட்டாங்க, அந்த பெண்களே எடுத்துப்பாங்க//

    நல்ல எடுத்துக்காட்டு!

    //ராமன் போய் அனுமனை கட்டிப் பிடிக்கவில்லை. அது அனுமனின் உரிமை.
    ராமன் தன்னையே அனுமனிடம் ஒப்படைத்து, நான் உன் உடமை எடுத்துக்(தழுவிக்) கொள் என்று சொல்லாமல் சொன்னான்//

    அருமை! அருமை!
    எனக்கு இந்த வரி தான் ஞாபகம் வருது உங்க பின்னூட்டம் படிச்சவுடன்!

    மும்மை சால் உலகுக்கு எல்லாம்
    மூல மந்திரத்தை,முற்றும்
    "தம்மையே தமர்க்கு நல்கும்"
    தனிப்பெரும் பதத்தை, தானே

    இம்மையே எழுமை நோய்க்கும்
    மருந்தினை, ‘ராமா’ என்னும்
    செம்மை சேர் நாமம் தன்னை
    கண்களின் தெரியக் கண்டான்!

    ReplyDelete
  30. >>* சிசுபாலன்-தந்தவக்ரன்<<
    I have seen a variation of the names of this pair as "kamsan-sisupAlan". Is dantavakran the same as kamsan? or is Kamsan not at all a part of the three pairs?

    Regarding the picture of sanakAdi maharishis picture you have, the names I see are "sanaka, sanandana, sanAtana, and sanatkumAra". Elsewhere I have read they are "sanaka, sanandana, sanatkumAra, and sanatsujAta". Care to explain?

    ReplyDelete
  31. //கிழக்கு = ஜய-விஜயன் (பிரதான நுழைவாயில்)
    * மேற்கு = சண்டப்-பிரசண்டன்
    * தெற்கு = பத்ர-சுபத்ரன்
    * வடக்கு = தாத-விதாதன்//

    பல தெரியாத செய்திகளையும் திருப்பாவை விளக்கங்களுடன் சேர்த்து தருகின்றீர்கள் நன்றி.

    ReplyDelete
  32. //nAradA said...
    >>* சிசுபாலன்-தந்தவக்ரன்<<
    I have seen a variation of the names of this pair as "kamsan-sisupAlan"//
    இல்ல சேது சார்! தவறான தகவல் தான் அது!
    பாகவதத்தின் படி சிசுபாலன்-தந்தவக்ரன் தான்!

    //Is dantavakran the same as kamsan?//
    இல்லை!

    //or is Kamsan not at all a part of the three pairs?//
    ஆம்! கம்சன் இந்தக் கூட்டணியில் வரவே மாட்டான்!

    //Regarding the picture of sanakAdi maharishis picture you have, the names I see are "sanaka, sanandana, sanAtana, and sanatkumAra". Elsewhere I have read they are "sanaka, sanandana, sanatkumAra, and sanatsujAta". Care to explain?//

    hmmm..sanatana <> sanatsujata
    i guess the versions only affect sanatana, it seems.
    May be kumaran has something to say in this.
    Kumaran, any thoughts?

    sanatkumara=skanda endru cholvaarum undu!

    ReplyDelete
  33. //Kailashi said...
    //கிழக்கு = ஜய-விஜயன் (பிரதான நுழைவாயில்)
    * மேற்கு = சண்டப்-பிரசண்டன்
    * தெற்கு = பத்ர-சுபத்ரன்
    * வடக்கு = தாத-விதாதன்//

    பல தெரியாத செய்திகளையும் திருப்பாவை விளக்கங்களுடன் சேர்த்து தருகின்றீர்கள் நன்றி//

    வாங்க கைலாஷி ஐயா!
    ரசித்தமைக்கு நன்றி!

    உங்களை முகமாய் வைத்து ஒன்றை நம் மக்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்:
    அடியேன் இங்கு திருப்பாவைக்கு வரி-வரி விளக்கம் சொல்லவில்லை! சமய ஆராய்ச்சியும் செய்யவில்லை! நான் சொல்வது திருப்பாவைக்கு கோனார் நோட்ஸும் அன்று!

    இந்தப் பதிவுகள் அனைத்தும், திருப்பாவை என்னும் அற்புதக் கவிதை என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் மட்டுமே!


    அதான் தொடர்புடைய இன்ன பிற சேதிகளையும் சேர்த்தே சொல்கிறேன்!

    ReplyDelete
  34. அங்கே சக அடியார்கள் - காவலர்கள்! அவர்களைப் பார்த்து புன்னகை பூக்கிறாள் கோதை! அவர்கட்கு முதல் வணக்கம் வைக்கிறாள்!
    தங்களுக்குப் பறை தருவதா கண்ணன் நேற்றே சொல்லிட்டானே! இனி இவிங்கள எதுக்கு நாம மதிக்கணும்?-ன்னு அகந்தை காட்டலை!
    Nice!!!!!
    Aandal Thiruvadigale Saranam!!!!!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP